

சென்னை நகரின் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில், தன்னுடைய மொபெட்டை நிதானமாக ஓட்டிவருகிறார் அந்த முதியவர். கண்ணிமைக்கும் நேரத்தில், பின்புறமிருந்து வரும் ஒரு மோட்டார் சைக்கிள் முதியவரின் மொபெட் மீது மோதுகிறது. இரு வாகனங்களும் சாலையில் சிராய்த்துச்சென்று சாய்கின்றன. அதிர்ச்சியில் ஸ்தம்பிக்கும் பொதுமக்கள் உதவ ஓடும் முன், அடுத்தடுத்துப் பாய்கின்றன மூன்று மோட்டார் சைக்கிள்கள். இதனிடையே முதியவரின் மொபெட் மீது மோதிய மோட்டார் சைக்கிள் சுதாகரித்து மீண்டும் பாய்கிறது. ரத்தம் வழிய எழும் அந்தப் பெரியவர் மெல்ல சாலையோரத்தில் அமர்கிறார். மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச்சென்ற அந்த முரட்டு இளைஞர்களைச் சபித்துக்கொண்டே கடக்கிறார்கள் பொதுமக்கள்.
சென்னைவாசிகளுக்கு அன்றாட நிகழ்வாகிவிட்டது இது. ‘ஸ்ட்ரீட் ரேஸ்’ என்று அழைக்கப்படும் காட்டுமிராண்டிப் பந்தயத்தைப் பார்த்து மிரள்வது. போட்டிப் பந்தயங்களோ, வீரசாகச விளையாட்டுகளோ தவறு அல்ல; மனித உயிருக்கு எந்த அளவுக்கு நாம் மதிப்பளிக்கிறோம் என்பதும் பணயம் வைக்கப்படுவது யாருடைய உயிர் என்பதும் முக்கியம். “ஹெல்மெட் அணியக் கூடாது; மோட்டார் சைக்கிளின் சைடு ஸ்டாண்டைப் போட்டவாறே வண்டியை ஓட்ட வேண்டும்; மெயின் ஸ்டாண்டை சாலையில் உரசி தீப்பொறியை உண்டாக்க வேண்டும்; எந்தச் சூழலிலும் பிரேக்கைப் பிடிக்கக் கூடாது; சிக்னலில் வண்டியை நிறுத்தக் கூடாது” என்று முழுக்க முழுக்க விதிமீறல்களையே விதிமுறைகளாகக் கொண்டு மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் நடத்தப்படும் இந்த வண்டிச் சூதாட்டத்தை எப்படிப் பந்தயமாகவோ சாகசமாகவோ அனுமதிக்க முடியும்?
சென்னையில் ஒருகாலத்தில் அபாயகரமான ஆட்டோ பந்தயங்கள் நடந்தன. பொதுமக்களின் எதிர்ப்புக்குப் பின்னர் காவல் துறை ஆட்டோ பந்தயத்தை முற்றிலுமாக அடக்கியது. கடந்த ஆண்டு சிறுமி சைலஜாவின் மரணத்துக்குப் பின், மோட்டார் சைக்கிள் பந்தயங்களுக்குப் பொதுமக்கள் கடும் எதிர்வினையாற்றினாலும் காவல் துறையால் இந்தப் பந்தயங்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. காரணம், ஆட்டோ பந்தயங்களில் ஈடுபட்டவர்கள் வசதியற்ற ஆட்டோ ஓட்டுநர்கள்; மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடுபவர்கள் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள்.
இந்த ஆண்டு இதுவரை இந்தப் பந்தயங்களில் ஒன்பது பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இது தொடர்பாக 163 பேர் மீது வழக்குப் பதிந்து, 94 பேரைக் கைதுசெய்திருக்கிறது காவல் துறை. ஆனால், “இப்படிக் கைதுசெய்யப்படுபவர்களை ஓரிரவுகூட சிறையில் வைக்க முடியாது; செல்வாக்கைப் பயன்படுத்தி வெளியே வந்துவிடுவார்கள். மேலும், இவர்களைத் தண்டிக்க வலுவான சட்டங்களும் இல்லை” என்கிறார்கள் காவல் துறையினர்.
முதல்வரே, உங்கள் கையில்தான் காவல் துறையும் இருக்கிறது; சட்டமியற்றும் மன்றமும் இருக்கிறது!