Published : 16 Feb 2017 09:38 AM
Last Updated : 16 Feb 2017 09:38 AM

ஆளுநர் இனியும் தாமதிக்கலாகாது!

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்தது முதலாக தமிழகம் அரசியல் குழப்பத்தில் தள்ளப்பட்டிருக்கிறது. முன்னதாக, முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலாகவே தமிழக அரசின் செயல்பாடுகள் தேங்க ஆரம்பித்தன. என்றாலும், டிசம்பர் 6 அன்று ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பேற்ற பிறகு சூழல் கொஞ்சம் மாறியது.

அடுத்து வந்த நாட்களில் முதல்வர் பன்னீர்செல்வம் - எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரிடையேயான இணக்கமான உறவு அரசு செயல்பாட்டின் வேகத்துக்கும் வழிவகுத்தது. இந்நிலையில் தான் ஆளும் அதிமுகவுக்குள் உருவான ‘ஆட்சியும், கட்சியும் ஒருவரிடமே இருக்க வேண்டும்’ என்ற கோஷத்தின் விளைவாக பன்னீர்செல்வம் பிப்ரவரி 5 அன்று ராஜிநாமா செய்தார். தொடர்ந்து, அதிமுகவின் புதிய பொதுச்செயலாளரான சசிகலா அதிமுகவின் சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்தார். இதனிடையே கட்சிக்குள் பிணக்கு ஏற்பட்டது. தான் வற்புறுத்தி ராஜிநாமா செய்யவைக்கப்பட்டதாகவும் கட்சிக்குள் சசிகலா குடும்பத் தினர் நடத்திவரும் ஆதிக்க அரசியலை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாகவும் அறிவித்தார் பன்னீர்செல்வம். தொடர்ந்து, ஆளுநரைச் சந்தித்த அவர், தன்னுடைய ராஜிநாமா கடிதத்தைத் திரும்பப் பெற விரும்புவதாகவும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கோரினார்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் இது தொடர்பில் ஏதேனும் முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால், எடுக்கவில்லை. மேலும் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவும் இல்லை. சசிகலா சம்பந்தப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், ஆளுநரின் மௌனமும் காத்திருப்பும் நீதிமன்றத் தீர்ப்புக்கானது என்று மத்தியில் ஆளும் பாஜகவின் தமிழகத் தலைவர்கள் பலரும் கூறியதையே ஆளுநர் தரப்பு நியாயமாகவும் புரிந்துகொள்ளப்பட்டது. இதே போன்ற சூழலில் முன்பு ஜெயலலிதா இருந்தபோது அவர் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்ட வரலாறு தமிழகத்துக்கு உண்டு என்றாலும், இப்போது அதிமுக இரு அணிகளாகப் பிரிந்து திரளத் தொடங்கியிருக்கும் சூழலில், மக்களும் நிதானித்திருந்தனர்.

இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டது. வழக்கில் குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்டு, தொடர் சிறைவாசத்துக்கும் சசிகலா உள்ளாகிவிட்ட நிலையில், அவருக்கு மாற்றாக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியைத் தன்னுடைய கட்சியின் சட்டசபைத் தலைவராக அறிவித்திருக்கிறது அதிமுக. ஆளுநரைச் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமையும் கோரியிருக்கிறார். இதனிடையே முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பினரும் ஆளுநரைச் சந்தித்திருக்கின்றனர். ஆனால், ஆளுநர் தொடர்ந்தும் மௌனமாக இருப்பது வியப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருக்கும் நிலையில், அணிசேர்ப்பும் குதிரை பேரத்துக்கான சூழலும் உருவாகிவருகின்றன. தொடர்ந்து எல்லோர் கவனமும் இந்த ஒரு விஷயத்திலேயே உறைந்திருப்பதால், மாநிலத்தின் நிர்வாகம் பெரிய அளவில் முடங்கியிருக்கிறது. ஆளுநர் இதுகுறித்து உடனடியாக ஏதேனும் ஒரு முடிவை அறிவிக்க வேண்டும். ஒருவேளை அவர் காத்திருக்கிறார் என்றால், எதற்காகக் காத்திருக்கிறார் என்றேனும் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x