

பொதுவாக, நம்முடைய குடியரசுத் தலைவர்கள் மாண்பை உணர்ந்தே பேசுவது மரபு. ஆட்சியில் குறுக்கிடும் வகை யிலோ, அன்றாட அரசியலில் தலையிடும் வகையிலோ, பரபரப்பைக் கிளப்பும் வகையிலோ பேசுவதைத் தவிர்ப்பவர்கள். இன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை விவாதத்துக்கு உள்ளாகியிருப்பது தேவையற்றது என்று தோன்றுகிறது.
அப்படி என்ன பேசிவிட்டார் பிரணாப் முகர்ஜி?
“கடந்த சில ஆண்டுகளாக மத்தியில் பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதனால், இந்திய அரசியலில் குழப்பம் ஏற்படுகிறது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் இதேபோன்ற நிலைமை ஏற்பட்டால், பெரும்பான்மை பலம் இல்லாத நிலையற்ற அரசே மத்தியில் அமையும். அதனால், சந்தர்ப்பவாதிகள் கையில் அரசு சிக்கிவிடும். அது நாட்டுக்கு பேராபத்தாகிவிடும். அதுபோன்ற சூழ்நிலை ஏற்படக்கூடாது. இப்போது ஏற்பட்டுள்ள காயங்கள் ஆறும் வகையில் நிலையான அரசு மத்தியில் அமைய வேண்டும். இந்தியாவின் நலன் கருதி வாக்களிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்” என்றார்.
“இந்தியர்கள் கோபத்தில் கொதிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் கட்டுப்பாடில்லாமல் ஊழல்கள் நடப்பதையும் அரிய தேசிய வளங்கள் வீணடிப்பதையும் பார்த்துத்தான்; இந்தக் குறைகளை எல்லாம் அரசுகள் போக்கவில்லை என்றால், அப்படிப்பட்ட அரசுகளை மக்கள் பதவியிலிருந்து நீக்கிவிடுவார்கள்” என்றார்.
“புனிதம் என்று தாங்கள் கருதும் ஜனநாயக அமைப்புகள் சீர்குலைக்கப்படும்போது, அதைப் பொறுக்காத மக்கள் வீதிகளில் திரண்டு பலத்த எதிர்க்குரலை எழுப்புகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
“மக்களிடையே பேராதரவைப் பெற்றிருந்தாலும் அராஜகவாதி களாக இருந்தால், அவர்கள் ஆட்சி நிர்வாகத்துக்கு ஏற்றவர்கள் அல்ல. தங்கள் மனம்போன போக்கில் வாக்குறுதிகளை அளிக்க தேர்தல் யாருக்கும் உரிமம் வழங்கவில்லை. எது சாத்தியமோ, அதைப் பற்றி மட்டுமே வாக்காளர்களுக்கு உறுதி தர வேண்டும்” என்றார்.
காங்கிரஸுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாக இதைக் கருதலாமா? ஆம் கருதலாம். ஆம் ஆத்மி கட்சிக்கு விடுக்கப்பட்ட கண்டனமாக இதைக் கருதலாமா? ஆம் கருதலாம். பா.ஜ.க. மேல் உள்ள அதிருப்தி யாக இதைக் கருதலாமா? ஆம் கருதலாம். இந்தக் கட்சிகளுக்கு மட்டும் அல்ல; டெல்லியில் தொடங்கி தமிழகம் வரைக்கும் உள்ள எந்த அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு வாக்காளருக்கும் பொருந்தக்கூடிய வார்த்தைகள் முகர்ஜியின் உரையில் இடம்பெற்றவை.
பிரணாப் முகர்ஜியின் வார்த்தைகளில் அரசியல் இருக்கிறதா என்று கேட்டால், ஆம் இருக்கிறது. ஆனால், அதில் என்ன தவறு இருக்கிறது?
நாட்டின் ஒவ்வொரு குடிமகனிடமும் உறைந்திருக்கும் உணர்வுகளையே முதல் குடிமகனான பிரணாப் முகர்ஜி வெளிப் படுத்தியிருக்கிறார். இதை எல்லாம் அவர் பேசலாமா என்று விவாதிப்பதைவிடவும் அவர் பேசிய விஷயங்களின் உட்பொருளை விவாதிப்பதே ஆரோக்கியமான விவாதமாக இருக்கக் கூடும்!