சமூகச் சுத்திகரிப்பு!

சமூகச் சுத்திகரிப்பு!

Published on

அரசியல் ஊழல்மயமாகிவிட்ட நிலையில், ஓட்டு அரசியல் முறையால் என்ன பயன்; தேர்தல் அல்லது வாக்குச்சீட்டால் என்ன பயன் என்ற கேள்விகளுக்கு அவ்வப்போது நம்பிக்கை தரும் பதில்கள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. பல தசாப்தங்களாக அரசியல் கட்சிகளால் திட்டமிட்டு இழுத்தடிக்கப்பட்ட லோக்பால் சட்டம், அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டதை, சமீபத்திய டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் கொடுத்த ஊழலுக்கு எதிரான சவுக்கடியிலிருந்து எப்படிப் பிரித்துப் பார்க்க முடியும்?

மக்கள் எதிர்பார்க்கும், ஊழலுக்கு எதிரான கடுமையான அமைப்பாக லோக்பாலை உருவாக்க இந்தச் சட்டம் போதாது; இன்னும் நிறைய கூறுகளை உள்ளடக்கியதாக அது மாற வேண்டும் என்றாலும், ஊழலுக்கு எதிரான பயணத்தில் நிச்சயம் இந்தச் சட்டம் ஒரு மைல்கல். நிச்சயம், “இந்த அமைப்புக்கான உறுப்பினர்கள் அரசால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் - அதாவது, ஆளுங்கட்சியால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; ஆகையால், மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்டே இது இருக்கும். இதற்கெனத் தனி விசாரணை நீதி அமைப்பு இல்லை; மத்தியப் புலனாய்வு அமைப்பு ஏற்கெனவே எப்படி அரசியல்வாதிகள் கைகளில் ஆட்டுவிக்கப்படுகிறதோ, அப்படித்தான் இதுவும் ஆட்டுவிக்கப்படும். இன்னும் அது இல்லை, இது இல்லை; ஒட்டுமொத்தத்தில், இந்த அமைப்பால் எந்தப் பிரயோஜனமும் இல்லை” என்பன போன்ற வாதங்களில் அர்த்தம் இல்லை என்றே தோன்றுகிறது.

நம்முடைய அமைப்புகளில் ஓட்டைகள் இருக்கின்றன; ஆனால், அவை செயல்படவே இல்லை என்று சொல்லி நிராகரித்துவிட முடியாது; அவற்றால்தான் நாடு இயங்கிக்கொண்டிருக்கிறது. சட்டங்கள் என்ன மாற்றத்தை உருவாக்கும் என்பதற்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் சமீபத்திய உதாரணம். ஆகையால், அவநம்பிக்கையைக் காட்டிலும் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் நாம் விரும்பும் அமைப்பாக லோக்பாலை உருவாக்கக் கூடும். அதே சமயம், அரசு இப்போதைக்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய சில சீர்திருத்தங்கள் இருக்கின்றன. மாநில அளவிலும் உடனடியாக லோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்க சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுத்தல், ஊழலை அம்பலப்படுத்தும் விசிலூதிகளுக்குச் சட்டபூர்வப் பாதுகாப்பு அளித்தல் ஆகியவை அவற்றில் முக்கியமானவை.

ஊழலுக்கு எதிராகப் பேசும் இந்த நேரத்தில், இன்னொரு விஷயம்பற்றியும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. அது அரசும் அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமும் மட்டும்தான் ஊழலில் ஈடுபடுகின்றனரா என்பது. ஏனென்றால், ஒட்டுமொத்த ஊழல் ஒழிப்பு என்பது சட்டங்களின் கையிலோ, நீதி அமைப்புகளின் கையிலோ இல்லை; அது ஒட்டுமொத்த சமூகத்தின் கையிலும் இருக்கிறது. அதற்கான விதை ஒவ்வொரு தனிமனித மனத்திலும் இருக்கிறது. ஆக, சமூகச் சுத்திகரிப்பு இல்லாமல், முழு ஊழல் ஒழிப்பு சாத்தியம் இல்லை. நம்முடைய செயல்பாடுகளில் அறநெறிகளைப் பின்பற்றாமல், சமூக தர்மத்தைப் பற்றிப் பேசுவதில் அர்த்தம் இல்லை. ஆக, பயணம் நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும்.

இந்த நேரத்தில் எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டு, ஒருவருக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. நன்றிகள் அண்ணா ஹசாரே!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in