மர்ம மரணங்கள் என்று உண்டா?

மர்ம மரணங்கள் என்று உண்டா?
Updated on
1 min read

எல்லா விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டு வரவேற்கும் வகையில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகளைக் காக்க கொண்டுவந்த அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது மன்மோகன் சிங் அரசு. முன்னாள் பிகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஷீத் மசூத், ஜெகதீஷ் சர்மாவில் தொடங்கி இன்னும் அடுத்தடுத்து உள்ளே செல்ல வரிசையில் காத்திருக்கும் 4,575 அரசியல்வாதிகளின் பட்டியலைப் பார்க்கும்போது, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரதான அம்சத்தை ரத்துசெய்யும் உத்தரவு’ , சின்ன அளவிலேனும் இந்திய அரசியல் சுத்தமாக உதவும் என்ற நம்பிக்கை எழுகிறது. நீதித்துறைக்கு நன்றி.

இந்த விவகாரத்துக்குப் பின் லாலு தொடர்பாக வரும் தொடர் செய்திகளில் ஒரு செய்தி நம் கவனத்தைக் கோருகிறது: இந்த வழக்கில் லாலுவுக்கு எதிரான முக்கிய சாட்சிகளில் 7 பேர் மர்மமான முறையில் இறந்திருக்கின்றனர். சாட்சிகள் உமாசங்கர், விவேகானந்த் சர்மா, விஸ்வா, திவாரி ஆகியோர் வெவ்வேறு விபத்துகளில் உயிரிழந்திருக்கிறார்கள்; ராம்ராஜ், ஹரீஷ் கண்டல்வால் இருவரும் சந்தேகத்துக்கிடமான வகையில் இறந்திருக்கிறார்கள்; மனு முண்டா கொல்லப்பட்டிருக்கிறார்; மேலும், ஒருவர் காணாமல்போயிருக்கிறார்.

செல்வாக்கின் உச்சத்தில் இருக்கும் ஒருவருடைய அரசியல் எதிர்காலத்தை நிர்மூலமாக்கும் வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகள் பலருக்கு இப்படி துர்முடிவு ஏற்படுவது இயல்பானதாகத் தோன்றவில்லை. ஏற்கெனவே லாலுவின் மகள் ராகினியைக் காதலித்த அபிஷேக்கின் மர்மமான மரணத்தில் லாலுவுக்குத் தொடர்பு இருக்கிறது என்று கூறி நடத்தப்பட்ட போராட்டங்கள் இங்கு நினைவுகூரத் தக்கவை.

இந்தியாவில், வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் மர்ம மரணங்கள் யாருடைய கவனத்தையும் கோராமலேயே மண்ணுக்குள் செல்கின்றன. வருங்கால வைப்புநிதி ஊழல் வழக்கின் பிரதான எதிரியான ஆசுதோஷ் ஆஸ்தானா, தாஸ்னா சிறையில் 2009-ல் மர்மமான முறையில் இறந்தார். மருத்துவ அதிகாரிகள் இருவரின் கொலை வழக்கில் எதிரியான ஒய்.எஸ். சச்சான் 2011-ல் லக்னோ சிறையில் இறந்துகிடந்தார். 2012-ல் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தில் நடந்த ஊழலில் பிரதான எதிரியான சுனில் வர்மாவும் மர்மமான முறையில் இறந்தார். அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முக்கிய எதிரியான முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் உதவியாளார் சாதிக் பாட்சா 2011-ல் சந்தேகத்துக்குரிய வகையில் தற்கொலை செய்துகொண்டார். திகார் சிறையில் 2012-ல் மட்டும் 18 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

முக்கியமான வழக்குகளில் தொடர்புடையவர்களின் மர்ம மரணங்கள் இந்தியாவின் குற்றவியல் வழக்கு விசாரணை முறை எதிர்கொள்ளும் தீவிரமான பிரச்சினைகளில் ஒன்றாக மாறிவருகிறது. இந்த மரணங்களின் பின்னுள்ள உண்மைகள் தோண்டி எடுக்கப்பட வேண்டும்; நீதித் துறை ஏன் லாலுவிலிருந்து தொடங்கக் கூடாது?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in