

தனது உத்தரவுகள் பின்பற்றப்படாதபட்சத்தில் அதை அவமதிப்பாக எடுத்துக்கொண்டு தண்டிக்கும் அதிகாரம் தனக்கு அளிக்கப்பட வேண்டும் என்று சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கோரியிருப்பது அநாவசியமானது. தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக, தேர்தலில் தோல்வியடைந்த முக்கிய கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாக முன்வைக்கப்பட்டிருக்கும் இந்தக் கோரிக்கை அபத்தமானது என்றே சொல்ல வேண்டும்.
ஜனநாயக நடைமுறைகள் மேம்பாடு அடைந்துவரும் காலகட்டத்தில், தண்டிக்கும் அதிகாரம் நீதித் துறையிடம் இருப்பது தொடர்பாகக்கூட தற்போது விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971-ன் கீழ் இயங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்றங்கள்கூட, அந்தச் சட்டத்தை மிகக் குறைவாகவே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப் பட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். சிவில் மற்றும் குற்றவியல் அவமதிப்புகளுக்குத் தண்டனை வழங்கும் அளவுக்கு, ஒரு உயர் நீதிமன்றம் அளவுக்கு தனக்கு அதிகாரம் வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விரும்புகிறது.
மக்களின் பெரும் நம்பிக்கையையும், பாரபட்சமின்றி இயங்கும் அமைப்பு எனும் நற்பெயரையும் பெற்றிருக்கும் தேர்தல் ஆணையம் இவ்வாறு கோருவது நமது வெளிப் படையான, ஜனநாயக அடிப்படையிலான அமைப்பைப் பரிகாசம் செய்வதுபோன்றது. தேர்தல் ஆணையத்தை யாரேனும் அவதூறு செய்துவிட்டாலோ, அதன் அதிகாரத்தைக் குறைத்து மதிப்பிட முயன்றாலோ, அவருக்குக் குற்றவியல் அடிப் படையில்அவமதிப்புக்குத் தண்டனை வழங்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டால் அது பேச்சு சுதந்திரத்துக்கும் நியாயமான விமர்சனத்துக்கும் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
விமர்சனங்களுக்கு வெளிப்படையாக எதிர்வினை ஆற்று வதில்லை எனும் மரபு நீதிபதிகளிடம் உண்டு. புகழ்பெற்ற நீதிபதி டென்னிங் பிரபு குறிப்பிட்டதுபோல், நீதிபதிகள் வெளிப் படையான சர்ச்சையில் இறங்க முடியாது. ஆனால், தேர்தல் ஆணையமோ, தேர்தல் நடத்தப்படும் விதம் தொடர்பாக ஏதேனும் குற்றச்சாட்டு எழுந்தால் அதற்குக் கடுமையாக எதிர் வினை செய்கிறது. தேர்தல் நடத்தப்படும் விதம் தொடர் பாகச் சில அரசியல் கட்சிகள் நியாயமற்ற குற்றச் சாட்டுகளை வைக்கின்றன என்பது உண்மைதான். குறிப் பாக, தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.
அதேசமயம், பல்வேறு தரப்பினரிடமிருந்து விமர்சனங் களும் சந்தேகங்களும் எழுந்ததை அடுத்துதான், வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கைச் சோதனை (விவிபிஏடி) போன்ற சில ஆக்கபூர்வ மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. எனவே, அவமதிப்புக்குத் தண்டனை எனும் பெயரில் விமர்சனத்தை நசுக்குவது, ஆக்கபூர்வமான எதிர்வினைகளை முற்றிலும் ஒடுக்கிவிடும் என்பதைத் தேர்தல் ஆணையம் மறந்துவிடக் கூடாது!