

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான போ சிலாய் வீழ்ந்திருக்கிறார். அவர் மீதான அதிகார துஷ்பிரயோகம், லஞ்ச - ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.
ஒருகாலத்தில் ஓஹோவென்று இருந்தவர் போ சிலாய். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிமன்றக் குழுவில் இடம் பெற்றிருந்த அவர், அதிகாரமிக்க 9 பேர் கொண்ட நிலைக்குழுவிலும் உறுப்பினராக இருந்தார். முக்கியமாக, மேற்கத்திய நாடுகளிடம் செல்வாக்கு பெற்ற அமைச்சராக இருந்தார்.
பிரிட்டன் தொழிலதிபர் நீல் ஹேவுட் கொலை வழக்கில் போ சிலாயின் மனைவி ஜூ கலாய் சிக்கிய பின்னர், போ சிலாயின் வாழ்க்கை சரியத் தொடங்கியது. மனைவியின் குற்றத்தை மறைத்தார் என்ற குற்றச்சாட்டில் சிக்கிய அவர், தொடர்ந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளிலும் மாட்டினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், நேற்று தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவை சீனாவோடு ஒப்பிடும் பலரும், முக்கியமான வேறுபாடுகளில் ஒன்றாகக் குறிப்பிடுவது... ஊழல்.
சீனாவும் ஊழலுக்கு அப்பாற்பட்ட நாடு அல்ல. தலைவர்கள் ஊழலில் வாரிச் சுருட்டுவதும் சிக்காத வரை ஆடம்பரத்தில் கொழிப்பதும் அங்கேயும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தியானென்மென் சதுக்கத்தில் 1989ல் சீனப் பல்கலைக்கழக மாணவர்கள் ஜனநாயக உரிமைகளுக்காக நடத்திய கிளர்ச்சியில், அவர்கள் முன்வைத்த பிரதான கோரிக்கைகளில் ஒன்று ஊழலை ஒழியுங்கள் என்பது. சர்வதேச அளவில் நடைபெறும் ஊழல்களைக் கணக்கெடுத்துப் பட்டியலிடும் ‘டிரான்ஸ்ஃபரன்ஸி இன்டர்நேஷனல்’ 2012-ல் எடுத்த கணக்கெடுப்பின்படி, ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில், உலக அளவில் சீனா 82-வது இடத்தில் இருக்கிறது. செர்பியா, டிரினிடாட் டொபாகோ, பர்கினாபாசோ, எல் சால்வடார், ஜமைக்கா, பனாமா, பெரு ஆகிய நாடுகளும் பட்டியலில் சீனாவுக்கு அருகில்தான் இருக்கின்றன. சீனாவில் முறைகேடுகளில் புழங்கும் தொகை மட்டும் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3% அளவுக்கு இருக்கும் என்கிறார்கள்.
இந்தியாவில் ஒவ்வோர் ஊழல் அம்பலமாகும்போதும், அதற்கான காரணமாக இந்தியாவின் ஜனநாயக ஆட்சிமுறையைச் சித்திரிக்கும் ‘புரட்சியாளர்கள்’உண்டு; சொல்லப்போனால், இந்தியப் பொதுப்புத்தியிலும் அப்படி ஓர் எண்ணம் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால், எல்லா ஆட்சிமுறைகளுக்கும் அப்பாற்பட்டது ஊழல் என்பதற்கு மேலும் ஓர் உதாரணமாகியிருக்கிறது போ சிலாயின் வாழ்க்கை!