கொஞ்சம் மூச்சுவிடலாம்

கொஞ்சம் மூச்சுவிடலாம்
Updated on
1 min read

பொருளாதார மந்த நிலை, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் எனத் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், சற்றே ஆறுதலாக ஓரிரு செய்திகள் வரத் தொடங்கியிருக்கின்றன. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் எதிர்பார்த்தபடி 5%-க்கும் அதிகமாக இல்லாமல், நடப்பு நிதியாண்டின் (2013-14) முதல் பாதியில் வெறும் 4.6% ஆகத்தான் இருந்தது (கடந்த ஆண்டு இது 5%). கடந்த 10 ஆண்டுகளில் இதுதான் மிகக் குறைந்த அளவு என்று அப்போது கூறப்பட்டது. பொதுவான பொருளாதாரச் சூழலில் மாற்றமில்லை. ஆனால், ஒரு சில துறைகளில் நம்பிக்கையூட்டும் விதத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

மொத்தவிலைக் குறியீட்டெண் அடிப்படையிலான விலைவாசியும் சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான விலைவாசியும் டிசம்பரில் குறைந்துள்ளன. நவம்பரில் 7.52% ஆக இருந்த மொத்தவிலைக் குறியீட்டெண் அடிப்படையிலான விலைவாசி உயர்வு, கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு 6.16% ஆகக் குறைந்திருக்கிறது. அதே காலகட்டத்தில் சில்லறை விற்பனை விலைவாசி உயர்வு 11.6%-ல் இருந்து 9.87% ஆகக் குறைந்தது. காய்கறிகளின் விலை - அதிலும் குறிப்பாக வெங்காயம் - வெகுவாகச் சரிந்ததால் இது சாத்தியமாகி இருக்கிறது. அதேசமயம், இந்த விலைவாசிக் குறைவு எல்லாத் துறைகளிலும் இல்லை, குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே நடந்திருக்கிறது. உணவுப் பண்டங்களிலேயே பால், பால்படுபொருள்கள், முட்டை ஆகியவற்றின் விலை குறையவில்லை. உணவு தானியங்கள், எரிபொருள்கள் நீங்கலான மையமான பொருளாதாரப் பண்டங்களின் விலை குறைவதற்குப் பதிலாக உயர்ந்துவருகிறது. எனவே, பொருளாதார நிபுணர்கள் மகிழ்ச்சியடைய முடியாது. வட்டி வீதத்தை இந்திய ரிசர்வ் வங்கி குறைக்க இந்த விலைவாசி மாற்றம் போதுமானதல்ல. எனவே, அதன் பணக் கொள்கையில் பெரிய மாறுதல் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், கொஞ்சம் ஆறுதல் அடையலாம்.

இன்னொரு நல்ல விஷயமும் நடந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மதிப்பிடப்பட்ட நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை மீள் ஆய்வு செய்து, மேலும் உயர்த்தியிருக்கிறது மத்திய புள்ளிவிவரத் துறை. பொதுவாக, இது எல்லா நாடுகளிலும் நடைபெறுவது. தொடக்கத்தில் கிடைக்கும் புள்ளிவிவரங்களைக் கொண்டு நாட்டின் வளர்ச்சி வீதத்தை முதலில் கணிப்பார்கள். சில மாதங்கள் பொறுத்து எல்லாத் துறைகளிலிருந்தும் திரட்டப்படும் தரவுகளைக் கொண்டு துல்லியமாகக் கணக்கிடும்போது அந்த மதிப்புகள் மாறும். அப்படிக் கணித்ததில், 2011-12-ம் ஆண்டில் 6.2% என்று கணிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி வீதம் உண்மையில் 7% முதல் 7.75% வரை இருந்திருக்கிறது. 2012-13-ல் 5% முதல் 5.5% வரை இருந்திருக்கிறது. இது ஆரோக்கியமான வளர்ச்சி.

எவ்வளவோ இடர்களுக்கும் அலட்சியங்களுக்கும் மத்தியில் நிகழ்ந்திருக்கும் இந்த மாற்றத்தை அரசு தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதே வேளையில், இந்த வளர்ச்சி சாமானியர்களின் வாழ்வில் எதிரொலிக்கும் வகையில், துயர் நீக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும். ஏனெனில், எண்களில் அல்ல; சாமானியனின் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும் நாட்டின் வளர்ச்சி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in