

பிரதமர் மன்மோகன் சிங்கின் செய்தியாளர் சந்திப்பை எப்படி வர்ணிப்பது?
கடந்த 10 ஆண்டுகளில் மன்மோகன் சிங் இப்படி விரிவான பத்திரிகை யாளர் சந்திப்பை எதிர்கொள்வது இது மூன்றாவது முறை. விரைவில் தேர்தல் நெருங்கும் நிலையில், “அடுத்த பிரதமர்களுக்கான போட்டியில் நான் இல்லை” என்று அவர் அறிவித்திருக்கும் சூழலில், பிஹார் முதல்வர் நிதீஷ்குமார் சொல்வதுபோல,கிட்டத்தட்ட இது அவருடைய விடைபெறல் சந்திப்புதான். அடுத்து, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை அவருக்கும் அவருடைய சகாக்களுக்குமே இல்லாத சூழலிலும் பிரதமரிடமிருந்து இந்தச் சந்திப்பின்போது வெளிப் பட்டிருக்கும் வார்த்தைகள் காங்கிரஸார் இன்னும் தங்கள் தவறை உணர வில்லை என்பதையே காட்டுகிறது. இன்றைக்கு ‘மோடி ஆதரவு அலை’ என்று சொல்லப்படும் மக்களின் மனப்போக்கின் உண்மையான நிலை காங்கிரஸ் எதிர்ப்பு அலைதான். காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஊழல்களும் மோசமான பொருளாதாரக் கொள்கைகளுமே அந்த அலைக்குக் காரணம். ஆனால், மன்மோகன் சிங் என்ன சொல்கிறார்?
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஊழல்களைப் பற்றிய கேள்வி களுக்கு சிங்கின் பதில் இது:
“முதல்முறை ஆட்சியின்போது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மக்கள் புறந்தள்ளிவிட்டதன் வெளிப்பாடே 2009 மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அவர்கள் வாக்களித்தது. மக்கள் அந்தக் குற்றச்சாட்டுகளை நம்பவில்லை. எப்போது மக்கள் தங்கள் நம்பிக்கையை எங்கள்மீது வெளிப்படுத்தினார்களோ, அதன் பின் இரண்டாவது ஆட்சிக் காலகட்டத்திலும் அதே குற்றச்சாட்டுகளை எழுப்புவது நியாயமற்றது. அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் சரி, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டிலும் சரி, வெளிப்படையான ஒதுக்கீடு வேண்டும் என்றே நான் சொன்னேன். அதற்காக நான் முறைகேடுகள் நடக்கவே இல்லை என்று சொல்லவில்லை. தவறுகள் அவ்வப்போது சரிசெய்யப்பட்டுள்ளன. ஊழலை ஒழிப்பது என்பது ஒரு கட்சி சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இதற்குத் தொடர் நடவடிக்கை வேண்டும்.”
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய கேள்விக்கு சிங் சொன்ன பதில் இது:
“பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டங்கள் என்பவை தொடர்ந்து நடப்பவை. அதை நாங்கள் அறிவிக்காமல்தான் செய்துவருகிறோம். அது தொடர்ந்து நடக்கும். நாங்கள் ஆட்சியில் இருக்கும்வரை பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்.”
மேலும், பத்தாண்டு கால ஆட்சியின் மகத்தான தருணம் என்று அமெரிக்காவுடன் அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தருணத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.
எவையெல்லாம் சிங் ஆட்சியின் பலவீனங்களாகவும் சீரழிவுகளின் ஊற்றுக்கண்களாகவும் மக்களால் பார்க்கப்படுகின்றனவோ அவற்றையே தங்கள் சாதனையாகப் பார்ப்பவர்களை என்னவென்று சொல்வது?
தன்னுடைய பேச்சின் இடையே, “ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்தாலும் வரலாறு தன்னுடைய பதவிக்காலத்தை முறையாகப் பதிவுசெய்யும்” என்று சொல்லியிருக்கிறார் சிங். வரலாறு இன்னும் மோசமாக விமர்சிக்கக்கூடும்; காரணம், அது பாரபட்சமற்ற, இரக்கமற்ற இதயம் கொண்டது!