

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக பி.ராம மோகன ராவ் பதவி வகித்தபோது, 2016, டிசம்பர் 21 அன்று தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அறையிலும், அவரது வீட்டிலும் சோதனை நடத்தியது வருமானவரித் துறை. பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 30 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள், ஐந்து கிலோ தங்கம், கணக்கில் காட்டப்படாத ஐந்து கோடிப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின. ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில், அதுவும் துணை ராணுவப் படைகளின் துணையோடு நடத்தப்பட்ட, முன்னுதாரணமற்ற இந்தச் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசோ, ஆளும்கட்சியோ இதற்கு எதிர்வினையாற்றவில்லை என்றாலும், மாநிலங்கள் உரிமை மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டார் வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
தொடர்ந்து, டிசம்பர் 22 அன்று ராம மோகன ராவ் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, கிரிஜா வைத்யநாதன் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். டிசம்பர் 27 அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராம மோகன ராவ், தன் மீதான குற்றச்சாட்டுகளையும் வெளியான தகவல்களையும் மறுத்தார். சோதனைக்கான ஆணையில் தனது பெயர் இல்லை என்று தொடங்கிய அவரது விளக்கம் தன் அலுவலகத்தில் நடந்த சோதனை, அரசியலமைப்பின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று விமர்சனத்தில் முடிந்தது. இதற்குப் பதிலளித்த வருமான வரித் துறை “சட்ட விதிமுறைகளைப் பின்பற்றியே சோதனைகளை நடத்தியிருக்கிறோம்” என்று தெரிவித்தது. ஆற்று மணல் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர் சீனிவாசலு வீடுகளில் நடந்த வருமான வரிச் சோதனைகளில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலேயே தலைமைச் செயலாளரின் இல்லத்திலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாயின.
ராம மோகன ராவ் பற்றி மக்களிடைய கடும் சந்தேகங்கள் ஏற்பட்ட நிலையில், தமிழக அரசோ இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மாறாக, அவருக்கு எந்தப் பொறுப்பும் அளிக்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்தது. இந்நிலையில், மார்ச் 30 அன்று தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவன இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் பி.ராம மோகன ராவ். எதிர்க் கட்சிகளைப் போலவே மக்களிடத்திலும் இது கடும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. “யாரையோ மிரட்டி எதையோ சாதிக்க டெல்லியால் நடத்தப்பட்ட பேரச் சோதனையா இது? உள்ளபடி ராம மோகன ராவ் குற்றமிழைத்தவர் என்றால், மீண்டும் எப்படி அவர் பதவியில் அமர்த்தப்படுகிறார்? அவர் சந்தேகத்துக்குரியவர் இல்லை என்றால், எந்த முகாந்திரத்தில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது, அதன் முடிவு என்ன?” என்று மக்கள் எழுப்பும் கேள்விகள் அர்த்தமற்றவை அல்ல.
இந்த விவகாரத்தில் மக்களின் சந்தேகத்தைக் களைய வேண்டிய தார்மிகப் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது. அதிலிருந்து அவை தப்பிவிட முடியாது!