Published : 03 Feb 2014 09:38 AM
Last Updated : 03 Feb 2014 09:38 AM

இந்தியன் எனும் ஏமாளி

இந்தியாவில் பயன்படுத்தப்படும் சிறிய ரக கார்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது சமீபத்திய ‘குளோபல் என்.சி.ஏ.பி.’ ஆய்வு. இந்த நிறுவனம் கார்களை வேகமாக ஓட்டிவந்து மோதிப் பார்க்கும் சோதனைக்கு உள்படுத்தியபோது, ‘சுசூகி-மாருதி ஆல்டோ 800’, ‘டாட்டா நானோ’, ‘ஃபோர்டு ஃபிஃகோ’, ‘ஹூண்டாய் ஐ-டென்’, ‘ஃபோக்ஸ்வேகன் போலோ’ ஆகிய ஐந்து சிறிய ரக கார்களும் ஒரு விபத்து நேரிட்டால், அப்பளம்போல நொறுங்கிப்போகும் வாய்ப்புடையவை என்பதும் அவற்றில் பயணிப்போருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் விற்பனையில் முன்னணியில் இருப்பவை இந்த கார்கள்; நம் நாட்டில் விற்பனையாகும் ஐந்து கார்களில் ஒன்று இவற்றில் ஏதேனும் ஒரு கார் என்கிற பின்னணியில் இந்தச் சோதனையின்போது வெளிவந்திருக்கும் உண்மைகள் அதிரவைக்கின்றன.

இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக ஆய்வை நடத்திய நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு விஷயம், இந்திய நுகர்வோரை வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் எப்படி மதிப்பிடுகின்றன என்பதை உணர்த்தப் போதுமானது. அதாவது, “இந்த கார்களில் காற்றுப் பைகள் கிடையாது. நிறுத்த முடியாத அளவுக்கு கார் வேகமாகச் செல்லும்போது, இந்த காற்றுப் பைகளைப் பயன்படுத்தினால் காரின் வேகம் கணிசமாக மட்டுப்படும். ஆனால், அவை பொருத்தப்படவில்லை. அதேசமயம், இதே கார்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கப்படும்போது அவை காற்றுப்பைகளுடனே விற்கப்படுகின்றன” என்று சுட்டிக்காட்டுகிறது அந்த ஆய்வறிக்கை.

இந்த ஆய்வறிக்கை வெளியான உடனேயே இந்த கார் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், “கார் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் நேராமல் தடுப்பதுதான் எம் முதல் நோக்கம்; அதற்கேற்ற தீவிர நடவடிக்கைகளை எடுப்போம்” என்று அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். ‘ஃபோக்ஸ்வேகன்’ நிறுவனம் தன்னுடையோ ‘போலோ’ ரக கார்களைச் சந்தையிலிருந்து திரும்பப் பெற்றிருக்கிறது. கூடவே, “இனி விற்கப்படும் கார்களில் காற்றுப் பைகளும் பிரேக்குகள் பழுதாகாமல் இருப்பதற்கான சாதனமும் சேர்த்தே விற்கப்படும்; அவற்றுக்காகக் கூடுதலாக 2.7% கட்டணம் வசூலிக்கப்படும்” என்று அறிவித்திருக்கிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். 2012-ல் மட்டும் 1,40,000 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர். இவற்றில் கார் பயணிகளின் இறப்பு சுமார் 17%. இந்தியாவில் விற்கும் கார்களில் ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான விலை கொண்ட கார்களின் சந்தை 80%. மேலும், வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தச் சந்தை மேலும் பிரம்மாண்டமாக விரிவடையும். எனில், எவ்வளவு பெரிய ஆபத்து இது?

பெருநிறுவனங்களுக்கு எப்போதுமே லாபமே முக்கியக் குறிக் கோள் என்பதும் இந்தியச் சந்தைக்கு அவை கொடுக்கும் மதிப்பு இவ்வளவுதான் என்பதும் ஆச்சரியமானதல்ல. ஆனால், இப்படிப்பட்ட ஆபத்துகளை எல்லாம் அரசாங்கம் எப்படி வேடிக்கை பார்க்கிறது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x