

உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியத்துடன் ஒப்பிடும் வகையில் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட’ ஊதியமும் அமைய வேண்டும் என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை நியமித்த குழு பரிந்துரை செய்திருக்கிறது. இது மிகவும் பொருத்தமான பரிந்துரை.
இப்போது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வழங்கும் ஊதியத்தைவிட பிகார், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களில் உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு மாநில அரசு நிர்ணயித்துள்ள ஊதியம் அதிகமாக இருக்கிறது. எனவே, மத்திய அரசின் வேலைவாய்ப்புத் திட்டங்களுக்குத் தொழிலாளர்களின் ஆதரவு குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
மாநில அரசுகள் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஊதியம் மட்டுமல்ல, விலைவாசி உயர்வால் ஆண்டுதோறும் அதிகரித்துவரும் பணவீக்க விகிதத்துக்கு ஏற்பவும் இந்த ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை இந்த ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கை தெரிவிக்கிறது.
வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்கள் வேலைவாய்ப்பும் இன்றி, வருமானமும் இன்றி தவிக்கக் கூடாது என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டதுதான் தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டம். தொடக்கத்தில் வெகு உற்சாகமாக வரவேற்கப்பட்ட இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தில், இப்போது பழங்குடியினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் பங்கேற்பது குறைவாக இருப்பது இத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களிலிருந்து தெரிகிறது.
பழங்குடிகள் வசிக்கும் பகுதிகளில் இந்தத் திட்டம் தீவிரமாக அமல் செய்யப்படாததால் அவர்களுடைய பங்களிப்பு குறைந்துவருகிறது. அவர்களுக்கேற்ற திட்டங்களை அடையாளம் காண்பதில் அரசு அதி காரிகளுக்குள்ள அலட்சியம்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். பழங்குடிகளுக்குத் தங்கள் பகுதிக்கான திட்டங்களை அடையாளம் காண்பது எளிதான பணியல்ல என்பதால், இது அரசின் கடமையாகிறது.
தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பொறுத்தவரை இந்தத் திட்டத்தின் மூலம் அரசு தரும் ஊதியத்தைவிட, அதிக ஊதியம் தரும் மாற்று வேலைவாய்ப்புகளுக்கு வழி இருப்பதால், அவர்களுடைய பங்களிப்பும் குறைகிறது என்று கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் ஆரம்பத்தில் ஆடவர் பங்களிப்பு அதிகம் இருந்தது. இப்போது படிப்படியாகக் குறைந்து, அதிக எண்ணிக்கையில் பெண்கள்தான் இந்த வேலைகளுக்குத் தொடர்ந்து செல்கின்றனர்.
கிராமங்களில் விவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைப்பது குறைந்துவருகிறது. அதிக ஊதியம் தரும் வேலைகளுக்காக நகரங்களை நாடிச் செல்வதாலும், விவசாய வேலைகளைவிட தேசிய வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கு அதிக உடலுழைப்பு தேவையில்லை என்பதாலும், விவசாய வேலைகளுக்கு ஆள்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இப்போது எல்லா மாநிலங்களிலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
அரசின் வேலைவாய்ப்புத் திட்டம் கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு வழிகாண வேண்டுமே தவிர, விவசாயத்தையே வேரறுக்கும் விதத்தில் அமைந்துவிடக் கூடாது. குறைந்தபட்ச ஊதியத்தை மறுபரிசீலனை செய்யும் இந்தச் சமயத்திலாவது, நிலம் வைத்திருப்போரின் யோசனைகளையும் கேட்டுச் செயல்படுத்துவது விவசாயத்துக்கு நல்லது.