Published : 02 Jun 2016 08:37 AM
Last Updated : 02 Jun 2016 08:37 AM

விபத்து தரும் பாடம்

மகாராஷ்டிர மாநிலத்தின் நாகபுரி அருகில் உள்ள புல்காம் ஆயுதக் கிடங்கில், செவ்வாய்க்கிழமை அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் 10 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்துள்ளன. பாதுகாப்புப் படை வீரர்கள் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாது தக்க நேரத்தில் செயலாற்றியுள்ளனர். அதனால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களும் நூற்றுக்கணக்கான உயிர்களும் காப்பாற்றப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் செயல்பட்டு பலத்த சேதத்தைத் தவிர்த்திருந்தாலும் இந்த விபத்து தவிர்த்திருக்கப்பட வேண்டியதே!

இந்த விபத்தால் ஏராளமான டாங்கு எதிர்ப்பு ஏவுகணைகள் நாசமாகியுள்ளன. லெப். கர்னல் ஆர்.எஸ். பவார், மேஜர் கே. மனோஜ் என்ற 2 அதிகாரிகளும் 16 பாதுகாப்புப் படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். 19 பேர் காயம் அடைந்துள்ளனர். சுற்றி அமைந்துள்ள 5 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விபத்து எப்படி, எதனால் நடந்தது என்று விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. கடுமையான கோடைக்காலம் என்பதால், கோரைப்புற்கள் வெயிலில் காய்ந்து ஒன்றோடொன்று உரசி தீப்பிடித்துப் பரவியிருக்கலாம் என்று ஆரம்பகட்டத் தகவல்கள் சொல்கின்றன.

கிடங்கில் வெடிகுண்டுகளும் வெடிபொருட்களும் ஆயுதங்களும் அவற்றின் வெடித்தன்மைக்கு ஏற்ப தனித்தனியான வைப்பறைகளில் பிரித்து வைக்கப்பட்டிருக்கும். அவற்றுக்கு இடையில் போதிய இடைவெளி உண்டு. கோரைப்புற்கள் வழியாக தீ பரவக் கூடாது என்பதற்காக அவ்வப்போது வெட்டப்படும்.

ஒவ்வொரு வைப்பறையைச் சுற்றியும் களிமண்ணால் பூசி மெழுகப்பட்ட நல்ல பருமனான பெரிய சுவர் இருக்கும். தீப்பிடித்ததும் பட்டாசைப் போல நாலாபுறமும் வெடித்துச் சிதறும் குண்டுகளையும் வெடிபொருட்களையும் அந்தச் சுவர் தடுக்கும்.

தீயணைப்பு வாகனங்களும் ரசாயனம் கலந்த தீயணைப்புக் கருவிகளும் தயார் நிலையில் இருக்கும். மின்சார வயர்கள் பூமிக்குள்ளே செல்லும். மிகவும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளையும் வெடிபொருட்களையும், கனமான கான்கிரீட் கலவை கொண்ட அறைகளில் தரைக்கடியிலேயே பத்திரப்படுத்திவிடுவார்கள். விபத்து ஏற்பட்டாலும் அந்தக் குண்டுகள் அங்கேயே வெடித்து அழிந்துவிடும்.

தரைக்கடியில் மிகப் பெரிய நீர்த்தொட்டிகளும் உண்டு. அதனால் விபத்துக் காலங்களில் நொடியில் தண்ணீர் கிடைக்கும். மணிக்கொரு முறை எல்லா பாதுகாப்பு வீரர்களும் நிலைமை குறித்து தகவல் பரிமாறிக்கொள்வார்கள். புகை அல்லது நெருப்பு தோன்றிய உடனேயே எல்லோரையும் எச்சரிக்கும் சாதனங்கள் இருக்கின்றன.

இவை எல்லாவற்றையும் மீறி விபத்து ஏற்பட்டுள்ளது. தீத்தடுப்பு ஏற்பாடுகளை நவீனக் கருவிகளைக் கொண்டு மேலும் நவீனப்படுத் தவில்லை. அதிகாரிகளின் மெத்தனம், சேகரித்து வைக்கப்படும் ஆயுதங்களில் உள்ள ரசாயனக் கலவை சுற்றுப்புறத் தட்ப-வெப்பம் காரணமாக அடையும் மாற்றங்களை கண்காணிக்காமை ஆகியவையும் காரணங்கள் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கிடங்கு இது. 7,000 ஏக்கர் பரப்பளவு. 26 கி.மீ. சுற்றளவு. வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், டாங்கு எதிர்ப்புக் குண்டுகள், பிரம்மோஸ் ரக ஏவுகணைகள் உள்ளிட்ட முக்கியமான ஆயுதங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், உடனே அங்கு சென்று பார்வையிட்டுள்ளார். இதே கிடங்கில் 2005 மார்ச் மாதம் நடந்த விபத்தில் ரூ.22 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் அனுபவங்களிலிருந்து அரசு பாடம் கற்றிருந்தால் வரிசையாக விபத்துகள் நடப்பதைத் தவிர்த்திருக்கலாம். இனிமேலாவது ஆயுதக் கிடங்குகளைப் பாதுகாக்கவும் கண்காணிக்கவும் போதிய ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x