

தேர்தல் நடைபெறும் காலத்தில் எது நடந்தாலும் அதற்கு அரசியல்ரீதியான சாயம் ஏற்படுவது இயல்பு. பங்குச்சந்தை, பணவீக்க விகிதம், ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு போன்றவையும் இப்படித்தான் பார்க்கப்படும். இவைமட்டுமின்றி ஏற்றுமதி-இறக்குமதி, தொழில்துறை உற்பத்தி, வேளாண்துறை உற்பத்தி, வேலையில்லாதோர் எண்ணிக்கை, மின்வெட்டு அளவு என்று ஏராளமான குறியீடுகள் ஆட்சியாளர்களை அளவிடப் பயன்படுத்தப்படும்.
இந்தத் தருணத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சிறிதுசிறிதாக உயர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு டாலருக்கு ரூ. 68.36 என்று இருந்த மதிப்பு இப்போது ரூ. 60 என்று ஆகியிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகள் ஏதும் பெரிய அளவில் மாறாவிட்டாலும் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக ரூபாயின் மதிப்பு கூடியிருக்கிறது. இறக்குமதி குறைந்ததால் அமெரிக்க டாலர்களுக்கான தேவையும் இந்தியாவில் குறைந்தது.
அதே சமயம் இந்தியாவில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றம் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்ற நினைப்பில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதைப் பங்குச் சந்தையின் புள்ளிகள் உயர்வதிலிருந்து அறிய முடிகிறது.
கடந்த ஓராண்டாகவே மத்திய அரசு முக்கியக் கொள்கை முடிவுகளை எடுப்பதில் காட்டிய தயக்கத்தாலும், அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட தடைகள் காரணமாகவும் உற்பத்தி, வளர்ச்சிக்கான பல நடவடிக்கைகள் சுணங்கிவிட்டன. தொழில்துறை வளர்ச்சிக்கு மிகவும் தேவைப்படும் மின் உற்பத்தி மற்றும் மூலப் பொருளான கனிமவள அகழ்வு ஆகிய இரண்டும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதன் விளைவைத்தான் நாடு பார்த்துவருகிறது. ரிசர்வ் வங்கிக்கு அனுபவம் இருப்பதால்தான் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரித்திருந்தாலும், வெளி வர்த்தகப் பற்றுவரவில் ஏற்பட்ட பற்றாக்குறை கணிசமாகக் குறைக்கப்பட்டிருந்தாலும் வட்டி வீதத்தைக் குறைக்காமல் பராமரிக்கிறது.
பழைய 500 ரூபாய் நோட்டுகள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது ஓரளவுக்குப் பணச் சுழற்சிக்கு அல்லது பங்குச் சந்தை முதலீட்டுக்கு உதவியிருக்கிறது. அத்துடன் மக்களவைப் பொதுத்தேர்தல் காரணமாக, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பதுக்கப்பட்டிருந்த கருப்புப் பணம் மீண்டும் இந்தியாவுக்குள் எடுத்துவரப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இதுவும் பணப் புழக்க அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
தொழில்துறையில் வளர்ச்சி ஏற்பட முதலீடு பெருக வேண்டும். அதற்கு, வங்கிகள் தரும் வட்டிவீதம் குறைக்கப்பட வேண்டும். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகமாக இருந்தால் இது சாத்தியமல்ல. ரூபாய் மதிப்பின் இப்போதைய உயர்வு நிரந்தரமானதல்ல. எனவே, புதிய அரசின் முன்னுள்ள சவால் மிகவும் பெரியது. விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றை அதிகரிக்கவிடாமல், வட்டியையும் உயர்த்தாமல், கடன் கிடைப்பதையும் தடுக்காமல் - பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடுவது என்றால், சாதாரண காரியமில்லை.