

‘தெஹல்கா’ பத்திரிகையின் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பால் தன்னுடன் பணிபுரியும் இளம் பெண் பத்திரிகையாளரிடம் முறைதவறி நடந்துகொண்டதாக எழுந்துள்ள சர்ச்சைகள் மிகுந்த கவனம் கொண்டு பார்க்கப்பட வேண்டியவை. பாலியல்ரீதியாக அவர் தந்த துன்புறுத்தல்கள் என்று பட்டியலிடப்படும் தகவல்கள் சமுதாயத்தில் அவர் வகிக்கும் நிலைக்கும் அவருக்கிருக்கும் பொறுப்புக்கும் சற்றும் பொருத்தமில்லாதவை.
கோவா மாநிலத் தலைநகரில் அவருடைய பத்திரிகை ஆதரவில் நடந்த ‘திங்க்’ நிகழ்ச்சிக்கு வந்திருந்த முக்கிய விருந்தினர்களைக் கவனிக்கும் பணியிலிருந்த பெண் பத்திரிகையாளரை, நவம்பர் 7-ம் தேதி நட்சத்திர ஹோட்டலின் மின்தூக்கிக்குள் திட்டமிட்டுத் தள்ளி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறார் என்பது குற்றச்சாட்டு. அதே செயலை அடுத்த நாளும் செய்ய முயற்சித்திருக்கிறார். தன்னுடைய மகளைப் போன்ற பெண்ணிடம் முறைதவறி நடந்தது மட்டுமல்லாமல் மீண்டும் மீண்டும் அவருடன் தொடர்புகொண்டு தன்னிடம் பேசுமாறு அச்சுறுத்தியதுடன், நடந்த சம்பவத்தை ஏன் என் மகளிடம் சொன்னாய்? என்றும் சீறியிருக்கிறார்.
இத்தனைக்கும் அந்தப் பெண், அவருடைய நண்பரான இன்னொரு பத்திரிகையாளரின் மகள், குடும்பம் முழுவதையும் தெரியும். முறைகேடாக நடந்துவிட்டு ‘குடி மயக்கத்தில் தவறு செய்துவிட்டேன்’ என்றும் பூசிமழுப்பப் பார்த்திருக்கிறார்.
அவருடைய பதவிக்கும் அந்தஸ்துக்கும் அஞ்சிவிடாமல், அவருடைய ஆசைக்கு இணங்க மறுத்த அந்தப் பெண், சம்பவம் நடந்த உடனேயே தன்னுடன் பணிபுரிகிறவர்களிடம் விவரத்தைச் சொல்லி தன் மனச்சுமையைக் குறைத்துக்கொண்டதுடன் தனக்குப் பாதுகாப்பும் தேடிக்கொண்டார். அடுத்து நடப்பதை அனைவரும் விழிப்புடன் கண்காணிக்க வழிசெய்துவிட்டார். அந்தப் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரும் தனது மூத்த சகாவுமான ஷோமா சௌத்ரிக்கு முழு விவரங்களையும் எழுத்துபூர்வமாகவே தெரிவித்துவிட்டார்.
இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்குத் தொடர்ந்து குறுந்தகவல்களை அனுப்பிய தேஜ்பால், பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் என்று தனது உறவினர்கள் மூலம் அந்தப் பெண்ணின் தாயார் உள்ளிட்டவர்களுக்கு நெருக்குதலை அளித்திருக்கிறார். இவை எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கிறது. இந்தியக் குற்றவியல் சட்டப்பிரிவின் 354ஏ, 354பி, 376, 376(2) ஆகிய பிரிவுகளின் கீழும், பணியிடங்களில் பெண்களுக்குத் தொல்லை தருவோரைத் தடுக்கவும் தண்டிக்கவும் வகை செய்யும் சட்டத்தின் கீழும் கோவா மாநிலப் போலீஸார் வழக்குகளைப் பதிவுசெய்து உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்துவருகின்றனர்.
தனக்குத்தானே ‘தண்டனை’ கொடுத்துக்கொள்ளும் வகையில் ஆறு மாதங்களுக்கு வேலைக்கு வரப்போவதில்லை என்றும், நடந்த சம்பவத்துக்காக வருத்தமும் வெட்கமும்படுவதாகக் குறிப்பிட்டுள்ளதுடன் அதைப் பாலியல் வன்முறை என்று கூறாமல் குடிபோதையில் தவறாக நடந்துகொண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார் தேஜ்பால்.
இந்த விவகாரத்தில் கோவா போலீஸார் திறமையாகவும் விரைவாகவும் புலனாய்வை மேற்கொண்டு தேஜ்பாலுக்குத் தகுந்த தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். உயர் பதவியில் இருக்கும் செல்வாக்கானவர்கள் முறைதவறிச் செல்லாமலிருக்க எச்சரிக்கையாக அது இருக்கும்.