

இரு அரசுகளுக்கு இடையே நிர்வாக அளவில் செய்து முடிக்கப்பட வேண்டிய விஷயம், பொது வெளியில் பூதாகாரமாக ஆகும்போது, எல்லைகளே இல்லாத பெரும் பிரச்சினையாக அது உருவெடுத்துவிடும். இதற்கு மிகச் சரியான உதாரணம் காவிரி விவகாரம்.
தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் வெடித்த கலவரங்களின் தொடர்ச்சியாக அங்கு வசித்துவரும் தமிழர்கள் பாதிக்கப்பட்டது நம் கண் முன் நடந்த பெரும் துயரம். கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கடந்த வெள்ளி அன்று முழு அடைப்பு நடந்தது. வணிகர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த இந்தப் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாஜக, உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள், அமைப்புகள் பங்கேற்றன. விவசாயிகளுக்குத் தார்மீகரீதியில் ஒருமித்த ஆதரவைத் தெரிவிக்க இப்படியான போராட்டங்கள் அடையாள நிமித்தம் தேவைப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தப் போராட்டத்தில் ஓரிரு சிறு நிகழ்வுகள் தவிர, வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்பது நல்ல விஷயம்.
எனினும், காவிரி விவகாரம் முழுக்க இப்போது உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்கெனவே, “கர்நாடக, தமிழக மாநில அரசுகள் சட்டத்துக்குண்டான மதிப்பைக் காப்பாற்றுவது அவசியம். உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகே பந்த், போராட்டங்கள் கூடாது என்று நாங்கள் அறிவுறுத்தி யிருந்தோம். எங்கள் உத்தரவுக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று இரு மாநில வழக்கறிஞர்களிடம் தெரிவித்த நிலையில், இப்படியான ஒரு போராட்டத்தை நம்மவர்கள் தவிர்த்திருக்கலாம். நீதிபதியின் உத்தரவு வந்த மறுநாள்தான் இந்த முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. ஏற்கெனவே உணர்வுரீதியாகக் கொந்தளிப்பில் எரிந்துகொண்டிருக்கும் ஒரு பிரச்சினையில் அது சார்ந்து பெரும் கூட்டத்தைத் திரட்டும் நிகழ்வுகளைத் திட்டமிடுவது தீயோடு விளையாடுவதற்குச் சமம். கன்னட அமைப்புகள் செய்யும் அதே தவறான வழியை நாமும் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை.
இந்நிலையில், காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை நாளை நடக்கவிருக்கிறது. நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைச் சாக்காக வைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டம், வன்முறை என்று வீதியில் இறங்கி மேலும் அசம்பாவிதங்களுக்கு வழிவகுத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இரு மாநில அரசுகளின் தலையாய கடமை. இந்த விஷயத்தில் கூடுதல் ஒற்றுமையும் கூடுதல் பொறுப்புணர்வும் நமக்குத்தான் தேவை!