

பழங்குடி மக்களின் வலி நிறைந்த வாழ்க்கையைத் தனது எழுத்துகளின் மூலம், வெளியுலகின் பார்வைக்குக் கொண்டுவந்த எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி, வியாழன் அன்று மறைந்தார். பழங்குடிகள், பட்டியல் இனத்தவர், பிழைப்புத் தேடி வெளிமாநிலங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் என்று தனது படைப்புகளில் மஹாஸ்வேதா தேவி முன்வைத்த கதாபாத்திரங்கள், சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை, காலங்காலமாகத் தொடரும் அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறையைப் பேசியவை.
கொல்கத்தாவின் பிஜாய்கர் எனும் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார். அதே காலகட்டத்தில் சுமித்ரா தேவி எனும் புனைபெயரில் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். 1956-ல் அவரது முதல் புத்தகமான ‘ஜான்சிர் ராணி’(வங்காள மொழி) வெளிவந்தது. 1957-ல் அவரது முதல் நாவலான ‘நாதி’ வெளியானது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நான்கு நாவல்களை அவர் எழுதினார். மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து நாடகங்கள், ஏராளமான கட்டுரைகள் என இவரது படைப்புகளின் வீச்சு நீள்கிறது. ‘மாஸ்டர் சாப்’, ‘சோட்டி முண்டா ஆர் தார் தீர்’,
‘ஆரண்யேர் அதிகார்’ உள்ளிட்ட ஏராளமான படைப்புகள் புகழ்பெற்றவை. அவரது பல படைப்புகள் திரை வடிவம் பெற்றதன் மூலம் அவரது பார்வை பரந்துபட்ட மக்கள் திரளைச் சென்றடைந்தது. குறிப்பாக, ‘ஹஜார் சவுரசீர் மா’, ‘ருடாலி’ போன்ற படங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்வையும், அவர்களுக்காக உழைப்பவர்களின் போராட்டத்தையும் சிறப்பாகச் சித்தரித்தன.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குற்றப் பரம்பரையினராக அறிவிக்கப்பட்டிருந்த லோதா பழங்குடியினரும், சபர் பழங்குடியினரும் தொடர்ந்து அனுபவித்துவந்த கொடுமைகளைப் பற்றி 1970-களில் அவர் எழுதத் தொடங்கினார். தலித் மக்கள், பெண்கள் படும் துயரங்களைப் பற்றியும் தொடர்ந்து எழுதினார். நக்ஸலைட்டுகளுக்கு உதவிசெய்வதாகக் குற்றம்சாட்டப்பட்டுத் துன்புறுத்தப்படும் பழங்குடிப் பெண்களின் கதைகளை முகத்தில் அறையும் நிஜத்துடன் பதிவுசெய்தார்.
‘திரெளபதி’ என்னும் சிறுகதையில், நக்ஸல்களுக்கு உதவிய தாகக் கைதுசெய்யப்படும் தோப்தி எனும் பழங்குடியினப் பெண், ராணுவ அதிகாரிகளால் பாலியல்ரீதியாகச் சித்திரவதை செய்யப்படுவாள். ஒரு கட்டத்தில் வெகுண்டெழும் அந்தப் பெண், தன் நிர்வாணத்தை வைத்தே ராணுவ அதிகாரியை மிரட்டுவதாக அந்தக் கதை முடியும். ‘சோளி கே பீச்சே’ என்னும் சிறுகதை, குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணை ஒரு புகைப்படக்காரர் படம் எடுத்துப் பத்திரிகையில் வெளியிட, அதனால் அந்தப் பெண் சந்திக்கும் அவமதிப்புகளையும், பாலியல் துன்புறுத்தல்களையும் பேசுகிறது. உடல் சார்ந்த வசீகரம் பெண்ணுக்கு எத்தகைய துயரங்களைத் தருகிறது என்பதை மையமாக வைத்து அவர் எழுதிய கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘பிரெஸ்ட் ஸ்டோரிஸ்’ என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. சமகாலப் பெண்ணியச் சொல்லாடலில் மிக முக்கியமான பதிவுகள் இவை.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் களத்தில் நின்று போராடியதுதான் பிற எழுத்தாளர்களிடமிருந்து அவரைத் தனித்துக் காட்டுகிறது. உராவ் பழங்குடியினர் நல அமைப்பு, அனைத்து இந்திய வந்துவா விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகளின் கீழ் பழங்குடிகளின் உரிமைக்காகப் போராடினார். இளம் வயதிலிருந்தே இடதுசாரி ஆதரவாளராக இருந்த அவர், மார்க்சிய அடிப்படைகளிலிருந்து விலகும் இடதுசாரி அரசுகளைக் கடுமையாக விமர்சித்தார். அரசியல் தலைவர்களுக்கு அவர் மீது பயம் கலந்த மரியாதை இருந்தது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் படைப்பின் மூலமாகவும் களப்பணிகள் மூலமாகவும் ஓங்கி ஒலித்த குரல் நின்றுவிட்டது. எனினும், அதன் எதிரொலி என்றென்றும் தொடரும்!