

தன்னுடைய உத்தரவுகளைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கியும் மீறியும் அலட்சியப்படுத்திவரும் ‘சகாரா பரிவார்’ தொழில் குழுமத்தை உச்ச நீதிமன்றம் மீண்டும் வன்மையாகக் கண்டித்திருக்கிறது. தனது செயல்பாடுகளுக்கான நிதி எங்கிருந்து, எப்படி பெறப்படுகிறது என்பதைத் தெரிவிப்பதை ‘சகாரா பரிவார்’ தொடர்ந்து தவிர்த்துவருகிறது; ஆகையால், கம்பெனிகளின் பதிவாளர் மூலமும் சி.பி.ஐ. மூலமும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு உத்தரவிடுவது தனக்கு இயலாத காரியமல்ல என்று உச்ச நீதிமன்றம் சமீபத்திய ஆணையில் சுட்டிக்காட்டியிருக்கிறது. மேலும், நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை ஊக்குநருமான சுப்ரதோ ராயும் வேறு சில முக்கிய நிர்வாகிகளும் இந்த வழக்கு விசாரணை முடியும்வரை வெளிநாடுகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் செல்லக் கூடாது என்ற தடை நீடிக்கிறது என்றும் உச்ச நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெளிவுபடுத்தியிருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் 1978-ல் சுப்ரதோ ராயால் தொடங்கப்பட்ட ‘சகாரா பரிவார்’ இன்றைக்கு நிதி, காப்பீடு, அடித்தளக் கட்டமைப்பு, வீடமைப்பு, செய்தி ஊடகங்கள், தகவல் தொழிநுட்பம், திரைப்படத் தயாரிப்பு, நுகர்வோர் பண்டங்களின் விற்பனை, சில்லறை விற்பனை என எல்லாத் துறைகளிலும் கோலோச்சிவருகிறது.
இந்த நிறுவனம் வெளியிட்ட, முழுதாகப் பங்குகளாக மாற்றிக் கொள்ளக்கூடிய கடன் பத்திரங்களை வாங்கியவர்கள் (ஓ.எஃப்.சி.டி.) பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, ரூ. 23,000 கோடியைக் குறுகிய காலத்தில் எப்படித் திரட்ட முடிந்தது, அந்தத் தொகை எங்கிருந்து வந்தது என்று ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது. அதற்கான தெளிவான பதிலை ‘சகாரா பரிவார்’ இன்னமும் தரவில்லை. இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை, திரைமறைவில் பல செயல்கள் நடக்கின்றன என்ற சந்தேகம் உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது. இதேபோல், ‘சகாரா பரிவார்’ கடன்
பத்திர வெளியீடு சட்ட விரோதமானது என்று அறிவித்த ‘செபி’ அமைப்புக்கும் சந்தேகம் இருக்கிறது. ஆனால், இவ்வளவு நடந்தும் இதுவரை மத்தியில் ஆளும் கூட்டணி அரசோ, எதிர்க்கட்சிகளோ இதுகுறித்து வாய் திறக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். அரசு அமைப்புகள் மட்டும் அல்ல; பல ஊடகங்களும்கூட இந்த விவகாரங்களைக் கிளற விரும்பவில்லை. ‘சகாரா பரிவார்’ அவ்வளவு ‘செல்வாக்கு’ செலுத்துகிறது.
ஊழல் என்பது அரசு அமைப்புக்குள் நடப்பது அல்ல; எங்கும் வியாபித்திருப்பது. ஓர் அமைப்பில் தவறு நடக்கிறது என்று வலுவான சந்தேகம் எழும் சூழலில், கள்ள மௌனம் சாதித்துவிட்டு, எல்லாம் முடிந்த பின் கூச்சல் போடுவதும், முஷ்டி முறுக்குவதும் யோக்கியம் அல்ல. இதற்கு மேலும் ‘சகாரா பரிவார்’ தகவல்களைத் தர மறுப்பதை அரசு வேடிக்கை பார்க்கலாகாது. இந்நிலை இப்படியே தொடர்ந்தால், இந்த நாட்டின் சட்டங்களுக்கும் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் மரியாதை ஏதும் இருக்காது. நாளை இதுவே ஒரு முன்னுதாரணமாகி எங்கோ, எப்படியோ சம்பாதித்த பணம் எல்லாம் தொழில்நிறுவனங்களுக்கு வந்து சேரக்கூடும். அதன் விளைவு படுபயங்கரமாக இருக்கும் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.