Published : 18 Aug 2016 08:38 AM
Last Updated : 18 Aug 2016 08:38 AM

நாடு இதைத்தான் எதிர்பார்க்கிறது!

நாடாளுமன்றத்தின் மழைக் காலத் தொடர், வழக்கமான முட்டல் மோதல் போக்குகளை வெற்றிகரமாகக் கடந்து சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத்தின் மழைக் காலத் தொடரில், வழக்கமாக மக்களவைக்காக ஒதுக்கப்படும் நேரத்தைவிட, அதிகமான நேரம் (101%) மக்களவை செயல்பட்டுள்ளது. மாநிலங்களவையும் தனது நேரத்தில் 96%-த்தைப் பயன்படுத்தியுள்ளது என்கின்றன பி.ஆர்.எஸ். ஆய்வு மையத்தின் புள்ளிவிவரங்கள். மற்ற நாடுகளோடு ஒப்பிட்டால், இந்தியாவின் நாடாளுமன்றத்தில் குறைவான நிகழ்வுகள்தான் நடைபெறுகின்றன. அந்தப் பணிகளையும் செய்யவிடாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களை முடக்குகிற போக்கு கடந்த சில வருடங்களாக இருந்துவந்துள்ளது. அதனால், நாடாளுமன்றப் பணிகளும் விவாதங்களும் பாதிக்கப்பட்டன. ஆனால், இந்த மழைக் காலத் தொடரில் மனநிறைவான விவாதம் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்றத்தின் பணிகளைத் தடையில்லாமல் கொண்டுசெல்லும் விஷயத்தில், அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒரு இணக்கமான நிலைக்கு வந்துள்ளன என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றம் 14 மசோதாக்களை நிறைவேற்றி யிருந்தாலும், அரசியல் சாசனத்தின் 122-வது திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றியது ஒரு தெளிவான சாதனை. சரக்கு மற்றும் சேவைகள் வரியை அறிமுகப்படுத்துவதற்கான கடைசித் தடையையும் அது உடைத்தது. நின்றுபோயிருந்த இந்தியாவின் வரி நிர்வாகத்தைச் சீரமைக்கிற நடைமுறையை அது மீண்டும் செயல்படவைத்துள்ளது. சமூகத்தைப் பயன்படுத்தி சொத்து சேர்க்கிற நபர்களும் அமைப்புகளும் சமூகத்துக்கு எதையும் செய்யாமல் இருக்கின்றனர். அத்தகைய செயல்களை அனுமதிப்பதன் மூலம் பொருளாதார முன்னேற்றத்தைத் தடுக்கிற தேவையற்ற நடைமுறைகளை ஒழித்துக்கட்டுவதில் நமது நாட்டுக்கு இருக்கிற உறுதியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருக் கின்றனர். அரசாங்கத்தில் இருக்கும்போது ஆதரவாகவும் ஆட்சியில் இல்லாதபோது அதை எதிர்த்தும் செயல்பட்ட முக்கியமான இரண்டு தேசியக் கட்சிகளின் முரண்பட்ட போக்கும் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, பாஜக இந்த விவகாரத்தில் எதிர்ப்பு நிலை எடுத்தது. அதற்கு முன் காங்கிரஸ் கட்சியும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடந்தபோது ஆரம்பத்தில் இதை எதிர்த்தது. இப்படிப்பட்ட எதிர்ப்பை முடிவுக்குக் கொண்டுவந்த பெருமை இரண்டு கட்சி களுக்குமே உரியது. இத்தகைய ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மேலும் அதிகரிக்க, அரசாங்கம்தான் முன்முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலகட்டத்தில் பாஜக மாநிலங்களில் இருந்த நிலை வேறு. காங்கிரஸ் மாநிலங்களில் இன்று இருக்கும் நிலை வேறு. மாநிலங்களின் சட்டமன்றங்களில் பணிகள் முறையாக நடைபெறுகின்றன. ஆனால், நாடாளுமன்றத்தில்தான் திரும்பத் திரும்பத் தள்ளிவைக்கும் அளவுக்கு நெருக்கடிகள் தரப்படுகின்றன. மாநிலங்களவையில் போதுமான எண்ணிக்கையில் பாஜகவுக்கு உறுப்பினர்கள் இல்லை. அதனால்தான் பாஜக அரசுக்கு நாடாளுமன்றத்தை நடத்திச் செல்வது சவாலாக இருக்கிறது. ஒருவிதத்தில் இந்த நெருக்கடி நல்லதுதான். முக்கியமான பிரச்சினைகளின் மீது விவாதங்கள் தேவை என எதிர்க்கட்சிகள் வைக்கும் கோரிக்கைகளை பாஜக மதிக்க வேண்டியிருக்கிறது. மற்றவர்களையும் இணைத்துக்கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்படுகிறது.

ஒன்றுக்கொன்று எதிரான கொள்கைகளைக் கொண்டதாகக் கட்சிகள் இருக்கலாம். ஆனால், முக்கியமான சட்டங்கள், பிரச்சினைகளில் கருத்தொற்றுமையை எட்டுவது என்பது ஜனநாயகம் செயல்படுவதற்கு மிக அவசியமான நடைமுறை என்பதை எல்லாக் கட்சிகளும் உணர வேண்டும். எந்தப் பிரச்சினைக்குமான தீர்வு பேச்சுவார்த்தையில் இருக்கிறது என்பதை நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு உணர்த்த வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x