திசைமாறக் காரணம் என்ன?

திசைமாறக் காரணம் என்ன?
Updated on
1 min read

கடந்த ஆண்டு வெளியான ஒரு தரவு டெல்லியில் மட்டும் 10,000 போலி கால்சென்டர்கள் இயங்கிவருவதாகத் தெரிவிக்கிறது. இந்த கால்சென்டர்களின் பிரதானமான செயல்பாடு, போலிப் பணப் பரிவர்த்தனை மோசடிகள்தான்.

பிரிட்டனைச் சேர்ந்த 60,000 பேரிடமிருந்து இந்த மோசடிகள் மூலம் ரூ. 100 கோடி அளவில் பணம் பெறப்பட்டதாகக் கடந்த ஆண்டு ‘டெய்லி மெயில்’ என்ற பத்திரிகை தெரிவிக்கிறது. இந்த கால்சென்டர்கள் தினமும் பல்லாயிரக் கணக்கானவர்களை மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசிகள் மூலமாகவும் தொடர்புகொள்கின்றன.

பெரும்பாலானவர்கள் விழிப்பாக இருந்தாலும், தினமும் நூற்றுக் கணக்கானவர்கள் இதில் ஏமாந்துவிடுகிறார்கள். அமெரிக்க வங்கிகளில் கடன்பெற்றுவிட்டுத் திருப்பிச் செலுத்தாதவர்கள் இந்த கால்சென்டர்களின் இலக்குகளில் முக்கியமானவர்கள். அவர்களுடைய தனிப்பட்ட தரவுகள் இந்த கால்சென்டர் நிறுவனங்களுக்கு எப்படிக் கிடைக்கின்றன?

நாம் வாழும் காலம் அந்தரங்கம் என்று எதுவும் எஞ்சாத காலம். எல்லாருடைய தனிப்பட்ட தரவுகளும் அரசாங்கங்கள் மூலமும் சமூக வலைத்தளங்கள் மூலமும் பெருவாரியாகத் திரட்டப்படுகின்றன. இந்தத் தகவல்களைக் கையாளும் பணியில் இருப்பவர்களில் சிலர் கருப்பு ஆடுகளாக மாறினாலே போதும் தகவல்கள் கசிவதற்கு.

இந்த கால்சென்டர்களால் ஏமாற்றப்படுபவர்களின் அவலத்துக்கு இணையானது, அங்கே கால்சென்டர்களில் பணிபுரிபவர்களின் அவலம். கால்சென்டர்களில் பணிபுரிபவர்களில் பெரும்பான்மையினர் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று சமீபத்திய தரவொன்று சொல்கிறது.

இந்தியாவில் கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலங்களில் மணிப்பூரும் ஒன்று: 79.21%. இது தேசிய சராசரியான 74.04 சதவீதத்தைவிட அதிகம். வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை இதற்கு நேரெதிர் நிலைதான். 2009-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி மணிப்பூரின் மொத்த மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் அதாவது, கிட்டத்தட்ட ஏழு லட்சம் பேர் வேலையின்றித் தவிக்கிறார்கள். இப்படித்தான் இருக்கிறது வட கிழக்கு மாநிலங்களின் நலனில் மத்திய அரசுகள் காலங்காலமாகக் காட்டிவந்த அக்கறையின் லட்சணம்.

மறுபக்கம் பார்த்தால், இந்தியாவிலேயே அதிக அளவில் அதாவது, 20 பேருக்கு ஒருவர் என்ற அளவில் மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் காணப்படுகின்றனர். இந்தப் பிரச்சினைகளிலிருந்தெல்லாம் விடுபடு வதற்காக வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிப்போகும்போது அங்கே அவர்களுக்குக் கிடைப்பது புறக்கணிப்புதான். ஆனால், மோசடி கால்சென்டர்கள் போன்ற நிறுவனங்கள் வட கிழக்கு மாநிலத்தவர்களின் நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களை வாரியணைத்துக் கொள்கின்றன. வட கிழக்கு மாநிலத்தவர்கள் ஆங்கிலவழிக் கல்வி பயின்றவர்கள் என்பதும் ஒரு கூடுதல் அம்சம்.

இந்தியாவில் மாநிலங்களுக்கிடையில் காணப்படும் சமச்சீரின்மை தான் வெவ்வேறு பிரச்சினைகளாக உருவெடுக்கிறது. ஓர் அரசு, தனது மக்களின் நலனைப் புறக்கணிக்கும்போது அந்த அரசின் மேலாண் மையை எதிர்ப்பதிலும் புறக்கணிப்பதிலும் மக்கள் ஈடுபடுவதைத் தவிர்க்க முடியாது. மோசடி கால்சென்டர்களில் வேலைசெய்வது முறையற்றது என்பதைத் தெரிந்தே அவர்கள் அதைச் செய்கிறார்கள் என்பது விரக்தியினாலும் அரசின் மீதுள்ள வெறுப்பினாலும்தான். இந்த உண்மையை எப்படி எதிர்கொள்ளப்போகிறது அரசு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in