அழிவுக்கான வெள்ளோட்டமா?

அழிவுக்கான வெள்ளோட்டமா?
Updated on
1 min read

ஆட்சியைவிட்டுப் போகும்போது போகிறபோக்கில் கண்ணி வெடிகளை விதைத்துவிட்டுப் போகிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களுக்கான வெள்ளோட்டத்துக்கு அனுமதி அளிக்கும் சுற்றுச்சூழல் அமைச்சர் வீரப்ப மொய்லியின் திடீர் முடிவை வேறு எப்படி வர்ணிப்பது?

மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிப்பது என்பது உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பெரும் பிரச்சினை. சூற்றுச்சூழல் ஆர்வலர்களின் தீவிர எதிர்ப்பு, விதை நிறுவனங்களின் பேராசை மிகுந்த செயல்பாடுகள் என்று நேரெதிர் நிலைகள் இந்த விஷயத்தில் காணப்படுகின்றன. மரபணு மாற்றப்பட்ட பயிர் இனங்கள் என்பவை சமீபத்திய வரவுதான். எனவே, சுற்றுச்சூழலுக்கு இவை எந்த அளவுக்கு உகந்தவை என்பது குறித்து நம்பகத்தன்மை கொண்ட, அறுதியான தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை. கலப்பினங்களைவிட மரபணு மாற்றப் பயிர்கள் எந்த அளவுக்குச் சிறந்தவை என்பதும் விவாதத்துக்குரிய விஷயமாகத்தான் இருக்கிறது. வேளாண் நிறுவனங்களின் ஏகாதிபத்தியத்துக்கு மரபணு மாற்றப் பயிர்கள் வழிவகுத்துவிடும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர். வணிக ஒப்பந்தங்கள், கட்டுப்பாடுகள், அறிவுசார் காப்புரிமை ஆகிய விஷயங்களும் இதில் இருப்பதால், மரபணு மாற்றப் பயிர்களைப் பயிரிடுவதால், வழக்குகளைச் சந்திக்க வேண்டிய அபாயமும் இருக்கிறது. இவ்வளவுக்கும் நடுவேதான் இப்படிப்பட்ட ஓர் அனுமதியை அளித்திருக்கிறது அரசு.

பெருகும் மக்கள்தொகைக்கும், உணவுத் தேவைக்கும் முகம் கொடுக்கப் புதிய யோசனைகள், புதிய திட்டங்கள், புதிய முயற்சிகளுக்கு ஓர் அரசு தயாராவது அவசியம். அதேசமயம், இந்தியா போன்ற பன்முகம் கொண்ட இயற்கைச் சூழல் உடைய ஒரு நாட்டில், இன்னமும் ஆகப் பெரும்பான்மையினர் விவசாயத்தை நம்பியிருக்கும் ஒரு நாட்டில் இதுபோன்ற விஷயங்களில் முடிவெடுக்கும் முன் பல முறை அரசு யோசிக்க வேண்டும்; விவாதிக்க வேண்டும்; பரிசீலிக்க வேண்டும். மரபணு மாற்றப் பயிர்களைப் பொறுத்த அளவில், விவசாயிகளின் குரல்களுக்கும் அரசு செவிமடுப்பது முக்கியம். அவற்றால் உடல்நலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் விளைவுகள்குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கப்படுவது முக்கியம். இந்தப் பயிர்களைக் குறித்துச் செய்யப்படும் அறிவியல்ரீதியிலான மதிப்பீடுகளில் மரபணு மாற்றப் பயிர்களை முன்மொழிவோரின், குறிப்பாக பெருநிறுவனங்களின், தலையீடு ஏதும் இருக்கக் கூடாது என்பது முக்கியம். முதலில், இதுபோன்ற விஷயங்களை அணுக நேர்மையும் நம்பகத்தன்மையும் மிக்க - அனுமதி வழங்குவதில் கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் மறுப்பதோ, கேள்வி ஏதுமின்றி எல்லாவற்றையும் அனுமதிப்பதோ இல்லாத, வெளிப்படையான - ஓர் ஒழுங்குமுறை அமைப்பு இங்கு இருக்கிறதா?

இந்தியாவுக்கான உயிரிதொழில்நுட்ப ஒழுங்குமுறைச் சட்டம்-2013, நடப்பு மக்களவையின் ஆயுட்காலத்தோடு காலாவதியாகிறது. ஆனால், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் ஆகிய துறை களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு மேற்குறிப்பிட்ட சட்டத்தைப் பற்றி அளிக்க வேண்டிய அறிக்கைகூட இன்னும் வந்தபாடில்லை. மறுபுறமோ, அரிசி, கோதுமை, சோளம், கரும்பு மற்றும் சில காய்கறி வகைகள் ஏற்கெனவே வெள்ளோட்டத்தில் இருக்கின்றன. எனில், அரசு சொல்லவரும் சேதி என்ன? ​

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in