

நாட்டுடனான தூதரக உறவுகளை நிறுத்திவைப்பதாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள் எடுத்திருக்கும் முடிவு பொருளாதார ரீதியாகவும், புவி அரசியல்ரீதியாகவும் கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இஸ்லாமிய அரசியல் இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவம் எகிப்து அமைப்புக்கு கத்தார் தீவிர ஆதரவு தரத் தொடங்கியதிலிருந்தே, கடந்த ஆறு ஆண்டுகளாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுக்குள் பதற்றம் நிலவிவருகிறது. அந்த இயக்கம் மேற்கு ஆசியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஓர் அச்சுறுத்தல் என்றே சவுதி அரசும் அதன் நெருங்கிய நட்பு நாடுகளும் கருதுகின்றன.
சவுதி அரேபியாவும், கத்தாரும் மேற்கு ஆசியா முழுவதும் பயங்கரவாதக் குழுக்களை ஆதரித்துவரும் நாடுகள் என்பது உலகமறிந்த ரகசியம். சிரியா ஓர் உதாரணம். பஷார் அல் அஸாதின் அரசுக்கு எதிரான அஹ்ரார் அல்-ஷாம் போன்ற சலாபியிஸக் குழுக்களுக்கு சவுதி ஆதரவு தருகிறது. மறுபக்கம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆயுதம் தாங்கிய பிரிவுக்கு கத்தார் நிதி உதவி வழங்குகிறது.
இந்நிலையில் ட்ரம்ப்பின் வெளிப்படையான ஆதரவு, ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாடு ஆகியவற்றால் உத்வேகம் பெற்றிருக்கும் சவுதி, ஈரானுக்கு எதிராகத் தனது தலைமையில் சன்னி முஸ்லிம் நாடுகளை அணி திரட்ட முடிவுசெய்திருக்கிறது. சவுதிக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமையில், இருதரப்புக்கும் மாறி மாறி ஆதரவளித்த நாடு கத்தார். ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானியுடன் கடந்த வாரம் தொலைபேசியில் பேசிய கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, ஈரானுக்கு எதிராக சவுதி உள்ளிட்ட நாடுகளின் நடவடிக்கைகளை விமர்சித்துப் பேசியதாகத் தெரிகிறது.
வளைகுடா பிராந்தியத்தில் பொருளாதார பலம் பெற்ற நாடான கத்தாரில் அமெரிக்க ராணுவத்தின் முக்கியமான தலைமை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதல் நடத்தும் விமானப் படைத் தலைமையகமும் கத்தாரிலிருந்துதான் செயல்படுகிறது.
எனவே, கத்தாரைத் தனிமைப்படுத்தும் முயற்சிகள் பொருளாதாரரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதுடன், ஐஎஸ்ஸுக்கு எதிரான போரிலும் பின்னடவை ஏற்படுத்தும். சவுதியின் இந்த அறிவிப்பு வெளியான உடனேயே கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இந்நிலையில், மேற்கு ஆசியாவைப் பொறுத்தவரை, பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள் அவசியம் என்பதுடன், சவுதி ஈரான் இடையிலான பதற்றம் தணிக்கப்படுவதும் முக்கியம். மேலும், பகைமையை வளர்ப்பது அந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கத்தான் பயன்படும்!