

தமிழகம் பரபரப்புடன் எதிர்பார்த்திருந்த நீட் தேர்வு முடிவுகள் தமிழக மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
முதல்முறையாக அனுமதிக்கப் பட்டிருக்கும் வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் உள்பட மொத்தம் 10,90,085 பேர் இத்தேர்வில் பங்கேற்றனர். இவர் களில் 6,11,539 பேர் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தமிழக மாணவர்கள் 83,359 பேரில் வெறும் 32,570 பேர் மட்டுமே தேர்ச்சிபெற்றிருப்பதாகவும் (அதாவது 39%) தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வியில் நாம் நாளுக்கு நாள் எவ்வளவு பின்தங்குகிறோம் என்பதற்கு, முதல் 25 இடங்களில் தமிழக மாணவர் ஒருவர்கூட வரவில்லை என்பதையும் ஒரு சான்றாகச் சொல்லலாம். தமிழகப் பள்ளிக்கல்வித் துறை ஒரு அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்டாக வேண்டிய கட்டாயக் காலகட்டத்தில், அதற்கேற்ற காரியங்கள் அங்கு தொடங்கியிருக்கின்றன என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். ஆனால், எதன் பொருட்டும் இந்த விவகாரத்தைத் தமிழக அரசு கையாளும் அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டும் இதுவரை அதுகுறித்து எந்த அக்கறையையும் மத்திய அரசு வெளிக்காட்டவில்லை. தமிழக மாணவர்களின் எதிர்காலம் என்பதோடு மட்டும் அல்லாமல், தமிழக மக்களின் மருத்துவ, சுகாதாரத் தேவைகளோடும் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தை அரசியல்ரீதியாக அணுகும் இடத்தில் அதிமுக அரசு பெரும் தோல்வி அடைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. மாநில அரசு இதை ஒரு அரசியல் பிரச்சினையாகக் கையாளவே இல்லையே? குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் அதிமுகவின் மூன்று பிரிவுகளில் ஒன்றுக்குகூட மாநில நலன் சார் பிரச்சினைகள் இன்று மத்திய அரசால் உதாசினப்படுத்தப் படுவது ஒரு பொருட்டாகவே தெரியவில்லையே?
தமிழக மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் கடைசி ஆறுதலாகவே ‘‘மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக் கீட்டைத் தவிர்த்த இடங்களில், 85% இடங்களை மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்’’ என்ற தமிழக அரசின் அறிவிப்பைப் பார்க்க வேண்டி யிருக்கிறது. இதுவும்கூடக் கண்துடைப்பு நடவடிக்கையே என்று கல்வியாளர்கள் சொல்வதைப் புறந்தள்ள முடியாது. நீட் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு மட்டும்தானே இது பொருந்தும்? தமிழக அரசையும் மாநிலப் பாடத்திட்ட வாரியத்தையும் நம்பிப் படித்த - நீட் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் நிலை? நிச்சயமாக, மத்தியப் பாடத்திட்டத்துக்கு இணையாக மாநிலப் பாடத்திட்டத்தையும், நம்முடைய பள்ளிகளையும், ஆசிரியர்களையும், பயிற்றுவிப்புமுறையையும் தமிழக அரசு மேம்படுத்த வேண்டும். அது தனி. ஆனால், நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் யுத்தம் முழு மூச்சில் தொடர வேண்டும். ஏனென்றால், இது வெறும் கல்விப் பிரச்சினை அல்ல. மாநிலத்தின் உரிமை சார்ந்த, தமிழக மக்களின் எதிர்கால நலன் சார்ந்த பிரச்சினை. தங்களுடைய பதவி நலன்களுக்காக மக்களையும் மாணவர்களையும் அதிமுக அரசு பலி கொடுக்கக் கூடாது!