ஏன் இந்த அழுகுணி ஆட்டம்?

ஏன் இந்த அழுகுணி ஆட்டம்?
Updated on
2 min read

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. பொங்கலை ஒட்டி வழக்கமாக ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களைத் தங்களது சட்டமறுப்பு இயக்கக் களங்களாக மாற்றிய இளைஞர்கள், அலங்காநல்லூரை இந்தப் போராட்டங்களின் உச்ச மையமாக மாற்றியிருக்கிறார்கள். அலங்காநல்லூரில் திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விடிய விடிய நடத்திய போராட்டம், இதன் பல்வேறு பரிமாணங்களையும் வெளிப்படுத்துவதோடு, கூடவே மத்திய - மாநில அரசுகளின் இரட்டை முகத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

இன்றைக்குத் தமிழகத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து நடத்தப்படும் போராட்டத்தைத் தொடர்ந்து, மத்திய அரசாலும் ஏனைய அண்டை மாநிலங்களாலும் தமிழகம் வஞ்சிக்கப்படுவதால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியின் வெளிப்பாடாகவும் கருத முடியும். 2016-ல் பருவ மழை பொய்த்ததோடு மாநிலத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டன. இன்றைய வரலாறு காணாத வறட்சி, விவசாயிகளின் தற்கொலைகள், கிராமப் புறத் தமிழகத்தின் கையறு நிலை எல்லாவற்றின் பின்னணி யிலும் மத்திய - மாநில அரசுகளின் கையாலாகாத்தனம் இருக்கிறது. தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் மறுக்கப்படும் சூழலில், ஒவ்வொரு ஆண்டும் உச்ச நீதிமன்றப் படியேறிக் கொண்டிருக்கிறது தமிழகம். ஆனால், தமிழகத்தின் கோரிக்கைகளுக்குக் குறைந்தபட்ச நியாயம் அளிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் ஏனைய மாநிலங்களும் மத்திய அரசும் எப்படி அணுகுகின்றன என்பதையும் இன்றைய இளைஞர்கள் கவனித்தே வந்திருக்கின்றனர்.

விவசாயிகளின் வாழ்வோடு பிணைக்கப்பட்ட காளைகளை விளையாட்டில் ஈடுபடுத்துவது என்பது தமிழகத்துக்கு மட்டுமே பிரத்யேகமானது அன்று. அசாம், சிக்கிம், மேகாலயா, பஞ்சாப், ராஜஸ்தான், கோவா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகம் போன்ற பல மாநிலங்களில் மாட்டுடன் மாட்டை மோதவிடும் வழக்கம் உண்டு. மகாராஷ்டிரம், பஞ்சாப், ஆந்திரப்பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், உத்தரப் பிரதேசம், வங்கம் என்று பல மாநிலங்களில் மாட்டுப் பந்தய நடைமுறை உண்டு. இன்று ஜல்லிக்கட்டுக்குத் தடை நிலவ அரசின் ‘காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள்’ பட்டியலிலிருந்து காளைகளை நீக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததும், மாநில அரசு அதற்குரிய அழுத்தத்தைத் தராததுமே காரணம். ஆனால், மத்திய - மாநில ஆட்சியாளர்கள் இரு தரப்பினருமே வெளியே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர்களாகவே தங்களைக் காட்டிக்கொள்கின்றனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்த பிறகும், “இந்த ஆண்டு நிச்சயம் ஜல்லிக்கட்டு நடக்கும்” என்றார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். “ஜல்லிக்கட்டு நடப்பதை நிச்சயம் உறுதிசெய்வோம்; இதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம்” என்றார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தடையை மீறி போட்டி நடத்தினால், அதையும் ஆதரிப்போம் எனும் சமிக்ஞைகளும் வெளிப்பட்டன. மத்தியில் ஆளும் பாஜகவின் முன்னணி தமிழகத் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா களத்துக்கே சென்று, ஜல்லிக்கட்டுக் காளையைத் தடையை மீறி அவிழ்த்துவிட்டார். ஆக, ஏற்கெனவே, போராட்ட மனநிலையிருந்த இளைஞர்களுக்கு இவை எல்லாம் ஊக்கத்தைக் கொடுத்தன. இன்று பிரச்சினை முற்றிய நிலையை அடைந்திருப்பதில், ஆட்சி அதிகாரத்தில் இருப் போருக்கும் பெரும் பங்கு உண்டு. இப்போது போராட்டம் உச்சம் தொடும் சூழலில், காவல் துறையினரைக் கொண்டு தடியடி நடத்துவது, நள்ளிரவுக் கைதுகளில் ஈடுபடுவது என்று மூர்க்கத் தாக்குதலில் இறங்குவது நியாயமற்றது. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

தமிழக அரசு இந்தப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால், போராட்டத் தரப்பினருடன் முதலில் பேச வேண்டும். நாட்டின் மூன்றாவது பெரும் கட்சியாகவும் மக்களவையில் இன்று அமர்ந்திருக்கும் தம்முடைய கட்சியால் எது சாத்தியம், எது சாத்தியமில்லை, உண்மையில் மத்திய அரசு இந்த விவகாரத்தை எப்படி அணுகுகிறது என்று வெளிப்படையாகக் கூற வேண்டும். தமிழகத்தில் இன்று காணப்படும் கொந்தளிப்பானது வெறும் ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிரானது மட்டும் அல்ல; அது தொடர் புறக்கணிப்பு மற்றும் பாரபட்ச வலியின் வெளிப்பாடு என்பதை மத்திய அரசு உணர வேண்டும். இரு அரசுகளும் இந்த விவகாரத்தில் தம்முடைய வார்த்தைகளுக்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in