அரசியல் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்!
தேர்தல் செலவுகளுக்காக அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கை களைத் தொடங்கியிருக்கிறது அரசு. அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பதில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க முயல்வதுபோல இருக்கின்றன, நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் வார்த்தைகள். ஆனால், செயல்பாடுகள் தவறான திசையிலேயே போகின்றன.
அரசியல் கட்சிகள், தனிநபர்களிடமிருந்து ரொக்கமாக ரூ.2,000 க்கும் மேல் நன்கொடை வாங்கக் கூடாது என்று தற்போது உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது. எனினும், பெரு நிறுவனங்கள் தங்களின் நலன்களைக் காத்துக் கொள்வதற்காகக் கட்சிகளுக்குப் பெரும் தொகைகளை நன்கொடையாகத் தருவதை இது தடுக்காது. கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் நன்கொடைகள் வழங்குவதையும் இது தடுக்காது. தங்களுக்குத் தெரிந்தவர்களின் பெயர்களைப் போட்டு ‘ரொக்கமாக நன்கொடை அளித்தவர்கள்’ என்கிற பட்டியல்களை இனி அரசியல் கட்சிகள் தயார்செய்தால் போதும். மேலும், நிதியமைச்சர் அறிவித்துள்ள நடவடிக்கைகள் கட்சிகளின் சட்ட விரோத நன்கொடைகளையும் தடுக்காது. கட்சிகளுக்கு நன்கொடைகள் கொடுத்தவர்கள் பற்றிய தகவல்களில் வெளிப்படைத்தன்மையையும் அவை கொண்டுவராது. அப்படியென்றால், இந்நடவடிக்கையை எப்படிப் பார்ப்பது?
தாங்கள் பெறுகிற நன்கொடைகளுக்குப் பதில் சொல்ல கடமைப் பட்டவர்களாக அரசியல் கட்சிகளை மாற்ற வேண்டும் என்று நிதியமைச்சர் உண்மையாகவே நினைத்தால், கட்சிகள் நன்கொடை கள் என்ற வகையில் வாங்கும் தொகையின் அளவுக்கு ஓர் உச்சவரம்பு வைக்க வேண்டும். அரசியல் கட்சிகள் தங்களுக்கு வருகிற நன்கொடைகளின் பகுதியைத்தான் வருமானம் என்று அறிவிக்கின்றன. தேர்தல் சமயத்தில் மக்களைத் திரட்டும்போது அரசியல் கட்சிகளால் பெருமளவு பணம் செலவழிக்கப்படுகிறது. அது தேர்தல் ஆணையம், வருமான வரித் துறையின் கண்காணிப்புக்குள் வருவதேயில்லை.
அரசியல் கட்சிகளுக்குக் காசோலை, மின்னணு பணப் பரிவர்த்தனைகள் மூலமாகப் பணம் தருவதற்குப் பதிலாக, வங்கிகள் மூலம் ‘தேர்தல் பத்திரங்கள்’ வழங்கலாம் என்று ஒரு யோசனை முன்வைக்கப்படுகிறது. யார் என்று தெரியாமல் பணம் கொடுக்க வேண்டும் என்று விரும்புவோர்களுக்கு வேண்டுமானால் இது உதவலாம். வேறு எந்தப் பயனும் இல்லை. வரி விதிக்கும் அமைப்புகளிடமும் பொதுமக்களிடமும் அத்தகைய ஒளிவுமறைவை நன்கொடையாளர்கள் கடைப்பிடிக்கக் கூடாது. அப்படி இருந்தால்தான், பெருநிறுவனங்கள் போன்ற அமைப்புகள் அரசியல் கட்சிகளுக்குப் பணம் அளிப்பதன் பின்னுள்ள அரசியல் மக்களுக்குத் தெரியவரும்!
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்சிகள் தங்களின் வருமான வரிக் கணக்கை ஒப்படைக்க வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்துகிறது பட்ஜெட். ஆனால், அதையும் மீறித் தவறு செய்பவர்களைத் தண்டிப்பதற்குப் போதுமான சட்டப் பிரிவுகள் நம்மிடம் இல்லை. சட்ட விரோதமான முறையில், கட்சிகள் நிதி சேகரிப்பதைத் தடுக்க முனைவதுபோலக் காட்டிக்கொள்ளும் அரசின் முயற்சிகள், பிரச்சினையின் உண்மையான வேரைத் தொடவில்லை. அரசியல் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்கு இத்தகைய அரைகுறை நடவடிக்கைகள் போதாது!
