Published : 21 Jun 2016 09:19 AM
Last Updated : 21 Jun 2016 09:19 AM

முதலாளித்துவம் காப்பாற்றாத ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பரில் முடிகிறது. அவரது பதவிக்காலத்தை நீட்டிப்பதில் எதிர்ப்பும் ஆதரவுகளும் எழுந்தன.

‘இரண்டாம் முறையாகப் பதவியில் நீடிக்க மாட்டேன்' என்று அவர் அறிவித்ததன் மூலம் கண்ணியமான முறையில் வெளியேறியுள்ளார்.

அவரின் பதவிக்கால நீட்டிப்பு தொடர்பாகப் பல யூகங்கள் எழுந்தன. அவரது இருப்பு மோடி அரசாங்கத்தின் ஒரு பகுதியைச் சங்கடப்படுத்துவதை உணர முடிந்தது.

அவரது செயல்பாடுகள் விமர்சனங்களை உருவாக்கின. அவர் வட்டிவிகிதங் களைக் குறைக்காமல் இருந்தார் என்றார்கள். அது விவாதத்துக்குரியதுதான். ஆனால்,

‘அவர் வெளிப்படையாகப் பேசுகிறார். பேசும்போது அவர் தேர்ந்தெடுக்கிற வார்த்தைகள் சரியில்லை' போன்ற விமர்சனங்கள் சிறுபிள்ளைத்தனமானவை. இந்தியாவின் நலன்களில் அவருக்கு அக்கறை இல்லை என்ற விமர்சனமும் கேலிக்குரியது.

நிதித் துறைக் கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கு தேர்வுக் கமிட்டியை அமைப்பது என்று மத்திய அரசு சமீபத்தில் முடிவு எடுத்துள்ளது. பதவிக்கான போட்டியிலிருந்து விலகுவது என்ற முடிவுக்கு அவரை அதுதான் தள்ளிவிட்டுள்ளது. இந்த முடிவின் மூலம் பதவிக்கால நீட்டிப்பு தரும் சங்கடத்திலிருந்து மத்திய அரசை அவர் காப்பாற்றியுள்ளார். ‘முதலாளிகளிடமிருந்து முதலாளித்துவத்தைக் காப்போம்’ என்பது ரகுராம் ராஜன் எழுதிய புத்தகத்தின் தலைப்பு. அவரால் அதைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் அவரது வெளியேற்றத்தைக் கருதலாம்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் ரகுராம் ராஜன் நல்ல மதிப்பைப் பெற்றுள்ளார். அதனால், இந்தச் சூழலில் அவர் வெளியேறுவது என்ன விளைவை ஏற்படுத்தும் என்று கவனமாகப் பார்க்கப்படுகிறது. நாட்டின் ரூபாய் மதிப்பை யும் பணவீக்கத்தையும் அன்னியச் செலாவணி இருப்புகளையும் அவர் திறமையாகப் பராமரித்துள்ளார். உலகப் பொருளாதாரம் மோசமான நிலையி லிருக்கிற பின்னணியில் செயல்பட்ட முறை அவருக்குப் புகழ் சேர்த்துள்ளது.

வளர்ச்சியடைய வேண்டிய அளவுக்குப் பொருளாதாரம் வளரவில்லை என்று மத்திய அரசு நம்புவதும், அவர் வெளியேறுவதற்கு ஒரு முக்கியமான காரணம்.

வட்டிவிகிதங்களைக் குறைப்பதில் மெதுவாகச் செயல்படுகிறார் என்பதும் அவர் மீதான விமர்சனம். ஆனால், 2015-ல் ஒருமுறை வட்டிவிகிதங்களைக் குறைத்தாலும் தனியார் முதலீடு இன்னும் தேக்கநிலையிலேயே இருக்கிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அவரது தலைமையில் ரிசர்வ் வங்கி கையாண்ட அணுகுமுறையால் பொதுத் துறை வங்கிகள் வாராக் கடன்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டன. தங்களின் நஷ்டங்களைப் பதிவுசெய்யும் நிலைக்கும் சென்றன. அதுவும் எதிர்க்கப்பட்டது.

மத்திய அரசின் நிதியமைச்சகத்துக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஆரோக்கிய மான ஒரு விவாதம் நடப்பது மோசமானதல்ல. ரகுராம் ராஜன் ஒருமுறை “இந்த இரண்டும் ஒரே மாதிரி சிந்தித்தால் மக்கள்தான் மிகவும் சிரமப்பட வேண்டும்” என்றார்.

ரகுராம் ராஜன் தனது நிலையைத் தெளிவுபடுத்தியதன் மூலம் தன்னைச் சுற்றி நடந்த தேவையற்ற அரசியலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.

வளர்ச்சிக்கான நம்பிக்கைகளுக்கும் ஏறும் விலைவாசிகளுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பராமரிக்கிற அதிகாரமும் போதுமான சுதந்திரமும் உடைய ரிசர்வ் வங்கி ஆளுநர் நாட்டுக்குத் தேவை. வங்கிகள் மீண்டும் கடன்கள் வழங்கத் தயாராகும் அளவுக்குத் தேவையான, திறமையான நடவடிக்கைகளை எடுப்பவராகவும் அவர் இருக்க வேண்டும். ரகுராம் ராஜனுக்குப் பிறகு யார் என்பதை முடிவு செய்யும்போது மத்திய அரசு இவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

வட்டிவிகிதங்களைக் குறைப்பதைக் கேள்வி கேட்காமல் அமல்படுத்தும் ஒருவரை ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் அமர்த்தக் கூடாது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x