

தன் பலமாக இத்தனைக் காலமும் எதைச் சொல்லிக் கொண்டிருந்ததோ அதிலேயே வழுக்கி விழுந்திருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. பொருளாதார வீழ்ச்சி அதன் பத்தாண்டு கால ஆட்சியின் இறுதிக் காலப் பரிதாபமாக மாறியிருக்கிறது.
2012-13-ல் 4.5% ஆக இருந்த நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 2013-14-ல் 4.9% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற குறைந்த அளவு வளர்ச்சி வீதம் எல்லாம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆண்ட 2000-01, 2001-02, 2002-03 ஆகிய காலகட்டத்தில் நிலவியவை. ஆனால், பொருளாதார வளர்ச்சியில் முடங்கியிருந்த காலகட்டத்தில், குறைந்தபட்சம் பணவீக்க வீதத்தையாவது அந்த அரசால் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்திருந்தது. விளைவாக, சாமானியர்கள் விலைவாசி உயர்வின் சுமையிலிருந்து ஓரளவு தப்பிக்க முடிந்தது. இந்த அரசாலோ அதுவும் முடியவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி பதவியில் இருந்த தொடர்ச்சியான ஆறு ஆண்டுகளில், வருடாந்திரப் பொருளாதார வளர்ச்சி வீதம் 6% ஆக இருந்தது. ஆனால், பணவீக்க வீதம் 4.25% ஆக இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் ஏழு ஆண்டுகளில் இந்த வளர்ச்சி வீதம் 7.6% ஆக உயர்ந்து, பிறகு நிலைத்தது என்றாலும், பணவீக்க வீதம் 6.9% ஆக உயர்ந்து மக்களை வாட்டி வதைத்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி முடிவுற்ற காலத்தில் பொருளாதார வளர்ச்சி 8% ஆக வளர்ந்து நன்றாக இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடைசிக் காலமோ நேரெதிராக மாறியிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் நல்ல வளர்ச்சியைக் கொடுத்தும்கூட தேசிய ஜனநாயக முன்னணியால் தேர்தலில் அறுவடை செய்ய முடியவில்லை என்பதுதான். எனில், இப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு என்ன கிடைக்கும்?
அரசியல் கணக்குகள் ஒருபுறமிருக்கட்டும்… விலைவாசி உயர்வும் பணவீக்க வீதமும் இந்த அரசு பெரும் பகுதி கவனம் செலுத்தாமல் விட்ட விஷயங்கள். ஆனால், முதலீடு அப்படியா? தன்னை முதலீடுகளுக்கான அரசு என்று பிரகடனப்படுத்திக்கொண்ட அரசு முதலீட்டுக்கான சூழலை எப்படி வைத்திருந்தது என்பதற்கான உதாரணம், 2012-13-ல் 0.8% ஆக இருந்த முதலீடுகள் 2013-14ல் 0.2% ஆக மேலும் சரிந்தன. இதே கூட்டணி அரசின் முதல் எட்டு ஆண்டுகளில் இது 12% ஆக இருந்தது என்றால், இந்த வீழ்ச்சி எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம். தொழில்துறையில் புதிய முதலீடுகள் செய்யப்பட்டால்தான் வேலைவாய்ப்பு அதிகமாகும், உற்பத்தி அதிகரிக்கும், நாட்டு மக்களின் வருமானம் பெருகும். கடந்த இரண்டாண்டுகளில் முதலீடுகளின் வீழ்ந்திருக்கும் நிலையை இந்த அரசின் செயலற்ற தன்மைக்கு ஒரு சாட்சியம் என்று கூறலாம். இந்தப் பொருளாதார வீழ்ச்சி, வெளியிலிருந்து வரவில்லை; ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தானாகவே தேடிக்கொண்டது என்பதுதான் எல்லாவற்றிலும் மோசமானது.
அரசின் தவறுகளுக்கு நாடும் மக்களும் சேர்ந்து தண்டனையை அனுபவிக்கவிருப்பதுதான் துயரம்!