வீழ்த்தியது விலைவாசி மட்டுமல்ல!

வீழ்த்தியது விலைவாசி மட்டுமல்ல!
Updated on
2 min read

“விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதால் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், டெல்லி ஆகிய நான்கு மாநில சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்களில் தோற்றுவிட்டோம்” என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருக்கிறார். “ஆம்ஆத்மி கட்சி மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு தேர்தலை அணுகியதால், இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. நாங்களும் அவர்களிடம் இந்தப் பாடத்தைப் படிப்போம்” என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேட்டி அளித்தார்.

விலைவாசி உயர்வு மட்டுமல்ல, தரமான கல்வி, சுகாதாரத்துக்கு அதிகம் செலவிட்டாக வேண்டிய நிலை, நிரந்தர வேலைவாய்ப்பு அருகிவிட்ட சூழல், நடுத்தர, சிறு, குறு தொழில்களுக்கு வெளிநாட்டு இறக்குமதிகளால் ஏற்பட்டிருக்கும் கடும் போட்டிகள், விவசாயத்தில் அரசுகளின் முதலீடு குறைந்ததல்லாமல் பாசன நீர், விவசாய வேலைக்கு ஆள்கள் போன்றவற்றில் ஏற்பட்டுவரும் பற்றாக்குறை, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற வணிகர்களின் அச்சம் என்று எல்லாமும் சேர்ந்து இந்தத் தோல்வியை அளித்திருக்கின்றன.

விலைவாசியைக் கட்டுப்படுத்தும் கடமை மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் வருகின்றன என்பது உண்மையே. ஆனால் டீசல், பெட்ரோல் விலையை, சர்வதேசச் சந்தையில் உயரும்போதெல்லாம் உயர்த்திக்கொண்டே இருந்தால், அவசியப் பண்டங்களின் விலை உயர்வதை மாநில அரசுகளால் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?

ஏழைகளும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்களும் வேலைவாய்ப்புக்கு மத்திய, மாநில அரசுகளைத்தான் நம்பியிருக்கின்றனர். அரசின் தொழிற்கொள்கை, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கும் பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் சாதகமாக இருக்கிறது. அவர்களுடைய லாபத்துக்காக ‘சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்’ உருவாக்கப்பட்டு அதிக வரி விதிப்பு ஏதும் இல்லாமல் பொருள்களை விற்கவும், ஏற்றுமதி செய்யவும் அனுமதிக்கப்படுகிறது. சலுகை விலையில் நிலம், நீர், மின்சாரம், குறைந்த வட்டியில் கடன் ஆகியவற்றைத்தந்து, ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிக்க அனுமதியும் தருவதால், வேலைகிடைத்தாலும் அது நிரந்தரம் இல்லை என்றாகிறது.

அரசின் செலவைக் குறைக்கும் முயற்சியாக மத்திய, மாநில அரசுகள் அரசு வேலைகளுக்கு ஆள் எடுப்பதையே ஆணை மூலம் தடைசெய்து விட்டன. நஷ்டம் ஏற்படுத்தும் அரசு நிறுவனங்கள் சீரமைக்கப்படுவதற்குப் பதில் மூடப்படுகின்றன. லாபம் ஈட்டும் நிறுவனங்களின் பங்குகளைச் சந்தையில் விற்று அரசின் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்படுகிறது! அரசின் கனிம வளங்களை அரசுத்துறை நிறுவனங்கள் அகழ்ந்து தொழில் வளர்ச்சி காணாமல், தனியாருக்குக் குத்தகை அடிப்படையில் அரசு விடுகிறது. மின்சார உற்பத்திக்கு மிகவும் அவசியமான நிலக்கரித் துறையில் மத்திய அரசு செய்த குளறுபடிகள், ஊழல்கள் காரணமாகக் கடுமையான மின்வெட்டை நாடு சந்திக்க நேர்ந்தது. அதனால், உற்பத்தி இழப்பு, வேலை யிழப்பு மட்டும் அல்ல, கடும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளன.

இந்தத் தவறுகளையெல்லாம் வெறும் “விலைவாசி உயர்வால் தோற்றோம்” என்று ஒற்றை வரியில் மூடிமறைக்கப் பார்ப்பது நல்லதல்ல. தவறுகளை அடுக்கடுக்காகச் செய்துவிட்டு, பாவமன்னிப்பு கோருவதில் பலனில்லை. இந்தத் தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ள வேண்டும். பாவமன்னிப்புகள் மட்டுமே பரிகாரம் ஆகிவிடாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in