

இந்திய ரிசர்வ் வங்கி 2017-18-ம் நிதியாண்டுக்கான பணக் கொள்கை மறு ஆய்வுக் கூட்டத்தை நடத்திமுடித்திருக்கிறது. வட்டி வீதம், ரொக்கக் கையிருப்பு போன்றவற்றில் எந்தவித மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் பொருளாதார நடவடிக்கைகளைச் சற்றே முடுக்கிவிட எடுத்த நடவடிக்கைகளை இம்முறை கையாளவில்லை. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், வங்கிகளிடம் உபரியாக இருக்கும் நிதியை ரிசர்வ் வங்கி வாங்குவதற்கான, ‘ரிவர்ஸ் ரெப்போ ரேட்’ வட்டியை 5.75%-லிருந்து 6% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, கையிருப்பில் உள்ள பெருந்தொகைகளைப் பலரும் வங்கியில் முதலீடு செய்ததால், வங்கிகளிடம் நிதிக் கையிருப்பு உபரியாகிவிட்டது. இந்த உபரி நிதியை அப்படியே உறிஞ்சி எடுக்கத்தான் ‘ரிவர்ஸ் ரெப்போ ரேட்’ உயர்த்தப்பட்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில் பணவீக்கம் 5% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் 4% ஆகப் பராமரிக்கப்பட வேண்டும் என்ற இலக்கை அடுத்த ஆண்டில்கூட எட்ட முடியாமல் போகலாம் என்று ரிசர்வ் வங்கி அஞ்சுகிறது. எனினும், பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று நம்புகிறது. ‘நிகர மதிப்புக் கூட்டப்பட்ட’ பொருளாதார வளர்ச்சி வீதம் இந்த ஆண்டு 7.4% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2016-17-ல் இது 6.7% ஆக இருந்தது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் மத்திய அரசுக்கு விடுத்துள்ள நான்கு எச்சரிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. முதலாவது, வங்கிகளின் வாராக் கடன் பிரச்சினையைக் கவனித்து, அதை முதலில் தீர்க்க வேண்டும் என்பது. இம்மாத நடுப் பகுதியில் திருத்த நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்கும். இரண்டாவதாக, இனி வரும் நாட்களில் தொழில் மற்றும் சேவைத் துறைகளிலிருந்து கடன் கோரிக்கைகள் அதிகரிக்கும். அரசு வங்கிகளின் மறு முதலீட்டுக்காக மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.10,000 கோடி போதாது. மூன்றாவதாக, வங்கிகள் வட்டி வீதத்தைக் குறைத்திருந்தாலும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு அளிக்கும் வட்டியைக் குறைத்தால்தான் கடன்கள் மீதான வட்டியை மேலும் குறைக்க முடியும். நான்காவதாக, உத்தர பிரதேசத்தில் மேற்கொண்டதைப் போல விவசாயிகளின் கடன்களை ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடிசெய்வது போன்ற நடவடிக்கைகள் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல.
கடன் தள்ளுபடியால் வங்கிகளின் லாபமும் வருவாயும் குறையும் என்பதால் வங்கிகளின் பங்குகளை வாங்குவோரும் தயங்குவர். ஏற்கெனவே முதலீடு செய்தவர்கள் அந்த முதலீடுகளை விலக்கிக்கொண்டு லாபம் தரும் பிற துறைகளில் முதலீடு செய்வர். வங்கித் துறைக்கு இது நல்லதல்ல!