Published : 27 Jun 2016 09:23 AM
Last Updated : 27 Jun 2016 09:23 AM

இது பிரிட்டனோடு முடியும் விவகாரம் அல்ல!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக (பிரெக்ஸிட்) பிரிட்டிஷ் வாக்காளர்களில் பெருவாரியானவர்கள் அளித்துள்ள ஆதரவு மிகப் பெரிய அரசியல், பொருளாதார நிலநடுக்கம் போன்றது. இனி, பிரிட்டன் எந்தத் திசையில் பயணிக்கப்போகிறது என்று பார்க்க வேண்டும். ஐரோப்பியப் பொதுச் சந்தைக்கேற்ப பிரிட்டன் இனி செயல்பட வேண்டியிருக்காது. தனக்கெனச் சொந்தமாக நிதிக் கொள்கையையும், குடியேற்றங்களை அனுமதிக்கும் சட்டங்களையும் அது வகுத்துக்கொள்ளலாம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நாட்டுக்கு இரண்டாண்டுகள் அவகாசத்தை விதிகள் அளிக்கின்றன. ஆனாலும் ‘விரைவில் விலகிவிடுமாறு’ ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனைக் கோரியுள்ளது.

உலகின் ஐந்தாவது பொருளாதார வல்லரசான பிரிட்டன் விலகுவது, ஐரோப்பிய ஒன்றியத்தை நிச்சயம் நிலைகுலைய வைக்கும். கடன் சுமையில் ஆழ்ந்து தவிக்கும் போர்ச்சுக்கல், அயர்லாந்து, இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகள் தங்கள் மீது திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளால் கொந்தளிப்பின் உச்சத்தில் இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிட இந்த நாடுகளும் துடித்தாலும்கூட, அவற்றின் நிதிநிலைமை மோசமாக இருப்பதால் விலக முடியாது. எனவே, அதிருப்திதான் அதிகரிக்கும். அரசியல், பொருளாதார, நிதித் துறைகள் தொடர்பாக நிச்சயமற்ற நிலையை பிரிட்டன் சந்திக்கப்போகிறது. அதேசமயம் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டனின் பொருட்களும் சேவைகளும் தங்கள் நாட்டில் குவிக்கப்படாமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக இறக்குமதித் தீர்வைகளை அதிகப்படுத்தும். வர்த்தகத்தில் அதிக சலுகைகளைக் காட்டாது. பிற உலக நாடுகளும் இதே முடிவை எடுக்கக்கூடும்.

பிரிட்டனின் இந்த முடிவு உலக நாடுகள் எல்லாவற்றிலுமே தாக்கத்தை உண்டாக்கும். ஜூன் 24-ல் பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. பிரிட்டனில் இந்தியர்களுக்குச் சொந்தமான 800 பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன. ஐரோப்பியச் சந்தையை எளிதில் பிடிக்கலாம் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட இந்நிறுவனங்களின் எதிர்காலம் இப்போது கேள்விக்குறி ஆகியிருக்கிறது. பிரிட்டனின் பவுண்டு செலாவணி மதிப்பை இழந்தது, ரூபாயின் மதிப்பிலும் அப்படியே எதிரொலித்தது. இனி பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் இரண்டுடனும் இந்தியா, வர்த்தக பேரங்களைத் தனித்தனியாக நடத்தியாக வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஏற்றுமதி, இறக்குமதிகளில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் பிரிட்டனுடனான வர்த்தகத்தை ஒரே நிலையாக இந்தியா பராமரித்துவருகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிகம் குடியேறத் தொடங்கியதும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை உயர்வும் பிரிட்டன் மக்களை இந்த முடிவை நோக்கித் தள்ளியதில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொருளாதார நிலையில் மாற்றமில்லாமல், வேலைவாய்ப்பும் உற்பத்தியும் பெருகாமல் நீண்ட காலமாக தேசம் உறைநிலையில் இருப்பதை மாற்ற அடுத்தடுத்த அரசுகள் எதுவுமே செய்யாததும் முக்கியமான காரணம்தான். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த விவகாரத்தின் மூலம் பிரிட்டனில் தலையெடுத்திருக்கும் தீவிர வலதுசாரி, தேசியவாதக் கட்சிகள். பவுண்டு மதிப்பு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்திருக்கிறது. இனி, ஸ்காட்லாந்து பிரிட்டனில் சேர்ந்திருக்குமா என்ற கேள்வியையும் இம்முடிவு எழுப்பியிருக்கிறது. இன்னும் இது எப்படியான விளைவுகளையெல்லாம் உருவாக்கும் என்பதை இப்போதே யூகிப்பது கடினம் என்றாலும் ஒரு விஷயம் நிச்சயம்: பிரிட்டன் மக்களின் முடிவும் போக்கும் பிரிட்டிஷ் அரசியலோடு முடிந்துவிடப்போவதில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x