

குஜராத் சட்டப்பேரவைக்கு 2002, 2007 மற்றும் 2012 தேர்தல்களில் போட்டியிட்ட நரேந்திர மோடி, தனக்குத் திருமணம் நடந்ததா இல்லையா என்ற தகவலை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை. பா.ஜ.க-வின் சார்பில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருக்கும் நிலையில், யசோதா பென் தன்னுடைய மனைவி என்று முதல்முறையாகத் தெரிவித்திருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் சேர்ந்த மோடி, அந்த வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்வதற்காக மணவாழ்க்கையைத் துறப்பது என்று முடிவெடுத்திருக்கிறார். மோடியின் ஆலோசனையின்படி யசோதா பென் தன்னுடைய படிப்பைத் தொடர்ந்து, பிறகு கிராமத்தில் ஆசிரியை யாகி, இப்போது ஓய்வும் பெற்றுவிட்டார்.
மணவாழ்க்கை தொடராது என்ற நிலையில், தன்னுடைய சகோதரர்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
மேற்கத்திய நாடுகளைப் போல இந்தியாவில் அரசியல் தலைவர் களின் சொந்த வாழ்க்கைபற்றிய தகவல்கள் வாக்காளர்கள் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால், அரசியல் தலைவரின் குடும்பத்தவருடைய குற்றச் செயல்கள்குறித்துத் தெரியவந்தால் வாக்காளர்கள் அதை ஆதரிப்பதில்லை. இந்த விவகாரத்தில், மோடி தனக்குத் திருமணம் ஆன தகவலை இத்தனை ஆண்டுகள் ஏன் மறைத்துவந்தார் என்ற கேள்வி எழுகிறது. அரசியல் தலைவர்களின் மனைவியர் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பது சகஜமான இந்தக் காலத்தில், எவர் கண்ணிலும் படாமல் தனது மனைவியை வைத்திருக்க மோடி முயன்றிருப்பது அவருடைய பழமையான எண்ணப் போக்கையே பறைசாற்றுகிறது.
தன்னுடைய அந்தரங்க வாழ்க்கையைப் பற்றிய மிக முக்கியமான தகவலையே வெளியுலகுக்குத் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் மறைத்தவர்தான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்ற உண்மை, அவருடைய நம்பகத்தன்மைகுறித்தே சந்தேகப்படவைக்கிறது. பழமை வாதத்தைப் பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ்-தான் பா.ஜ.க-வின் தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்துகிறது. ஆணாதிக்க மனப்பான்மை ஆட்சிக்கு வந்தால், எதிர்காலத்தில் பெண்களுக்கு அதிகாரமளிக்க வேண்டிய திட்டங்கள் என்னவாகும் என்ற அச்சம் ஏற்படுகிறது.
‘குஜராத் மாதிரி'யை நாடு முழுக்கச் சந்தைப்படுத்தும் வேலையில் தீவிரம் காட்டும் மோடியின் இந்தச் செயல், பாலினச் சமத்துவத்தை அவர் ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாக இல்லை. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி குஜராத்தில் 1,000 ஆண்களுக்கு 918 பெண்கள்தான், இது தேசிய சராசரியான 940-ஐ விடக் குறைவு.
குஜராத்தில் ஆண் குழந்தைகளை அதிகம் விரும்பும் போக்கையும், தேசிய அளவைவிடக் குறைந்த விகிதத்திலேயே குஜராத்தில் பெண் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் சேர்வதையும், நாட்டின் பிற பகுதிகளைவிட குஜராத்தில் பெண் குழந்தைகள் ஊட்டச் சத்துக்குறைவால் அதிகம் பாதிக்கப்பட்டுவருவதையும் அறிக்கைகளிலிருந்து அறிய முடிகிறது.
பெண்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவோருக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதும் குஜராத்தில் தான் மிகமிகக் குறைவு. மோடி பிரதிநிதித்துவப்படுத்தும் சித்தாந்தத்தையும் மேற்கண்ட தரவுகளையும் வைத்துதான், அவர் பிரதமரானால் மீண்டும் நம்முடைய சமூகம் பழமைவாதத்தில் ஆழ்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இதற்கெல்லாம் மோடி பதிலளித்தே ஆக வேண்டும்