

புதிதாகத் தொழில்களைத் தொடங்குவதில் உலகுக்கே இந்தியா தலைமை வகிக்கும் வகையில் ஒருங்கிணைந்த திட்டம் அறிவிக் கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். இத்திட்டத்தின் ஒரு கட்டமாக, நாட்டில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களும் (ஐ.ஐ.எம்.கள்), இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் (ஐ.ஐ.டி.கள்), மத்திய பல்கலைக்கழகங் களும், தேசியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்களும் இணைக் கப்பட்டு, உயிர்ப்புள்ள தொடர்புத் தொகுப்பு ஏற்படுத்தப்படும். புதிதாகத் தொழில்தொடங்க விரும்பும் தொழில்முனைவோர்கள், தொழில் வளர்ப்புப் பிரிவு வலையமைப்புகளையும் ஆலோசகர்களையும் முதலீடு செய்வோரையும் அணுக, அரசின் புதிய கொள்கை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக ஒரு தொழிலை எளிதாகத் தொடங்கவும், அத்தொழிலில் இருந்து வெளியேறவும், தொடங்கப்பட்ட புதிய தொழில் நிறுவனங் களை முதல் 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையில் தேவைப் படுவோர் வாடகைக்கு அமர்த்திக்கொள்ளவும், உள்நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் அந்நிறுவனங்களுக்குத் தேவைப்படும் நிதியை வழங்க ஊக்குவிப்புகளை அளிக்கவும் அரசு உத்தேசித்திருக்கிறது. இப்போது புதிய தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் முதலீட்டில் 90% அந்நிய முதலீட்டின் உதவியுடன்தான் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் ஏராளமான புதிய தொழில் பிரிவுகள் கோடிக் கணக்கான ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், இப்படி வெற்றிகரமாகத் தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களில் சுமார் 65% இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு, குறிப்பாக சிங்கப் பூருக்குக் குடியேறிவிட்டன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை இந்தியா ஆதரிக்காததால் இப்படி வெளியேறுகின்றன என்று கூறிவிட முடியாது. இந்தியாவில் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் இடர்களே அவர்களுக்குப் புதுவித யோசனைகளை அளித்து நல்ல தயாரிப்பாளர்களாக மாற்று கின்றன, அவர்கள் கண்டுபிடிப்பது உலகின் பிற நாடுகளுக்கும் பயன்படுகிறது என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை கூறியிருக்கிறார். 1970 முதல் 1980 வரையில் முன்னணியில் இருந்த சிறுதொழில் நிறுவன அதிபர்கள் தொடங்கி, 1990-களில் ஆதிக்கம் செலுத்திய மும்பைத் தொழிலதிபர்கள் வரையில் இந்திய அரசும் சூழலும் ஏற்படுத்திய பாதகமான அம்சங்களை வென்றுதான் தொழில் உற்பத்தியில் வரலாறு படைத்தனர்.
இந்நிலையில், புதிய நிறுவனங்கள் தொழில்தொடங்க எல்லா வகையிலும் உதவுவது என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முடிவுசெய்திருப்பது வரவேற்கத் தக்கது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்பிரிவுகள் புதிதாகப் பதிவு செய்ய ஆதார் அட்டை அவசியம் என்பதை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். புதிய தொழில்நிறுவனங்களில் உள்நாட்டவர்கள் முதலீடு செய்தால், அதிலிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் வருவாய்மீது வரி விதிப்பதை அரசு கைவிட வேண்டும். தொழில் தொடங்குவதற்கான அனுமதிகளும் காப்புரிமையும் விரைந்து வழங்கப்பட வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு மக்கள் சேர்ந்து முதலீடு செய்யவும் அனுமதிக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தரத் தொழில்களைத் தொடங்கக்கூட அடுக்கடுக்காகப் பல கட்டுப்பாடுகளையும் நிபந்தனை களையும் விதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பாஜக ஆட்சியில் தொழில் தொடங்குவதற்கான நடை முறைகளில் மேம்பாடு ஏற்பட்டிருக்கிறதே தவிர, முழுக்க எளிமையாகிவிடவில்லை. மோடி ஆர்ப்பாட்டமாக முன்வைக்கும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற கோஷம் உண்மையிலேயே பலன் கொடுக்க வேண்டும் என்றால், அரசு இதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.