

வெங்காயத்தின் விலை கணிசமாக ஏறிவிட்டது. கடந்த செப்டம்பரில் விலை கிலோ ரூ. 22. இப்போது ரூ. 70 - 100.
மக்களின் அத்தியாவசிய உணவுப் பொருள்களில் ஒன்றான வெங்காயம் இன்று மக்களை மிரட்டும் பொருளாக மாறியிருக்கிறது. மழை, எரிபொருள் விலை உயர்வு, பதுக்கல் ஆகியவை வெங்காய விலை உயர்வுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
இதற்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருக்கிறார். மக்கள் நலன் சார்ந்த எந்த விஷயத்தில்தான் இந்த அரசுக்கு சம்பந்தம் இருக்கிறது என்ற கேள்வி மனதில் எழுகிறது.
"நாங்களா வெங்காயம் விற்கிறோம்? வியாபாரிகளைக் கேளுங்கள்" என்று வெங்காய விலை உயர்வு பற்றிக் கேட்ட செய்தியாளர்களிடம் அவர் கூறியிருக்கிறார்.
தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் அளவுக்குச் சக்தி வாய்ந்த வெங்காயத்தின் அரசியல் முக்கியத்துவத்தை வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் உணர்ந்திருக்கிறார். விரைவில் நிலைமை சீரடையும் என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார். புதிய விளைச்சல் சந்தைக்கு வரவிருக்கும் நிலையில் இரண்டு மூன்று வாரங்களில் இப்பிரச்சினை தீரும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிரத்தில் நடைபெறுவதாகச் சொல்லப்படும் பதுக்கலுக்கு காங்கிரஸ் காரணமில்லை என்றும் கூறியிருக்கிறார்.
மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக இருக்கும் வெங்காய விஷயத்தில் விளைச்சல், கையிருப்பு, விநியோகம், பதுக்கலைத் தவிர்த்தல் எனப் பல அம்சங்களில் கவனம் செலுத்தி, முன்னெச்சரிக்கையோடு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமைகளில் ஒன்று. விலை திடீரென்று ஏறவில்லை. கடந்த ஓராண்டாகவே ஏறிவருகிறது. நெருக்கடி முற்றும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?
சில்லறை விற்பனைத் துறையில் அந்நிய நிறுவனங்களின் நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் குளிர்பதனச் சேமிப்புக் கட்டமைப்பு வசதி கிடைக்கும் என்று அரசு சொல்கிறது. வெங்காயம் முதலான அடிப்படை உணவுப் பொருள்கள் விஷயத்தில் இக்கட்டமைப்புகளை அரசே ஏன் சொந்த முயற்சியில் உருவாக்கக் கூடாது?
வெங்காய விலை சரிந்துவிட்டால் மொத்த வியாபாரிகளின் கண்ணசைப்புக்கு ஏற்ப, ஏற்றுமதிக்கு அனுமதி தரும் மத்திய அரசு, விலை ஏறும்போது விளைச்சல் இல்லை, மழையில்லை என்பது சரியல்ல. மொத்த உற்பத்தி, மொத்தத் தேவை ஆகியவற்றை மாநிலவாரியாகக் கணக்கிட்டு பொதுவிநியோக அமைப்பு மூலம் விற்க நிரந்தர ஏற்பாட்டைச் செய்வதுதான் நல்ல அரசுக்கு அடையாளம். வெங்காயத்துக்கு மட்டும் இல்லை; எல்லா விளைபொருட்களுக்கும் இது பொருந்தும்!