

உலகின் முன் கம்பீரமாக நிற்கக் கிடைத்த மகத்தான வாய்ப்பை நழுவ விட்டதுடன் தேசத்தைப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கித் தள்ளியிருக்கிறது தன்பாலின உறவு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
டெல்லி உயர் நீதிமன்றம் 2009-ல் அளித்த, “வயதுவந்த இருவர் பாலுறவில் ஈடுபடும் விருப்புரிமையை கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது” என்ற தீர்ப்பை ரத்துசெய்து, “சமூகத்தில் தன்பாலின உறவாளர்கள் மிகச் சிறுபான்மையினர். ஏனைய நாடுகளின் நீதிமன்றத் தீர்ப்புகள் அடிப்படையில் இந்தியச் சட்டத்தை அணுக முடியாது. 377 சட்டப் பிரிவு பாரபட்சமற்றது. அதை மாற்றும் அதிகாரம் நாடாளுமன்ற அதிகாரத்துக்கு உட்பட்டது” என்று அளித்த தீர்ப்பின் மூலம், மனித உரிமைகளுக்கும் சுதந்திர மதிப்பீடுகளுக்கும் பலத்த அடியைக் கொடுத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
முன்பு டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அரசும்கூட ஒப்புக்கொண்டது. அதனால்தான் இந்த வழக்கில் எதிர்த்து அது வழக்காடவில்லை. இப்போது அரசை நோக்கிப் பந்தை அனுப்பி, ‘எல்.ஜி.பி.டி’ என்றழைக்கப்படும் பெண்-தன்பாலின உறவாளர்கள், ஆண்-தன்பாலின உறவாளர்கள், இருபாலின உறவாளர்கள், திருநங்கைகளின் வாழ்வுரிமையை உச்ச நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்தியா போல இப்படி ஒரு முடிவைச் சமீபத்தில் எடுத்த இன்னொரு நாடு ஆஸ்திரேலியா. தலைநகர் கான்பெராவில் தன்பாலினத் திருமணங்களை அனுமதித்து இயற்றப்பட்ட உள்ளூர் சட்டத்தை ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் ரத்துசெய்திருக்கிறது. “இந்தச் சட்டம் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவையும் பாதிக்கக்கூடியது; திருமணம் என்கிற விஷயத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும்” என்றும் குறிப்பிட்டு, இந்தியாவைப் போலவே நாடாளுமன்றத்தை நோக்கிக் கைகாட்டியிருக்கிறது.
நகைமுரண் என்னவென்றால், இங்கிலாந்து போட்ட காலனியப் பாதையை இந்த நாடுகள் இன்னமும் இப்படிப் பேணிப் பாதுகாக்கும் இதே காலகட்டத்தில்தான் - கடந்த வாரத்தில் - இங்கிலாந்திலும் வேல்ஸிலும் மார்ச் 2014 முதல் தன்பாலினத் திருமணங்களுக்கு அனுமதி அளித்து, “திருமணத்தின் அடுத்தகட்டப் பரிணாமம் இது” என்று அறிவித்திருக்கிறது இங்கிலாந்து.
சர்வதேச அளவில் தன்பாலின உறவைக் குற்றமாகக் கருதும் 78 நாடுகளின் பட்டியலோடு, தன்பாலினத் திருமணங்களையே குற்றமாகக் கருதாத நாடுகளின் பட்டியலில் 18 ஆப்பிரிக்க நாடுகளும் 20 ஆசிய நாடுகளும் இருப்பது பிரச்சினையின் மையத்தைத் தெளிவாக உணர்த்துகிறது: கல்வி வளர்ச்சியோ பொருளாதார வளர்ச்சியோ மட்டும் ஒரு சமூகத்தின் மன முதிர்ச்சியைத் தீர்மானிப்பதில்லை.
மனித உடலின் இயற்கையான இயல்பைப் புரிந்துகொள்வதற்குப் பதில், கலாச்சார ஒழுக்க நெறிகளின் பெயரால், “இயற்கைக்கு மாறான உறவு” எனத் தன்பாலின உறவை நிராகரிப்பவர்கள், கூடவே அறிவியலையும் மனிதத்தையும் சேர்த்தே நிராகரிக்கிறார்கள். மதம், இனம், பாலினம், விருப்புவெறுப்புகள்… எதன் பெயராலும் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டாலும் சரி, சிறுபான்மையினரின் உரிமைகளை ஒடுக்கும் ஒரு நாடும் சமூகமும் ஒருபோதும் தலைநிமிர்ந்து நடக்க முடியாது!