

தமிழக விவசாயிகள் யாரும் வறட்சி காரணமாக தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப் பதன் மூலம், விவசாயிகளுக்குத் துரோகம் இழைத்திருக்கிறது தமிழக அரசு. உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் தான் 82 பேர் மரணமடைந்தனர் என்றும், குடும்பப் பிரச்சினை காரணமாகத்தான் 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் என்றும் அந்தப் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
தமிழக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விவசாயிகள் பிரச்சினையில் அக்கறை காட்டவில்லை என்று தமிழக அரசைக் கண்டித்திருந்தது. விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் ஏப்ரல் 13 அன்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதுதொடர்பாக அளித்த பிரமாணப் பத்திரத்தில்தான் இத்தனை அலட்சியமான பதிலைத் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
விவசாயிகள் வறட்சி காரணமாக தற்கொலை செய்துகொள்ள வில்லை என்று சொல்லும் தமிழக அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, ரூ. 3 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று அதே பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது. உடல்நலக் குறைவால்தான் விவசாயிகள் இறந்தார்கள் என்றால் அவர்களுக்கு எந்த அடிப்படையில் நிதியுதவி அளிக்கப் பட்டது? வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகத்துக்கு ரூ.38 ஆயிரம் கோடிக்கு மேல் வறட்சி நிவாரணம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய இதே தமிழக அரசுதான், வறட்சி காரணமாக விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்கிறது. இதை எப்படி எடுத்துக்கொள்வது?
இந்தியா முழுவதும் விவசாயிகள் எதிர்கொள்ளும் துயரங்கள் எண்ணற்றவை. 1995 முதல் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் 2014-ல் 895 பேரும், 2015-ல் 606 பேரும் தாங்க முடியாத கடன் சுமையுடன் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு மூன்றே மாதங்களில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்ததை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. கடந்த சில மாதங்களில் இறந்த விவசாயிகள் 26% முதல் 120% வரையிலான வட்டி விகிதத்தில் கடன் வாங்கி, வறட்சி காரணமாகத் திருப்பிக் கட்ட முடியாமல் தவித்தவர்கள் என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை தெரிவிக்கிறது.
தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவரும் ஆளும் அதிமுக அரசு, தமிழர்களின் பிரச்சினைகளைக் கிஞ்சித்தும் கண்டுகொள்வதில்லை. காவிரி டெல்டா பகுதிகளில் நிகழ்ந்த விவசாயிகளின் தற்கொலையை மூடி மறைப்பதில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு எப்போதுமே முனைப்புடன் செயல்படும். பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் இந்த நிலைப்பாடு அதன் நீட்சிதான். இது எந்த விதத்தில் நியாயம் ஆட்சியாளர்களே?