Published : 15 Aug 2016 09:47 AM
Last Updated : 15 Aug 2016 09:47 AM

உச்ச நீதிமன்றம்தான் ஒரே விசாரணை அமைப்பா?

நீதிபதிகள் இல்லாமலும் பற்றாக்குறையான கட்டமைப்பு வசதிகளாலும் செயல்படுவதற்கான ஆதார வளங்கள் கிடைப்பதில் உள்ள வரம்புகளாலும் நீதித் துறை பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கிறது.

இது போக ‘யாருக்கு அதிகம் உரிமை இருக்கிறது’ என்று இரு பிரிவினர் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் சாதாரண வழக்குகளும் சமீப காலங்களில் நீதித் துறையின் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் மதிப்புமிக்க நேரத்தையெல்லாம் அவை எடுத்துக் கொள்கின்றன.

போதுமான அரசின் பல்வேறு தீர்ப்பாயங்களும் அதிகார அமைப்புகளும் செய்துள்ள மேல்முறையீடுகள் உச்ச நீதிமன்றத்தின் முன்னால் தேங்கிக் கிடக்கின்றன. அதற்கும் மேலாக, சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளும் பெருமளவில் குவிந்துகிடக்கின்றன. இரண்டு நீதிபதிகள் அமர்வு ஒன்று, இந்தப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டியுள்ளது. ‘‘வழக்கமாகச் செய்யப்படுகிற மேல்முறையீடுகள் உச்ச நீதிமன்றம் தனது அரசியல் சாசனக் கடமையை ஆற்றுவதைத் தடுப்பதில் போய்த்தான் முடியும்” என்று அது கருத்து தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் ஏன் வழக்கமான சட்ட விசாரணைகளைத் தவிர, வேறு எதையும் செய்ய முடியாத அளவுக்கு அதிலேயே மூழ்கிவிட்டது என்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் தீர்ப்பாயங்களின் முடிவுகள், அறிவிப்புகளையும் எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற மனப்போக்கு அதில் முதலாவது. பல்வேறுபட்ட தீர்ப்பாயங்களின் ஆணைகளை எதிர்ப்பதற்கான சட்டரீதியான பிரிவு இரண்டாவது காரணம். உதாரணமாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் திருத்தச் சட்டம் 2000, மின்சார சட்டம் 2003 ஆகிய இரண்டும் தீர்ப்பாயங்களின் ஆணைகளுக்கு எதிராக, நேரடியாக உச்ச நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யும் பிரிவுகளைக் கொண்டுள்ளன. அப்படிப்பட்ட சட்டரீதியான நேரடி மேல்முறையீடுகள், நீதிமன்றத்தின் பணியைப் பாதிக்கிறதா என்பதை ஆராயுமாறு சட்ட ஆணையத்தைத் தற்போது நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினையில் ஒரு பகுதி அளவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் பொறுப்பேற்க வேண்டும். மிகவும் கவனத்தோடு கையாள வேண்டிய ஒன்று சிறப்பு விடுமுறைகளை அளிப்பதில் அவர்களுக்கு உள்ள அதிகாரம். ஆனால், நடைமுறையில் அது மிகவும் தாராளமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதனால், அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிப்பதற்கு ஒதுக்கப்படுகிற நீதிபதிகளின் எண்ணிக்கையும் நேரமும் பாதிக்கப்படுவதாக இது மாறுகிறது. அரசியல் சாசனத்தை விளக்குவது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சில வழக்குகளில், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு சமீபத்தில் தீர்ப்புகளை வழங்கியது வருத்தத்துக் குரியது. அத்தகைய முக்கியமான பிரச்சினைகளில் கட்டாயம் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் தீர்ப்புகள் வழங்க வேண்டும்.

ஆண்களின் தன்பாலின உறவு குற்றம் அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் திரும்பப் பெற்றதும் குற்றவியல் அவதூறு வழக்கு பற்றிய தீர்ப்பை உயர்த்திப்பிடித்ததும் இதுபோன்ற இரண்டு உதாரணங்கள். பல்வேறு தீர்ப்பாயங்களை அமைப்பதற்காக வெளியாகும் சட்டங்களில் உள்ள பிரிவுகளால் உயர் நீதிமன்றங்களின் அதிகார எல்லை பாதிக்கப்படுவது பற்றியும் நீதிமன்றம் கவலை கொள்கிறது. அத்தகைய சட்டப் பிரிவுகள் மேல்முறையீடு செய்வதற்கான முதல் நீதிமன்றமாகவே உச்ச நீதிமன்றத்தை ஆக்கிவிடுகின்றன.

சட்ட ஆணையம் வெளியிட்ட தனது 229-வது அறிக்கையில், அரசியல் சாசன அமர்வு நீதிமன்றத்தை டெல்லியில் அமைத்துவிடலாம், சட்டத்தை விளக்கும் அமர்வு நீதிமன்றங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைத்துவிடலாம் என்று செய்துள்ளது. இந்தத் தீர்வு பற்றிய இறுதியான முடிவு எப்படிப்பட்டதாகவும் இருக்கட்டும். ஆனால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய அரசியல் சாசன நீதிமன்றமாக இருக்கிற அதேநேரத்தில், எல்லாவிதமான தகராறுகளுக்கும் இறுதியான நியாயஸ்தலமாகவும் உச்ச நீதிமன்றம் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பார்களா என்பது சந்தேகமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x