

எத்தனையோ வன்செயல்களையும் கோரக் கொலைகளையும் தன் வரலாற்றில் பார்த்துவிட்ட நைஜீரியாவை அச்சத்தில் உறையவைக்கும் கொடூரம் சமீபத்தில் நிகழ்ந்திருக்கிறது.
பூணி யாடி என்ற ஊரில் உறைவிடப் பள்ளியில் இரவு தூங்கிக்கொண்டிருந்த 59 குழந்தைகள் படுபாதகமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். கொன்றவர்கள் ‘போகோ ஹராம்’ என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் - மேற்கத்தியக் கல்வி நம்மைப் பாவத்தை நோக்கி இட்டுச்செல்வதால், அதைக் கற்கவும் கற்பிக்கவும் கூடாது என்று சொல்கிறவர்கள். கொலைகாரர்கள் அந்த உறைவிடப் பள்ளியின் நிர்வாக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி அதைக் கொளுத்தியிருக்கிறார்கள். அப்போது கண் விழித்த மாணவர்கள் விடுதியிலிருந்து தப்ப முயன்றபோது, விடுதி அறைகளைப் பூட்டிவிட்டு, பெட்ரோல் குண்டுகளை உள்ளே வீசியிருக்கின்றனர். அப்போது ஏற்பட்ட தீக்கு அஞ்சி ஜன்னல் வழியாகவும் கதவுகள் வழியாகவும் வெளியே தப்பியோட முடிந்த சிறுவர்கள் கத்தியால் வெட்டப்பட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர்.
செய்தியை அறிந்ததும் நைஜீரியா முழுவதுமே அதிர்ச்சியில் உறைந்தது. தலைநகர் அபுஜாவில் கூடிய நாடாளுமன்றம், இறந்த மாணவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது. நாடாளுமன்ற சபாநாயகர் அமினு வாஜிரி தும்புவால் கண்ணீர் பெருக, துக்கம் தொண்டையை அடைக்கப் பேசினார். அவை நடவடிக்கைகள் அன்று ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டன. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நைஜீரிய அரசு வடக்கு மாநிலங்களில் செயல்பட்டுவந்த ஐந்து மேல்நிலைப் பள்ளிகளை மூடிவிட்டது. அந்த மாணவர்கள் வேறு பள்ளிக்கூடங்களுக்கு மாற்றப்படுகின்றனர். நைஜீரியாவின் வட கிழக்குப் பகுதியில் மோதல் ஏற்பட்டிருக்கிறது. 650-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவின் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருந்தபோதிலும் 17 கோடி மக்களில் மிகச் சிலரே வசதியாக வாழ்ந்துவருகின்றனர். மத அடிப்படையிலும் இன அடிப்படையிலும் மக்கள் பிளவு பட்டிருக்கின்றனர். நாட்டின் வட கிழக்கு மாநிலங்கள் அரசால் புறக்கணிக்கப்பட்டதால் வளர்ச்சியே இல்லாமல் இருக்கின்றன. இஸ்லாமிய மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், ‘போகோ ஹராம்’ இயக்கத்தவர்கள் அவர்களிடையே தங்களுடைய செல்வாக்கை வளர்க்கப் பார்க்கின்றனர். ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகளில் மிகப் பெரிய ராணுவத்தைக் கையில் வைத்திருந்தும், அழைத்தால் உதவிக்கு வரச் சில நாடுகள் தயாராக இருந்தபோதும், பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் நைஜீரிய அரசு போதிய முனைப்பு காட்டவில்லை. ‘போகோ ஹராம்’ குழுக்களை அடக்க எங்களிடம் நைஜீரிய அரசு உதவி எதையும் கேட்கவில்லை என்று சாட் அரசு கூறுகிறது.
நைஜீரியாவில் 1967 முதல் 1970 வரை நடந்த பயாஃப்ரா உள்நாட்டுப் போர் நினைவுக்கு வருகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரை நைஜீரியா இழந்த போர் அது. ‘போகோ ஹராம்’ அமைப்பை வளர விடுவது இன்னொரு உள்நாட்டுப் போருக்கே வழிவகுக்கும். அப்படி ஒரு போரை நைஜீரியா ஒருபோதும் தாங்காது. ‘போகோ ஹராம்’ அமைப்பை ஒடுக்குவதே நைஜீரியாவுக்கும் ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் நல்லது!