அவசியமான உறுதிமொழிகள்

அவசியமான உறுதிமொழிகள்
Updated on
1 min read

மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக இந்திய அரசியல் கட்சிகள் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்’ கோரியுள்ளது. நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடக்கும் இந்த வேளையில், இத்தகைய உறுதிமொழியைக் கேட்டுப் பெறுவது மிகவும் பொருத்தமானது.

இந்திய அரசியல் சட்டத்தின்படிதான் உறுப்பினர்களும் அமைச்சர்களும் பதவி ஏற்கிறார்கள். இந்திய அரசியல் சட்டமே இந்த உரிமைகளையெல்லாம் மக்களுக்கு வழங்கியிருக்கிறது. அப்படியிருந்தும் கூடுதலாக இந்த உறுதிமொழிகளைக் கேட்பதன் ஒரே காரணம், ஆட்சியாளர்கள் அந்த உரிமை மீறல்களை உணர்ந்து தவறுகளைத் திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புதான்.

எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது சிறுபான்மை இன மக்கள், வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்கள், அரசின் திட்டங்களால் வீடு - வாசல்களை இழப்போர், சிறைக் கைதிகள் என்று எல்லோருடைய மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும்போதோ இவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல.

நர்மதை அணை எதிர்ப்பு, வேதாந்தா குழுமத்தின் கனிம நிறுவனத்துக்கு எதிர்ப்பு, தஞ்சையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு போன்ற வெகுஜன மக்கள் இயக்கங்களுக்கெல்லாம் ஏதாவதொரு முத்திரை குத்தி அவர்களைச் சமூக விரோதிகளாகவும் வளர்ச்சியைத் தடுக்கும் சக்திகளாகவும் அந்நியர்களின் கைக்கூலிகளாகவும் சித்தரிப்பதே ஆட்சியாளர்களின் வழக்கம்.

எல்லாத் திட்டங்களுமே மக்களுக்கும் சமுதாயங்களுக்கும் பலன் அளிப்பதற்காகவே கொண்டுவரப்படுவதாகவும் ஆட்சியாளர்களால் கூறப்படுகிறது. இவற்றை எதிர்ப்போர் கைது செய்யப்படுவதும் விசாரணையின்றி சிறைகளில் மாதக் கணக்கில் அடைக்கப்படுவதும் வழக்கமாகிறது.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் காவல் கைதிகளைச் சித்திரவதை செய்வதைத் தடுக்க சட்டம் வேண்டும், மரண தண்டனையை நீக்க வேண்டும், தன்பாலுறவைக் குற்றவியல் நட வடிக்கையாகக் கருதுவதைக் கைவிட வேண்டும், வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும், பெருநிறுவனங்களின் தொழில்திட்டங்களால் பாதிக்கப்படும் சமூகங்களின் உரிமைகளைக் காக்க வேண்டும், சிறுபான்மை மக்களுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் நியாயம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 16 கோரிக்கைகள் ஆம்னஸ்டி இன்டர்நேஷனலின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பிரதமர் பதவிக்கான வேட்பாளர்கள் இதை ஏற்கிறார்களா, நிராகரிக்கிறார்களா என்ற கேள்விகளும் இடம்பெற்றுள்ளன.

எல்லா அரசியல் கட்சிகளுமே அரசியல் சட்டத்தை மதிப்பதாகக் கூறுகின்றன. அப்படி ஒப்புக்கொண்டால்தான் தேர்தல் ஆணையம் அவற்றுக்கு அங்கீகாரமே வழங்கும். அரசியல் சட்டத்தின் கூறுகளை எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுடைய அமைப்பு விதிகளிலும் தவறாமல் சேர்த்துக்கொள்கின்றன. அதேபோல் மேற்கண்ட கோரிக்கைகளையும் அரசியல் கட்சிகள் ஏற்று, தங்களுடைய தேர்தல் அறிக்கையில் சேர்த்துக்கொண்டால் அவற்றின் மீதான மதிப்பு மக்களிடையே பெருமளவுக்கு உயரும். கூடவே, கொடுமைகளுக்கு எதிராகப் போராடும் மக்களுக்குத் தார்மிக ஆதரவு கிடைத்த திருப்தியும் ஏற்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in