

தேசிய அளவில் நடத்தப்படும் மருத்துவப் படிப்பு களுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு (நீட்) தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. மே 7-ல் நடக்கவிருக்கும் இந்தத் தேர்வைப் பற்றி தமிழக மாணவர்களிடம் இருக்கும் குழப்பத்தையும் பதற்றத்தையும் நீக்குவதில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. இந்தத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப் பட்டிருக்கிறது. டெல்லி சென்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்துப் பேசிவிட்டுவந்திருக்கிறார். ஆனால், தமிழகத்துக்கு விலக்களிக்கப்படும் சமிக்ஞைகள் தெரியவில்லை. “தற்போது தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது; தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி, பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறிவிட்டார். தேர்வுக்கான நடவடிக்கைகள் அடுத்தடுத்து எடுக்கப்பட்டுவரும் நிலையில், தமிழக அரசோ மௌனம் காக்கிறது. ஆளும் கட்சியின் முழுக் கவனமும் இப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் உள்கட்சி சண்டையிலும் நிலைகொண்டிருக்கிறது.
வெவ்வேறு சமூக, பொருளாதாரப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களை ஒரே சட்டகம் வழியாகப் பார்க்கும் முயற்சியாகவே இந்தத் தேர்வு பார்க்கப்படுகிறது. முக்கியமான கேள்வி இதுதான்: “தமிழகத்தில் ஆகப் பெரும்பான்மை மாணவர்கள் மாநில அரசின் பாடத்திட்டப்படி படித்துவரும் சூழலில், மத்தியப் பாடத்திட்டப்படியான தேர்வை அவர்கள் எப்படி திடீரென எதிர்கொள்ள முடியும்?” தமிழகத்துக்குக் கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட விலக்குக்கான காரணங்களில் இன்றைக்கும் எந்த மாற்றமும் இல்லாத சூழலில், இந்த ஆண்டு தேர்வை எப்படி மாணவர்கள் மீது திணிக்க முடியும் என்பதையே இதை விமர்சிக்கும் கல்வியாளர்கள் கேட்கிறார்கள். ‘தமிழ் உட்பட எட்டு மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம்’ என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், தேர்வுக்காகப் படிக்க ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டும்தான் பாடப் புத்தகங்கள் இருக்கின்றன என்பதையும் கல்வியாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டிவருகின்றனர்.
கல்வித் துறையில் தமிழக அரசு காட்டிவரும் நீண்ட கால அலட்சியத்துக்கும் இந்தப் பிரச்சினையில் முக்கியமான பங்கிருக்கிறது என்றாலும், இப்போது தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் மாணவர்களை அதன் பொருட்டு பலிகடா ஆக்க முடியாது. முதலாவதாக, மத்திய அரசுடன் கடுமையாக வாதிட்டு தமிழகத்துக்கு விலக்கு பெற தமிழக அரசு முனைய வேண்டும்; இரண்டாவதாக, கையோடு தேசிய பாடத்திட்ட சவாலை எதிர்கொள்ளத் தக்க வகையில் மாநிலப் பாடத்திட்டத்தைத் தரமானதாக மாற்ற முனைய வேண்டும். பெயரளவு எதிர்ப்பு நடவடிக்கையின் வழியாக தமிழில் தேர்வுக்கான புத்தகங்கள்கூட இல்லாத சூழலில் மாணவர்களைத் தேர்வை நோக்கித் தள்ளுவது மோசமானது. தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.