

தென் கொரியாவைச் சேர்ந்த எஃகு உற்பத்தியாளர்களான போஸ்கோ, ஒடிஷாவில் உற்பத்திப் பிரிவு தொடங்குவதற்குத் தேவையான சுற்றுச்சூழல்சார்ந்த ஒப்புதலுக்குச் சுற்றுச்சூழல் அமைச்சகம் மறு அனுமதி வழங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட ரூ. 50,000 கோடிக்கும் மேல் மதிப்பிடப்பட்ட திட்டம் இது. ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் ஏராளமான திட்டங்களுக்கும் போஸ்கோ திட்டத்துக்கும் இடையே முக்கியமான வேறுபாடு ஒன்று இருக்கிறது. அந்நிய நேரடி முதலீடு என்பதுதான் அது.
வறுமையில் உழலும் கோடிக் கணக்கான மக்களை அந்த நிலையிலிருந்து மீட்பதற்கு பெரிய அளவுக்கு முதலீடுகள் தேவைப்படுகின்றன என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இந்த இலக்கை அடைவதற்குப் புதிய தொழில் நிறுவனங்கள் மிகவும் அவசியம். இந்தியப் பொருளாதாரம் கடந்த 20 ஆண்டுகளாகக் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஆனால் இந்தப் பலன்கள் சமச்சீராக எல்லாருக்கும் கிடைக்கவில்லை.
போஸ்கோ விஷயத்தில் நிலம் கையகப்படுத்துதல் என்பது பிரச்சினைக்குரிய ஒன்றாக இருந்துவருகிறது. உள்ளூர் மக்கள், போஸ்கோ திட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். விவசாயத்தைச் சார்ந்திருக்கும் கிராமத்து மக்கள் ஏன் தங்கள் நிலங்களை விட்டுவிட்டுச் செல்ல வேண்டும் என்பதற்கு திருப்தி அளிக்கக்கூடிய பதிலைக் கடந்த எட்டு ஆண்டுகளாக ஒடிஷா அரசாலும் தென் கொரிய நிறுவனத்தாலும் தர முடியவில்லை.
ஆண்டுக்கு 80 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யக் கூடிய இந்தத் திட்டத்துக்கு, அதுவும் சமூக நலத் திட்டங்களுக்காக போஸ்கோ செலவிடுதல் உள்ளிட்ட நிபந்தனைகள் போன்றவற்றோடு, சுற்றுச்சூழல் ஒப்புதலைப் புதுப்பித்தலிலும் கருத்தொற்றுமையை உருவாக்குவதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இப்போது கிடைத்திருக்கும் அனுமதி, போஸ்கோ திட்டத்தின் பல பகுதிகளில் ஒரே ஒரு பகுதியை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.
சுரங்கங்கள், ரயில் பாதைகள், வீட்டுவசதி அமைப்பு என்று இந்தத் திட்டத்தின் அங்கங்கள் எல்லாம் இப்போது கழற்றிவிடப்பட்டிருக்கின்றன. தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் இதைக் குறிப்பிட்டிருக்கிறது. அதுதான், இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த அம்சங்களையும், மதிப்பாய்வுக் குழு வெளிப்படுத்தியிருந்த கவலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முடிவு நம்பகத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்றால், மேற்கண்ட யோசனைகளெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றிய விரிவான அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
ஒடிஷாவின் நியமகிரியில் வேதாந்தா நிறுவனத்தின் பாக்ஸைட் கனிம அகழ்வுத் திட்டம் தொடர்பான விவகாரத்தில் அங்கிருந்த பழங்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் சுற்றுச்சூழல் அமைச்சகம் அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது. இயற்கை வளங்களை வளர்ச்சித் திட்டங்களுக்காக அபகரிப்பது என்பது மக்கள்தொகை மிகுந்த நாடுகளில் பெரும் பிரச்சினையே. ஏனெனில் இந்த நாடுகளில் நிலம் குறைவாகவும், மறுகுடியமர்த்தும் நடவடிக்கைகள் பலவீனமாகவும் இருக்கின்றன.
எனவே, அரசாங்கம் இதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளும் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே; ஆனால், அவற்றை எதிரெதிரான விஷயங்களாகச் சித்தரிக்க முயல்வது தவறானது.