

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லை தாண்டிய நல்லுறவை வளர்க்கும் கூட்டுறவுக் குழு, இரு நாடுகளிடையேயான போக்குவரத்து, வர்த்தகத்தை மேம்படுத்தும் விஷயங்களை விவாதித்திருக்கிறது.
கடந்த ஜனவரியில், கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டின் இரண்டு பக்கங்களுக்கும் இடையிலான வர்த்தகத்துக்குத் திடீர் முட்டுக்கட்டை விழுந்தது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரிலிருந்து வந்த லாரி ஒன்றில், 110 பொட்டலங்கள் பிரவுன்சுகர் இருந்ததாக அந்த லாரியின் ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டதை அடுத்து, இந்த நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இந்திய எல்லைக்குள் 48 பாகிஸ்தான் லாரிகளும் பாகிஸ்தான் எல்லைக்குள் 27 இந்திய லாரிகளும் சிக்கிக்கொண்டன. இதெல்லாம் நடந்து முடிந்து ஒரு மாதம் கழித்துதான் வழக்கமான வர்த்தகம் மறுபடியும் தொடங்கியது. என்றாலும், உரசல்கள் தீர்க்கப்படாமலேயே நீடித்தன. அவற்றைச் சரிசெய்யும் முயற்சியாகவே கூட்டுறவுக் குழு இப்போது கூடிக் கலைந்திருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம் 2008-ல் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரின் சலாமாபாதுக்கும் இந்தியா வசம் உள்ள காஷ்மீரின் சக்கன்தாபாகுக்கும் இடையே தொடங்கியது. இரு நாடுகளிடையே நல்லுறவை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளில் இது முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆரம்பக்கட்ட சுணக்கத்துக்குப் பிறகு, இரண்டு தரப்புமே வர்த்தகத்தை மறுபடியும் தொடர்வதற்கு ஆர்வம் காட்டின. ஆனால், ஒருவரை ஒருவர் மாறிமாறிக் குற்றம்சாட்டிக்கொள்வது மட்டும் தொடர்கதையாகவே இருக்கிறது. உண்மையில், இந்த வணிகத்தின் அடிப்படை நோக்கம் உன்னதமானது. இருதரப்பு மக்களுமே இதனால் பயனடைகின்றனர். இரு அரசாங்கங்களின் எண்ணமும் ஈடேற வேண்டும் என்றால், அதற்குப் பிரச்சினைகளைத் தவிர்க்கும் செயல்திட்டம் அவசியம்.
ஒருகாலத்தில், எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு இரு தரப்பு ராணுவங்களிலிருந்தும் எத்தனையோ இடையூறுகள் ஏற்பட்டன. இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளும் பாதிப்பை ஏற்படுத்தின. இன்றைக்கு அந்த நிலை இல்லை. நிலைமையை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றால், முதலில் தங்குதடையற்ற சரக்குப் போக்குவரத்துக்கு வழி காண வேண்டும். இரு தரப்பிலுமே பரஸ்பரம் சந்தேகம் கவிந்திருக்கும் சூழலில், சரக்கு லாரிகளை அப்படியே அனுமதிப்பது சாத்தியமற்றது. சமீபத்திய பிரவுன்சுகர் சம்பவம்கூட இதைத்தான் உணர்த்துகிறது. அதேசமயம், சரக்குகளைச் சோதிப்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு பெரிய சவால் அல்ல. நவீன சாதனங்கள் சரக்குப் பரிசோதனையை எவ்வளவோ எளிமையாக்கிவிட்டன. ஆனால், ஊடுபரிசோதனைக் கருவிகளைப் பயன்படுத்துவதுபற்றியும், சரக்குகளை ஏற்றி இறக்கும் இடங்களில் சரக்குக்குச் சொந்தக்காரர்கள் இருக்க வேண்டும் என்பது போன்ற பழமையான நடைமுறைகளையும்கூடப் பேசும் நிலையிலேயே இன்னமும் நாம் இருக்கிறோம்.
பேச்சுவார்த்தைகள் முக்கியம்தான். ஆனால், அவை மட்டுமே தீர்வாகிவிடாது. நாம் நவீனமான காலத்தில் இருக்கிறோம் என்றால், நவீன வசதிகளை எவ்வளவுக்குப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதும் முக்கியமானது. வெறும் சரக்குகளை அல்ல; மக்களின் நல்லெண்ணங்களையும் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவையும் நாம் கையாள்கிறோம் என்கிற தொலைநோக்கோடு செயல்பட்டால், பிரச்சினைகளற்ற போக்குவரத்து சாத்தியம்தான்!