

மத்தியப் புலனாய்வு அமைப்பான ‘சி.பி.ஐ.’, உருவாக்கப்பட்டதன் 50-வது ஆண்டைக் குறிக்கும் வகையில், தில்லியில் ‘சி.பி.ஐ.’ சார்பில் நடத்தப்படும் மூன்று நாள் கருத்தரங்கு, நாட்டு மக்களுக்கு அந்த அமைப்பு ஏன் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்கிற நியாயங்களை மீண்டும் சுட்டிக்காட்டுகிறது. நடப்பது ஊழல் தடுப்புக் கருத்தரங்கு. உரையாற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கோ, ‘‘கொள்கை முடிவெடுப்பதில் தவறிழைப்பது கிரிமினல் குற்றம் ஆகாது. புலனாய்வு அமைப்புகளால் முக்கியக் கொள்கை முடிவுகளை எடுப்பதில் அரசு அதிகாரிகளுக்குத் தேவையில்லாத அச்ச உணர்வு ஏற்படுகிறது’’ என்று வகுப்பெடுக்கிறார். மறுநாள் பேசும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், அந்தப் பேச்சை வழிமொழிந்து, ‘‘பிரதமரின் பேச்சை ஜாக்கிரதையாகப் பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’’ என்கிறார். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான ‘சி.பி.ஐ.’ விசாரணையோடு பொருத்திப்பார்த்தால், அரசு என்ன போதிக்கவருகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
1963-ல் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வரும் 91 வகைக் குற்றங்கள், மத்திய அரசின் 16 சட்டங்களின் கீழ் வரும் குற்றங்கள், 1947-ல் இயற்றப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் ஆகியவற்றை விசாரிக்கும் பொறுப்போடு தன் பணிகளைத் தொடங்கியது
‘சி.பி.ஐ’. காலப்போக்கில் அரசியல் படுகொலைகள், ஆள், விமானக் கடத்தல்கள், பயங்கரவாதக் குற்றங்கள், மாநிலக் காவல் துறையால் முறையாக விசாரிக்கப்படாத குற்றங்கள் என்று இன்றைக்கு மத்திய அரசு சட்டங்களின்படி 69 வகைக் குற்றங்கள்; மாநில அரசுகளின் சட்டங்கள்படி 18 வகைக் குற்றங்கள், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி 231 வகையான குற்றங்களை விசாரிக்கும் அதிகாரம் அதனிடம் இருந்தாலும், ஊழல் விசாரணை அதன் முக்கியமான பணி என்பதை நாம் மறந்துவிடலாகாது. இன்றைய ‘சி.பி.ஐ.’-யின் மூல அமைப்பாக 1941-ல் பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்ட சிறப்புக் காவல் நிறுவனத்தின் (எஸ்.பி.இ) அடிப்படை நோக்கமும் ஊழல் விசாரணையாகவே இருந்தது. ஊழல் வழக்குகளில் நேர்மையான விசாரணையை நாம் விரும்புகிறோம் என்றால்,
‘சி.பி.ஐ.’-க்கு அளிக்கப்படும் ‘தன்னாட்சி’ என்பது வெறும் வார்த்தை அளவிலானதாக அல்லாமல், நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்; முற்றிலுமாக அரசின் குறுக்கீடுகளிலிருந்து அது விடுவிக்கப்பட வேண்டும்.
சில மாதங்களுக்கு முன் ‘கூண்டுக்கிளியாக இருக்கிறது ‘‘சி.பி.ஐ’.; எஜமானர்களின் வார்த்தைகளைத்தான் அது ஒலிக்கிறது’’ என்றது உச்ச நீதிமன்றம். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான விசாரணை அறிக்கை, முத்திரை இடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியையே மீறி, அந்த அறிக்கையைச் சட்ட அமைச்சர் - பிரதமர் அலுவலக அதி காரிகளுக்குக் காட்டி, மாற்றங்கள் செய்து, அதன் பின் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் நிலையில் ‘சி.பி.ஐ.’ இருக்கும்போதே எஜமானர்கள் இவ்வளவு கோபப்படுகிறார்கள். கிளி அதன் சொந்த வார்த்தைகளைப் பேச எஜமானர்கள் எவ்வளவு தூரம் அனுமதிப்பார்கள்?