Published : 27 Jan 2017 10:37 AM
Last Updated : 27 Jan 2017 10:37 AM

ஒபாமா கொடுத்துச்சென்ற இன்னொரு செய்தி!

அதிபர் பதவிக்காலம் முடித்து விடைபெறும் தருணத்தில் குறிப்பிடத்தகுந்த ஒரு உத்தரவைப் பிறப்பித்துச் சென்றிருக்கிறார் ஒபாமா. அமெரிக்காவின் வெளியுறவுத் துறை ஆவணங்களை 'விக்கிலீக்ஸ்' இணையதளத்துக்குக் கசியவிட்ட செல்ஸி மேனிங்குக்கு விதிக்கப்பட்டிருந்த 35 ஆண்டு கால சிறைத் தண்டனையைக் குறைக்கும் உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் ஒபாமா. ப்ராட்லி எட்வர்ட் மேனிங் எனும் இயற்பெயர் கொண்ட செல்ஸி, ஹார்மோன் கோளாறுகள் காரணமாகத் திருநங்கையாக மாறியவர். அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொள்பவர்.

ஆண்களின் சிறையில் வைக்கப்பட்டிருந்த சமயத்தில் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றவர் செல்ஸி. ஏற் கெனவே, ஆறு ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கும் அவர், தண்டனைக் குறைப்பைத் தொடர்ந்து வரும் மே மாதம் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஒபாமா அவருக்குத் தண்டனைக் குறைப்புதான் வழங்கியிருக் கிறாரே தவிர, அவருக்கு மன்னிப்பு வழங்கவில்லை என்று வெள்ளை மாளிகை குறிப்பிட்டிருக்கிறது. "செல்ஸிக்குத் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது" என்று ஒபாமா கூறியிருக்கிறார். தன் மீதான 22 குற்றச்சாட்டுகளில் 10 குற்றச்சாட்டுகளை செல்ஸி ஒப்புக்கொண்டதற்குப் பிறகு சிறையில் அவர் இருந்திருப் பதைத் தனது பிரதான வாதமாக ஒபாமா முன்வைத் திருக்கிறார்.

சுமார் 2,50,000 அரசுத் தகவல் பரிமாற்றங்கள், 5,00,000 ராணுவ அறிக்கைகள், இராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் எடுக்கப்பட்ட காணொலிகள், குவந்தனாமோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பான ஆவணங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக வேவுபார்த்தல், மோசடி, திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. 2010-ல் விக்கிலீக்ஸ் மூலமாகவும், இணையம் வழியாகவும் இந்தத் தகவல்கள் வெளியாகி உலகத்தையே அதிரவைத்தன. இதையடுத்து, ஒபாமா வெளியுறவுத் துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டனை, பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி சமாதானப்படுத்த வேண்டிவந்தது. அந்த அளவுக்கு நட்பு நாடுகள் தொடர்பாகச் சங்கடம் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பேசியிருந்தார்கள்.

லண்டனில் ஈக்வெடார் நாட்டின் தூதரக அலுவலகத்தில் தங்கியிருக்கும் 'விக்கிலீக்ஸ்'நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, "செல்ஸி மேனிங்கை விடுவிக்க முன்வந்தால், அமெரிக்காவுக் குத் திரும்பத் தயாராக இருக்கிறேன்" என்று முன்னர் தெரிவித்திருந்தார். அந்த முடிவில் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ரஷ்யாவுடன் தொடர்புடைய ஹேக்கர்களால் திருடப்பட்ட, ஜனநாயகக் கட்சியின் நிர்வாக அமைப்பான 'ஜனநாயக தேசியக் குழு'வின் மின்னஞ்சல்களை வெளியிட்டதால் 'விக்கிலீக்ஸ்'க்கு மேலும் சிக்கல் ஏற்பட்டிருப்பதும் ஹிலாரியின் தோல்விக்கான காரணங்களில் ஒருவராக அசாஞ்சே இப்போது பேசப்படுவதும் கவனிக்கத்தக்கது. இந்தப் பின்னணியிலும் ஒபாமா இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருப்பதே பேச வைத்திருக்கிறது. எதிர்க் கருத்து கொண்டவர்களுக்கான உரிமைகளையும் மதிக்கும் நாடு எனும் நல்லெண்ணத்தை உருவாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவும் இதைக் கருதலாம். அடுத்த அதிபருக்கு மறைமுகமாகச் சில செய்திகளைச் சொல்லிச் செல்லும் நடவடிக்கையாகவும் கருதலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x