அக்னிப் பரீட்சையில் வெற்றி!

அக்னிப் பரீட்சையில் வெற்றி!
Updated on
1 min read

அணு ஆயுதத்தைச் சுமந்துகொண்டு நீண்ட தொலைவுக்குப் பறந்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாக்கி அழிக்கவல்ல ‘அக்னி-5’ ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக முடிந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’ என்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலும் சமீபத்தில் கடற்படையில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. ‘அக்னி-5’ ஏவுகணையும் ‘அரிஹந்த்’ அணு நீர்மூழ்கிக் கப்பலும் இந்தியாவுக்கு வலுவான, உலகத் தரம்வாய்ந்த தாக்குதல் திறனை அளிக்க வல்லவை.

இந்தியா மீது எந்த நாடாவது அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால் பதிலுக்கு அந்நாட்டின் மீது தாக்குதல் தொடுக்க இந்த இரண்டும் பெரிதும் கைகொடுக்கும். “நாமாக முதலில் எந்த நாட்டின் மீதும் அணு ஆயுதத் தாக்குதலைத் தொடுக்க மாட்டோம்” என்ற உறுதிமொழியுடன் செயல்படும் நமக்கு, எதிரி தாக்கினால், அதற்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தரமான, வலுவான, நம்பகமான ஆயுதங்கள் அவசியம். அந்தத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ளும் பயணத்தில் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கிறோம். ஒடிஷாவின் தீவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ராணுவ லாரி ஏவுமேடையிலிருந்து ‘அக்னி-5’ ஏவப்பட்டது. அது பொம்மை இலக்கைத் தேடிச் சென்று, ஆஸ்திரேலியக் கடலுக்கு அருகில் தாக்கி அழித்தது. ‘அக்னி-5’ ஏவுகணையைப் பொறுத்தவரை இது 4-வது சோதனையாகும். ராணுவ லாரியின் ஏவுதளத்திலிருந்து நடத்தப்படுவதில் இது இரண்டாவது சோதனை. நான்கு சோதனைகளிலும் தேர்ச்சிபெற்றுவிட்டதால், இது இனி இந்திய அணு ஆயுதங்களை ஏவும் ஏவுகணைகள் வரிசையில் இடம்பெறும். ‘அக்னி’ ரக ஏவுகணைகளின் இலக்கு தொலைவு 700 கி.மீ. முதல் 4,000 கி.மீ. வரை. ‘பிருத்வி-2’ ரக ஏவுகணையும் நம்மிடம் தயாராக உள்ளது. எனினும், கண்டுபிடிப்புகளில் நாம் பயணிக்க வேண்டிய தொலைவு மிகமிக அதிகம். ஓர் உதாரணம், நிலத்திலிருந்து ஏவக்கூடிய ‘நிர்பய்’ரக ஏவுகணை சோதனை சமீபத்தில் தோல்வியில் முடிந்தது. இம்முயற்சி தோல்வியடைவது இது நான்காவது முறை.

அணு ஆயுதத் தாக்குதல் நடந்தால், திருப்பித் தாக்கும் திறன் மட்டும் நமக்கு இருந்தால் போதாது, நம்முடைய ராணுவம் நவீனமானதாகவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும். தரைப் படை, விமானப் படை, கடல் படை மூன்றுமே நவீனமயமாகக் காத்துக் கிடக்கின்றன. எந்த நாட்டின் மீதும் முதலில் தாக்க மாட்டோம் என்று நாம் சுயஉறுதி எடுத்துக்கொண்டிருந்தாலும், படைகளுக்கான தளவாடங்களையும் ஆயுதங்களையும் எப்போதும் தயாராகவிருக்கும் சூழலுக்கு ஏற்ப வைத்திருத்தல் அவசியம். அதேசமயம், நம்முடைய தேவைக்குப் பெருமளவில் வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருப்பதிலும் அர்த்தம் இல்லை. ஆகையால், புதிய கண்டுபிடிப்புகளும் உள்நாட்டு உற்பத்தியும் இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு நிறையவே தேவைப்படுகின்றன. தேவைகள் பூர்த்தியாகட்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in