

தமிழகம் முழுவதும் தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் திங்கள்கிழமை முதல் தொடங்கியிருக்கின்றன. கடந்த சில வாரங்களாக இந்தத் தடுப்பூசிகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கும் விவாதங் களும் சில தவறான பிரச்சாரங்களும் பொது மக்களிடையே, குறிப்பாக சிறார்களை வைத்திருக்கும் இளம் பெற்றோரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. இந்தத் தடுப்பூசிகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாகவே தடுப்பூசியை ஒரு சர்வதேச சதியாகச் சித்திரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.
தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கோவா, லட்சத்தீவுகள் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பிப்ரவரி 6 முதல் 28 வரை 9 மாதம் முதல் 15 வயது வரையிலான சுமார் 1.8 கோடிச் சிறார்களுக்கு ரூபெல்லா, தட்டம்மை நோய்களுக்கான தடுப்பூசி அரசு சார்பில் போடப்படுகிறது. உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு மோசமான இந்த இரண்டு நோய் பாதிப்புகளுக்கும் சிகிச்சை அளிக்கும் மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இந்த நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்தத் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. 'இவை பாதுகாப்பானவை; இவற்றால் எந்தவித ஆபத்தும் இல்லை' என்றும் உறுதிசெய்யப் பட்டிருக்கிறது. இவற்றைத்தான் ஆட்டிஸம் பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவை என்கிறார்கள் சிலர்.
உலகில் எல்லா மருத்துவ முறைகளிலும் பல அனுகூலங்களும் உண்டு; சில சிக்கல்களும் உண்டு. ஆங்கில மருத்துவம் ஏன் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றால், அது உடனடிப் பலன் அளிப்பது மட்டும் அல்லாமல், அதன் சிகிச்சைகளும் மருந்து களும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின், கொண்டுவரப் படுகின்றன என்பதும் அவற்றின் பலன்கள், பக்கவிளைவுகள் இரண்டையும் அவை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றன என்பதாலும்தான். மனிதகுலத்தைப் பல கொள்ளை நோய்களிலிருந்து விடுவித்த தூதன் தடுப்பூசி. கோடிக்கணக்கான சிசுக்களிடம் ஒரு தடுப்பூசியைக் கொண்டுவரும் முன், ஒரு அரசும் சுகாதாரத் துறையும் எவ்வளவு யோசித்துச் செயல்படும் என்பதை விளக்க வேண்டியதில்லை. அதேசமயம், மக்கள் தரப்பிலிருந்து எழுப்பப்படும் சந்தேகங்களைக் குறையாகப் பார்க்கவும் ஏதும் இல்லை. ஏனென்றால், மருத்துவம் ஒரு சந்தையாக்கப்படவும் மருந்துகள் பண்டமாக்கப்படவும் இதே ஆங்கில மருத்துவ முறைதான் வழிகோலியது என்பதையும் மறந்துவிடலாகாது.
ஆக, அரசுத் தரப்பு இதுகுறித்துப் பேச வேண்டும். மக்களின் சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் விரிவான பதில் அளிக்க வேண்டும். மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களில் அரிதாக லட்சத்தில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும், அந்தப் பாதிப்பை அரசு தன் பொறுப்பில் ஏற்றுக்கொள்ளும் வழக்கம் இதுவரை நம் நாட்டில் இல்லை. இந்நிலையை மாற்ற வேண்டும். பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை, பாதிப்புக்கான இழப்பீடு ஆகியவற்றை அரசு ஏற்க வேண்டும்.
இப்படியான விவகாரங்களில் பொதுச் சமூகத்துக்கும் பொறுப்பு இருக்கிறது. சமூக வலைதளங்கள் கையில் இருக்கின்றன என்பதற்காகப் பொறுப்பற்ற வகையில், விஷத் தகவல்களைப் பொதுவெளியில் பரப்புவது சமூகக் குற்றம். சிசுக்களின் உயிரோடு விளையாடுவது நம் சந்ததியோடு விளையாடும் அபாயமான ஆட்டம்!