

குமரி மாவட்டத்தில், குளச்சலுக்கு அருகில் இனையம் பகுதியில் புதிய துறைமுகம் கட்டுவதற்கான அனுமதியை மத்திய அமைச்சரவை அளித்திருக்கிறது. அரசுத் தரப்பிலிருந்து இது தொடர்பாக வெளிவரும் தகவல்கள் பிரம்மாண்ட வலைப்பின்னலாக விரிகின்றன.
கொழும்பு துறைமுகத்துக்குச் சவால் விடும் வகையில் இது அமையும் என்கிறார்கள். இனையம் பகுதியில் கடலில் நீரின் ஆழம் சராசரியாக 20 மீட்டர் (62 அடி). கிழக்கு - மேற்கு சர்வதேசக் கடல் வாணிப வழிக்கு மிக நெருக்கமாக, கேரளத்தின் விழிஞ்சம் கடற்கரைக்கு 40 கி.மீ. தெற்கில் இந்தத் துறைமுகத்தைக் கட்ட அரசு திட்டமிட்டிருக்கிறது. ஆண்டுக்கு 15 லட்சம் 20 அடி நீள சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதாக இத்துறைமுகத்தின் திறன் இருக்கும். 2020-ல் 7 லட்சம் சரக்குப் பெட்டகங்களும் 2030-ல் 39 லட்சம் சரக்குப் பெட்டகங்களும் கையாளும் துறைமுகமாக இது வளரும். துறைமுகம் செயல்படத் தொடங்கினால் 80 லட்சம் டன் அளவுக்கு சரக்குப் பரிவர்த்தனை நடக்கும் என்றெல்லாம் சொல்கிறார் கள். சூயஸ் கால்வாயிலிருந்து கிழக்காசிய நாடுகளுக்குச் செல்லும் சரக்குக் கப்பல்கள், இந்தியாவுக்கான சரக்கை இறக்கிச் செல்லும் இடைவழி நுழைவாயிலாக இது அமையும் என்று அரசு யூகிக்கிறது.
இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, வணிக உலகில் விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. இனையம் துறைமுகத்தின் ஒட்டுமொத்தப் பணிகளை மேற்கொள்ள தொடக்க காலத்திலேயே ரூ.27,000 கோடி தேவைப்படும் அளவுக்கு விரிவான திட்டம் இது. இந்தத் துறைமுகத்துக்கு அருகிலேயே விழிஞ்சத்தில் அதானி குழுமத்தின் துறைமுகம் அமைகிறது. அத்துடன் கொச்சி துறைமுகத்துக்கு அருகிலேயே வல்லார்பாடத்தில் இன்னொரு துறைமுகமும் இருக்கிறது. இதுவும் சர்வதேசக் கடல் வாணிபத்தில் சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் இடைநிலைத் துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது. உலக வர்த்தகம் மந்தமாகவும் சரக்குப் பெட்டகப் போக்குவரத்து இப்போதைக்குப் பெருமளவு அதிகரிப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையிலும், இவ்வளவு பெரிய திட்டத்தைச் செயலாக்க வேண்டுமா; அது வெற்றிகரமாக இயங்குமா என்பது அந்த விவாதத்தின் மையப் புள்ளிகளில் ஒன்று.
எதிர்காலத்தில் கடல் வாணிபம் பல மடங்கு பெருகலாம்; மேலும், வர்த்தக நோக்கம் மட்டுமல்லாமல் ராணுவ நோக்கமும் இந்தத் துறைமுகக் கட்டுமானத்தின் பின்னணியில் இருக்கும் என்று தோன்றுகிறது. ஆகையால், இப்படியான விவாதங்களில் எப்படி வேண்டுமானாலும் வாதங்களை வளைக்கலாம். நம்முடைய பிரதான கவலை இதுவல்ல; தமிழகத்தின் உயிரோட்டமான கடற்கரைப் பகுதியில் இப்படி ஒரு திட்டத்தை யோசிக்கும்போது, அங்குள்ள கடற்கரை மக்களின் அன்றாட வாழ்வாதாரம், அவர்களுடைய எதிர்காலம், இத்திட்டம் தொடர்பான அவர்களுடைய அச்சம் ஆகியவை எந்த அளவுக்கு அக்கறையோடு அணுகப்படுகின்றன என்பது முக்கியமானது.
கடலை நம்பி வாழும் ஆயிரம் கடலோடிக் குடும்பங்களின் இன்றைய வாழ்க்கைச் சூழலை, அவர்களுடைய இன்றைய வாழிடங்களை, குளச்சல், இனையத்தின் இன்றைய வரைபடங்களை முற்றிலுமாக இத்திட்டம் மாற்றும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த அச்சம் அர்த்தமற்றது அல்ல. ஒரு வளர்ச்சித் திட்டத்தை யோசிக்கும்போது, எந்தப் பகுதியில் அது திட்டமிடப்படுகிறதோ அந்த மண்ணின் மைந்தர்களின் அக்கறைகள் காது கொடுத்துக் கேட்கப்பட வேண்டும். அவர்களின் வாழ்வாதாரமும் எதிர்காலமும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தியாவில் பெரும்பாலும் இது நடப்பதில்லை. இனையமும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுவிடக் கூடாது!