

சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் பொருளாதாரத் தரவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. மொத்தவிலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்க விகிதம், கடந்த பிப்ரவரி மாதத்தில் குறைந்திருக்கிறது.
கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாதபடி 4.48% ஆகக் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்த விகிதம் 7.28% ஆகவும், 2014 ஜனவரியில் 5.50% ஆகவும் இருந்திருக்கிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான சில்லறை விலை பணவீக்க விகிதத்திலும் இது எதிரொலித்திருக்கிறது.
உணவு தானியங்கள், காய்கறிகள், எரிபொருட்கள் ஆகியவற்றின் விலை குறைந்திருப்பதன் விளைவுதான் இதெல்லாம். பிப்ரவரி மாத பணவீக்க விகிதம் குறைந்திருந்தாலும், ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கையில் - குறிப்பாக வட்டி விகிதத்தில் - அது எந்தவித மாற்றத்தையும் கொண்டுவந்துவிடாது. ஏப்ரல் முதல் நாளில் புதிய கடன் கொள்கை அறிவிக்கப்படவிருக்கிறது.
ரிசர்வ் வங்கி சமீபகாலமாகத் தன்னுடைய கடன் கொள்கையை மொத்தவிலை குறியீட்டெண்ணின் அடிப்படையில் அல்லாமல் சில்லறை விலை குறியீட்டெண் அடிப்படையிலேயே தீர்மானித்துவருகிறது. விலைவாசி விகிதம் பிப்ரவரி மாதத்தில் குறைந்திருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இன்னமும் அது அதிகம்தான் என்பது தெளிவாகிறது. எனவே, உடனடியாகப் பெரிய சலுகைகளை நாம் எதிர்பார்த்துவிடக் கூடாது.
ரிசர்வ் வங்கியின் உயர் நிலைக் குழுவும் சில்லறை விலை அடிப்படையில்தான் இனி பணக்கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்றும் சில்லறை விற்பனை பணவீக்க விகிதத்தை 4% ஆக மூன்று ஆண்டுகளுக்குப் பராமரிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது. இந்த மூன்று ஆண்டுகளில் ஏதேனும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இந்த விகிதம் 2% கூடினாலும் குறைந்தாலும் கவலை வேண்டாம் என்றும் கூறியிருக்கிறது.
விளைச்சல் அதிகமான பருவம் இது என்பதால், காய்கறிகளின் விலை குறைந்தது. இப்போது மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் பருவம் தவறி மழை பெய்து பயிர்ச் சேதம் கடுமையாக ஏற்பட்டிருப்பது காய்கறி, பழங்கள், உணவு தானியங்கள் ஆகியவற்றின் விளைச்சலிலும் விலையிலும் விரைவில் எதிரொலிக்கும். எனவே, பணவீக்க வீதம் தொடர்ந்து இப்படியே குறைந்துகொண்டிருக்காது.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது, பிப்ரவரி மாதப் பணவீக்க விகிதம் அரசுக்கு மகிழ்ச்சியைத் தந்துவிடாது. சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்க விகிதம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே இப்போது அதிகம். சில்லறை விற்பனை விலை அதிகரித்தால், அது பணவீக்கத்தை அதிகப்படுத்துவதுடன் ஏழைகளையும் மத்திய தர வர்க்கத்தினரையும் கடுமையாகப் பாதிக்கும்.
நடப்பாண்டில் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5%-ஐத் தாண்டாது என்று தெரிகிறது. பணவீக்க விகிதம் இப்படி அதிகரித்தபடியே இருந்தால், வளர்ச்சிக்குச் சாதகமான நடவடிக்கைகளை அரசுகளால் எடுக்க முடியாது. மாறாக, வங்கிகள் தரும் கடன்கள் மீதான வட்டியை உயர்த்தத்தான் வேண்டியிருக்கும்.
விலைவாசி குறையுமா அல்லது உற்பத்தி அதிகரிக்குமா என்பதெல்லாம் பருவ நிலையையும் அடுத்துவரும் அரசு எடுக்கப் போகும் நடவடிக்கைகளையும் பொறுத்தே அமையும் என்பதில் சந்தேகமில்லை.