

புவி வெப்பமாதலின் பெயரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு உண்மையானவை?
வளரும் நாடுகள் மீது வளர்ந்த நாடுகள் நடத்தும் மறைமுகப் பொருளாதாரப் போர்களில் அவை ஒரு வகை என்ற வாதம் உண்மையோ என்கிற சந்தேகத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்துகின்றன வளர்ந்த நாடுகள்.
மழைக்காடுகள் என்றால், உடனே நினைவுக்கு வருபவை தென் அமெரிக்க நாடுகளில் பரந்துள்ள அமேசான் மழைக்காடுகள். இக்காடுகளின் பல்லுயிரியம் சிறப்பு கருதி, அவற்றை தேசியப் பூங்காக்களாக அறிவித்து, அங்கே சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று குரல்கொடுக்கின்றனர் உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழலியலாளர்கள். ஆனால், பொருளாதாரரீதியாகப் பின்தங்கியிருக்கும் தென் அமெரிக்க நாடுகளுக்கு வருமானம் தரும் வளங்களின் இருப்பிடமும் இந்தக் காடுகள்தான்.
இப்படித்தான் தன்னுடைய எல்லைக்குட்பட்ட வனப் பகுதியில் இருக்கும் பெட்ரோலிய வளத்தின் மூலம், தன் பொருளாதாரத்தைக் காத்துக்கொள்ள விரும்புகிறது ஈக்வடார்.
தொடக்கத்தில், “இந்தக் காடுகள் உங்கள் சொத்து மட்டும் அல்ல; அவை உலகின் சொத்து” என்று சொல்லி, நிதி அளிப்பதாகவும் கூறிய வளர்ந்த நாடுகள் ஒருகட்டத்தில் தங்கள் வார்த்தைகளைக் காற்றில் பறக்கவிட்ட நிலையில், இப்போது எண்ணெய்த் துரப்பணப் பணிகளில், இறங்கியிருக்கிறது ஈக்வடார்.
வெறும் ஒரு சதவீத வனப் பகுதியே இதனால் பாதிக்கப்படும் என்று ஈக்வடார் அதிபர் ரபேல் கோரியா கூறினாலும், உண்மையில், இப்பணிகளால் ஏற்படும் பாதிப்பின் வீச்சு அதிகம். ஆனால், இங்கே மௌனமாக வேடிக்கை பார்க்கும் வளர்ந்த நாடுகள் மறுபுறம், பசுமைத் தொழில்நுட்பம் என்ற பெயரில் லாப வேட்டை ஆட எவ்வளவு துடிக்கின்றன என்பதை அம்பலப்படுத்துகிறது அமெரிக்காவின் சமீபத்திய திட்டம்.
குளிர்பதனச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வாயுக்கள் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பவை; இந்த வாயுக்களுக்கு மாற்றாக அமெரிக்க நிறுவனங்கள் கண்டறிந்துள்ள புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது ஒபாமா நிர்வாகம்.
நாம் ஏற்கெனவே பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைக் காட்டிலும் பல மடங்கு கூடுதல் செலவு வைக்கக் கூடிய திட்டம் இது. உலக அளவில் இந்தியாவில் உள்ள குளிர்பதனச் சாதனங்களின் எண்ணிக்கை ஒரு சதவிகிதத்துக்கும் குறைவுதான். ஆனால், ஆசியாவில் 2020 வாக்கில் 10 கோடி குளிர்பதனச் சாதனங்கள் விற்பனையாகும் – அவற்றின் மதிப்பு ரூ. 1.30 லட்சம் கோடியாக இருக்கும் - என்ற சந்தை ஆய்வு அமெரிக்காவை இப்படி யோசிக்கவைத்திருக்கிறது.
சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தைப் பற்றிப் பெரிதாகப் பேசுகின்றன வளர்ந்த நாடுகள். ஆனால், அது யாருடைய சூழலுக்கு உகந்தது என்பதை இது உணர்த்துகிறது அல்லவா?