Published : 10 Oct 2013 09:55 AM
Last Updated : 10 Oct 2013 09:55 AM

பூங்கொத்துகள் அருந்ததி!

ரூ1.10 லட்சம் கோடி சந்தை மதிப்புடன், 15 ஆயிரத்துச் சொச்சம் கிளைகளோடு நாடு முழுவதும் பரவியுள்ள இருநூற்றாண்டுப் பாரம்பரியம்மிக்க பாரத ஸ்டேட் வங்கியின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார் அருந்ததி பட்டாச்சார்யா. இந்திரா நூயி ‘பெப்ஸி அண்டு கோ’வின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்ததில் தொடங்கி, பெருநிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை அனாயாசமாகக் கையாளும் பெண்களை இந்தியா பார்க்கிறது. ‘அலகாபாத் வங்கி’யின் தலைவர் சுபலட்சுமி பான்சே, ‘பேங்க் ஆஃப் இந்தியா’வின் தலைவர் விஜயலட்சுமி ஆர். ஐயர், ‘யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா’வின் தலைவர் அர்ச்சனா பார்கவா, ‘ஐ.சி.சி.ஐ. வங்கி’யின் தலைவர் சந்தா கோச்சார், ‘ஆக்சிஸ் வங்கி’யின் தலைவர் சிகா சர்மா என இந்தியாவின் முக்கியமான வங்கிகளின் தலைமைப் பொறுப்பை ஏற்கெனவே பெண்களே அலங்கரிக்கின்றனர். அந்த வகையில், கால தாமதம் என்றாலும், பெண்களின் யுகத்துக்கேற்ற சரியான தலைமையைத் தேர்தெடுத்திருக்கிறது ஸ்டேட் வங்கி.

கடந்த 1977-ல் ஸ்டேட் வங்கியில் பணிக்குச் சேர்ந்த அருந்ததி, படிப்படி யாக முன்னேறி இந்த உயரிய நிலையை அடைந்திருக்கிறார். வங்கித் துறையும் நாட்டின் பொருளாதாரமும் நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும் சூழலில், அருந்ததிக்குப் பல சவால்கள் காத்திருக்கின்றன. உடனடிச் சவால்... வங்கியின் மொத்தக் கடன் அளவில் 5% ஆக இருக்கும் வாராக் கடன்கள். இப்படிப்பட்ட சூழலில், சாமானிய வாடிக்கையாளர்களுக்கான கடன்களைக் குறைப்பதுதான் இதுவரையிலான வங்கியாளர்களின் அணுகுமுறை. ‘நம் நாட்டின் பணக்காரர்களைக் காட்டிலும் ஏழைகள் நாணயமானவர்கள்; ஏழைகளை நோக்கிச் செல்ல வேண்டும்; அதில்தான் இந்திய வங்கிகளின் உண்மையான வளர்ச்சி உள்ளது’ என்று சமீபத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியது இங்கு நினைவுகூரத்தக்கது. அருந்ததி மாற்றி யோசிக்க வேண்டும்.

இந்தியப் பின்னணியில் ஸ்டேட் வங்கி ஒரு பன்னாட்டு வங்கியின் செயல்பாட்டோடு ஒப்பிடத்தக்க வெறும் நிதி அலுவலகம் அல்ல. மாறாக, இந்திய வாழ்வின் ஒரு பகுதி. எளிய மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் வல்லமை அதற்கு உண்டு. சமீப காலமாக அதன் பல நடவடிக்கைகள் லாப நோக்கை மையமாகக் கொண்ட அமைப்பாக அதை மாற்றிவருகின்றன. அருந்ததி இந்தச் சூழலை மாற்ற வேண்டும். முன்னதாக, ‘எஸ்.பி.ஐ. கேப்ஸ்’தலைவராக இருந்தபோது, பேறுகால விடுப்பு உள்ளிட்ட விஷயங்களில், ஊழியர் நலன் சார்ந்து மனிதாபிமான மாற்றங்களைக் கொண்டுவந்து உற்பத்தியைப் பெருக்கிய அனுபவம் அருந்ததிக்கு உண்டு. இப்போதும் கணவன் - மனைவி இருவரும் ஒரே ஊரில் பணியாற்றத்தக்க வகையில் பணிமாறுதல் முறையில் மாற்றம் கொண்டுவரும் கோரிக்கையைப் பதவியேற்ற முதல் நாளே ஸ்டேட் வங்கியில் கையில் எடுத்திருக்கிறார். இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய தேவை மனிதத்தன்மை பொருந்திய வளர்ச்சிதான். அருந்ததி அதை நோக்கி அடியெடுத்துவைக்கட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x