Published : 10 Jan 2014 12:00 AM
Last Updated : 10 Jan 2014 12:00 AM

வேடிக்கை அரங்கம் அல்ல!

வங்கதேச நிகழ்வுகள் கவலை தருகின்றன. பொதுத்தேர்தல் ஏமாற்றத்தைப் பரிசளித்திருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் பேகம் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியக் கட்சியின் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்தத் தேர்தலில் பங்கேற்கவில்லை. ஆகையால், மொத்தம் உள்ள 300 இடங்களில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் 231 தொகுதிகளிலும் அதன் முக்கியக் கூட்டாளியான ஜாதியா கட்சி 33 இடங்களிலும் வென்றுள்ளன. தேர்தலில் 156 இடங்களில் போட்டியே இல்லாமல் ஆளும் கூட்டணி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதும் தேர்தல் நடைபெற்ற இடங்களிலும் சுமார் 20% – 30% அளவுக்கே வாக்குப் பதிவு ஆகியிருக்கிறது என்பதும் தேர்தல் எந்த லட்சணத்தில் நடந்திருக்கும் என்பதற்கு உதாரணம் (2008 தேர்தலில் 70% வாக்குகள் பதிவாயின).

தேர்தலில் வென்றாலும், புதிய அரசை அமைத்து நீண்ட காலம் ஆட்சி நடத்த முடியும் என்ற நம்பிக்கை, பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் போராட்டம் சூழும் நிலையில், சர்வதேச நிர்ப்பந்தங்களும் ஷேக் ஹசீனாவை முற்றுகையிடுகின்றன. “இந்தத் தேர்தல் சட்டப்படி செல்லாது; சட்டரீதியாகவும் தார்மீகரீதியாகவும் ஷேக் ஹசீனா தோற்றுவிட்டார்” என்று தேர்தல் முடிவுகளை முற்றிலுமாக நிராகரித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கலீதா ஜியா. “வங்க தேசத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு ஒப்பந்தம் ஏற்படாதது வருத்தம் அளிக்கிறது. ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தால் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் தேர்தல் நடந்திருக்கும்” என்று சொல்லியிருக்கிறார் ஐ.நா. சபைப் பொதுச்செயலர் பான் கீ மூன். “பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. வங்கதேச மக்கள் அனைவரும் சுதந்திரமாகத் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஆளும் கட்சி ஏற்படுத்தித் தர வேண்டும்” என்று சொல்லியிருக்கிறது அமெரிக்கா. ஷேக் ஹசீனா மறுதேர்தலை நோக்கிச் செல்லலாம் என்கிற தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

வங்கதேச விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவத் தினர் மற்றும் ரஸாக்கர்களுடன் இணைந்து போர்க் குற்றங் களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட ஆரம்பித்ததில் இருந்து வங்கதேசம் பெரும் வன்முறையை எதிர்கொள்கிறது. இந்த வன்முறையின் முக்கியமான இரு இலக்குகள் அரசு சொத்துகளும் சிறுபான்மையினரான இந்துக்களும். வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டால் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அது வழிவகுக்கலாம் என்ற வியூகத்தோடு பாகிஸ்தான் ஆதரவு அடிப்படைவாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி செயல்படுவதாக வங்கதேச அரசியல் வட்டாரத்திலேயே பேசப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்துக்களின் மீதான தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருக்கின்றன.

வங்கதேசத்தில் நடக்கும் எந்த மோசமான நிகழ்வுகளும் இந்தி யாவைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதை நாம் ஏற்கெனவே நேரடி அனுபவத்திலிருந்து உணர்ந்திருக்கிறோம். இந்தியா இனியும் “இது உள்நாட்டு விவகாரம்” என்று வேடிக்கை பார்க்கலாகாது. வங்க தேசத்திடம் வலுவான குரலில் இந்தியா பேச வேண்டிய நேரம் இது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x